உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத ஒதுக்கீடு சட்டத்தை நான்கே நாட்களில் அவசர அவசரமாகக் கொண்டுவந்தது ஒன்றிய ஆட்சி. ஆண்டுக்கு ரூ.8 இலட்சத்துக்கு குறைவான வருமானம் நிர்ணியிக்கப்பட்டது. பொய் சான்றிதழ் தந்து பார்ப்பனர்கள், மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்துள்ளார்கள் என்பது அம்பலமாகியுள்ளது. எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற இந்த உயர்ஜாதி 120 ஏழைகள், ஆண்டுக்கு ரூ.90 லட்சம் நன்கொடை தந்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மேல் பட்டப் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இதை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு அம்பலப்படுத்தியுள்ளது.
அய்.அய்.டி, அய்.அய்.எம். போன்ற ஒன்றிய ஆட்சியின் கீழ் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு பட்டை நாமம் போட்டுள்ள செய்தி ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது.
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாணவர் சங்கத் தலைவர் கவுடா கிரன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ள புள்ளிவிவரங்களை ‘இந்து’ ஆங்கில நாளேடு (டிசம்பர் 2, 2024) வெளியிட்டுள்ளது. இது இந்த ஆண்டு செப்டம்பர் 2024 நிலவரம்.
பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம், பட்டியல் பிரிவுக்கு 15 சதவீதம், பழங்குடியினருக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடும் பின்பற்ற வேண்டும் என்பது சட்டம்.
ஆனால் பொதுப் போட்டியில் இடம்பெறும் பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதியினர் மட்டும் 90 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. இரண்டு அய்.அய்.டி.களிலும், மூன்று அய்.அய்.எம்.களிலும் பார்ப்பன உயர்ஜாதிப் பேராசிரியர்கள் 90 சதவீதத்துக்கும் அதிகம்.
இந்தூர் அய்.அய்.டி.யில் மொத்தமுள்ள 109 பேராசிரியர்களில் பார்ப்பனர், உயர்ஜாதியினர் எண்ணிக்கை 106 (97.2 சதவீதம்) பட்டியலினம் , பழங்குடிப் பிரிவைச் சார்ந்த ஒரு பேராசிரியர் கூட இல்லை.
உதய்ப்பூர் அய்.அய்.எம் நிறுவனத்தில் பார்ப்பன உயர்ஜாதியினர் 90 சதவீதத்துக்கும் கூடுதல். லக்னோவில் 95 சதவீதம். 6 அய்.அய்.எம்களில் பட்டியல் பிரிவோ, பழங்குடி பிரிவோ ஒருவர் கூட இல்லை. பெங்களூரு அய்.அய்.எம் நிறுவனத்தில் 85 சதவீதம் பார்ப்பனர், இங்கு இட ஒதுக்கீடு உரிமைக் கேட்டுப் போராட்டமே நடந்தது.
அய்.அய்.டி. மும்பை, அய்.அய்.டி. காரக்பூரில் 700 பேராசிரியர் பதவிகளில் 90 சதவீதம் பேர் பார்ப்பனர் – உயர்ஜாதியினர்.
ஒட்டுமொத்தமாக 21 அய்.அய்.டி.களில் பொதுப்பிரிவு, அதாவது பார்ப்பன உயர் ஜாதியினர் 80 சதவீதத்துக்கும் அதிகம். பட்டியல் பிரிவு 6 சதவீதம் (தரப்பட வேண்டியது 15 சதவீதம்) பழங்குடியினர் 1.6 சதவீதம் (தரப்பட வேண்டியது 7.2 சதவீதம்)
7 அய்.அய்.எம்.களில் 250 பதவிகள் நிரப்பப்படவில்லை. இதில் 88 பிற்படுத்தப்பட்டோருக்கும், 54 பட்டியலி னத்தவருக்கும், 30 பழங்குடியினருக்கும் தரப்பட வேண்டும்.
ஒவ்வொரு நிறுவனத்திலும் இட ஒதுக்கீட்டு அளவீடுகளை தனித்தனியாக விரிவாகத் தந்துள்ளது இந்து ஆங்கில நாளேடு. இதுதான் மோடி ஆட்சியின் சமூகநீதி அவலம்.
- விடுதலை இராசேந்திரன்