மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வரும் கல்வியாண்டி லிருந்தே முழுமையாக அமுல்படுத்து வது உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளை வைத்து கடிதம் நடத்திய ‘சம்பூகன் சமூக நீதி’ பயணத்தின் ஒரு கட்டமாக கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் அவர்கள் மேட்டூர் பொதுக் கூட்டத்தில் 10.11.2006 அன்று பேசியதிலிருந்து:
கோரக்பூர், மைசூர் போன்ற சமஸ்தானங்கள் தங்களுக்கு உட்பட்ட சிறு நிலப் பகுதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முதன்முதலில் இடஒதுக்கீடு வழங்கிய பெருமையைப் பெற்றன.
இப்போது இருக்கின்ற முழு தமிழ்நாடு, கொச்சி, திருவாங்கூர் நீங்கலாக இருந்த கேரளப்பகுதி, சுதேசி மன்னர்கள் ஆட்சியைத் தவிர இருந்த மைசூர் ராஜ்யம், ஆந்திர மாநிலத்தின் முழுப் பகுதி ஆகிய இவைகள் அடங்கிய அன்றைய சென்னை மாகாணத்தில் (ராஜதானி) தான் ஒரு அரசின் சார்பாக இடஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. 1922-லேயே நீதிக்கட்சி இடஒதுக்கீட்டைப் பற்றி மிக விரிவாக விவாதித்தது; சட்டம் கொண்டு வர விரும்பியது. இருந்தாலும், சில ஆண்டுகள் கழித்து தான் அது நடைமுறைக்கு வந்தது.
நீதிக்கட்சியின் ஆதரவுடன் திரு. சுப்பராயன் தலைமையில் அமைந்த சுயேட்சை ஆட்சியில் இருந்த திரு. முத்தையா (முதலியார்) தான் துணிச்சலாக அந்தக் காரியத்தில் இறங்கினார். அவர் மிகச் சிறிய துறையான தான் அமைச்சர் பதவி வகித்த பத்திரப் பதிவுத் துறையில் அதைச் செயல்படுத்தினார்.
அதன் பிறகு, இடஒதுக்கீடு நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் அரசின் எல்லாத் துறைகளுக்கும் பரவலாக்கப்பட்டது. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு, இன்று 69 விழுக்காடு என்ற அளவில் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு இருக்கிறது. இது போதுமா என்றால், கண்டிப்பாக போதாது என்பதே உண்மை. பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இனம் ஆகிய மக்களின் விகிதாச்சாரத்திற்கு இது மிகவும் குறைவாகவே உள்ளது.
மய்ய அரசால் உயர்கல்வியில் அறிவிக்கப்பட்டிருக்கின்ற பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காது இடம் முழுமையாக வரும் கல்வியாண்டிலேயே கொடுக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்குள்ள இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றத்தால் திணிக்கப்பட்டுள்ள பொருளாதார அளவு கோலை மய்ய அரசு நீக்க வேண்டும்.
இதன் மூலம் இடஒதுக்கீட்டின் பயனை அம்மக்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதுதான் பெரியார் திராவிடர் கழகத்தின் தற்போதைய தலையாய கடமையாக இருக்கிறது. இந்தப் பணியை நிறைவேற்ற மய்ய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பொருட்டுதான் தமிழ்நாட்டின் நான்கு மூலைகளிலிருந்தும் புறப்பட்டு வழி நெடுக பெரியார் திராவிடர் கழகம் தனது பிரச்சாரத்தைச் செய்து கொண்டு வருகிறது.
தமிழினத்தை மீட்க, தமிழினத்தின் மேல் பார்ப்பனர்களால் ஏற்றி வைக்கப் பட்டுள்ள இழிவு துடைக்கப்பட, நலிவு நீங்க இடஒதுக்கீடு மிகப் பெரிய அளவில் கை கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மாநில, மய்ய அரசுகள் ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாக சட்ட வரைவையோ, சட்டத் திருத்தத்தையோ கொண்டு வருகிறபோது மிகவும் ஆத்திரப்பட்டு பார்ப்பனர்கள் அதை எதிர்ப்பதற்கு இதுவேதான் காரணம். தங்கள் இனத்திற்காக வாதாடக்கூடியவர்கள், ஆத்திரப் படக் கூடியவர்கள், போர்க் குணம் கொண்டு போராடக் கூடியவர்கள், முழு மூச்சோடு அதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடியவர்கள் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் உலக வரலாற்றிலேயே இருக்க முடியாது.
ஒரு சிறு சம்பவம் பார்ப்பனர்களை பாதிக்கிறதென்றால், அதை மிகப் பெரியதாக ஆக்கி, அதனால் பாதிக்கப்படுகின்ற பார்ப்பனரல்லாதவர்கள் எத்தனை லட்சம் பேர் என்றாலும் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தங்கள் இனத்திற்கு வேண்டிய, தாங்கள் அனுபவிக்கின்ற பலன் கொஞ்சம்கூட குறையக் கூடாது என்பதற்கு எவ்வளவு இழிவான காரியங்களையும் சிறிதும் தயக்கமின்றி செய்வது தான் பார்ப்பனர்களின் குணம்.
மத்திய அரசின் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வி.பி.சிங் அறிவித்தார். இன்று வரையில் அதன்படி இடம் நிரப்பப்படுவதில்லை. ஏனென்றால், முக்கிய அதிகாரிகள் அத்தனை பேரும் டில்லியிலும் சரி, மற்ற மாநிலங்களின் தலைநகர்களிலும் சரி பார்ப்பனர்களும் அவர்களின் அடிவருடிகளான மற்ற உயர்சாதிக்காரர்களும் தான் இருக்கிறார்கள்.
இந்தியா முழுக்க உள்ள பார்ப்பனர்களை உள்ளடக்கிய உயர்சாதிக் காரர்கள் சராசரியாக 10 விழுக்காடு தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை அவர்கள் வெறும் 3 விழுக்காடு தான். ஆனால், மிகச் சிறுபான்மையினரான இவர்கள் மய்ய அரசில் இன்றும் 70 விழுக்காடு முக்கிய இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மய்ய அரசில் பிரிவு 3, பிரிவு 4 இல் தான் நம்மாட்கள் இருக்கிறார்கள். மீத முள்ளது அத்தனையும் ஆண்டு அனுப வித்து பலனை அடைபவர்கள் பார்ப் பனர்கள் தான். சென்னை அய்.அய்.டி.யில் உள்ள நானூறு பேராசிரியர்களில் முன்னூறுக் கும் மேற்பட்ட இடங்களை பார்ப்பனர் களும், உயர்சாதியினரும்தான் அனுபவிக் கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் வெறும் மூன்று பேர் தான். பழங்குடியினத்தவர் சுத்தமாக இல்லை. இது போன்ற அக் கிரமம் உலகில் வேறு எங்காவது உண்டா?
சென்னை அய்.அய்.டி. ஏறத்தாழ ஆயிரத்து முந்நூறு ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. நம் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் போன்று நினைத்து விடா தீர்கள். ஒரு சிறிய மாதிரி நகரத்தை உருவாக்கக்கூடிய அளவு பரப்பு கொண்டது. சென்னை அய்.அய்.டி. துணை நகரம் உருவாக்க இப்போது வேறு வேறு இடங்களை பார்க்கிறார்களே அது தேவையே இல்லை. சென்னை நகரத்தின் கால்பாகத்தை அங்குகண்டிப்பாக உருவாக்க முடியும். அவ்வளவு பெரிய இடத்தைக் கொண்டது. நவீனக் கட்டடங்களைக் கொண்டது. பாதிக்கும் மேற்பட்டவை குளிரூட்டப்பட்ட கட்டடங்கள். எல்லா வசதிகளும் அங்கு உண்டு.
இப்படிப்பட்ட இடத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வெறும் பதினோரு பேர்தான் அங்கு படிக்கிறார்கள். பழங்குடியினத்தைச் சார்ந்தவரும் எவரும் இல்லை. நம் இனத்தைச் சார்ந்த இந்த மாணவர்களுக்கு உதவி செய்தார் என்ற காரணத்திற்காக அங்கு பணியாற்றும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சார்ந்த கணிதப் போராசிரியர் வசந்தா கந்தசாமிக்கு இன்று வரையில் அய்.அய்.டி.யில் மிகுந்த தொல்லைக் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள்.
முதல்வர் டாக்டர் கலைஞர், வசந்தா கந்தசாமியின் போராட்ட குணத்தை அங்கீகரிக்கும் பொருட்டு அவருக்கு ‘கல்பனா சாவ்லா’ விருது வழங்கியது மிகச் சிறப்பான அம்சம். வசந்தா கந்தசாமியை ஏறிட்டுப் பார்க்க ஆளே கிடையாது. அவரிடம் பேசவே பயந்தார்கள். பெரியார் திராவிடர் கழகம் தான் தொடர்ந்து ஆறு வருடங்களாக அவருக்காகப் போராடியது.
அய்.அய்.டி.யின் உயர் பதவியில் இருக்கும் பார்ப்பனர்களின் வீடு இருக்கும் பகுதிகளில் எல்லாம் தெருத் தெருவாக கூட்டம் போட்டு, பார்ப்பன கும்பலைப் பற்றி மக்களிடம் தெரியப்படுத்திய பிறகுதான் வசந்தா கந்தசாமிக்கு ஓரளவுக்கு தொல்லை கொடுக்காமல் பார்ப்பனர்கள் விட்டிருக்கிறார்கள். இது தான் பார்ப்பனர்களின் நடைமுறை.
சில பேர் பார்ப் பனர்கள் பாவம் என்று நினைக்கிறார்கள். நாம் கொஞ்சம் கண்டு கொள்ளாமல் இருந்தால் பார்ப்பனர்கள் நம் கழுத்தைப் பிடிப்பார்கள். நாம் சற்று நிமிர்ந்தால் நம் காலை அவர்கள் தொடுவார்கள். பார்ப்பனர்களுக்கு கழுத்தைப் பிடிப்பதும், காலைப் பிடிப்பதும் இரண்டும் சமம்.
பெரியார் சொன்னார்: ரகளையோ, ரத்த காயமோ பார்ப்பனர்களுக்கு வேண்டாம் என்று எங்களைப் போன்றவர்கள் நினைக்கிற வகையில் தான் பார்ப்பனர் களுக்கு இலாபம். எனக்குப் பிறகு வருகிறவர்கள் பார்ப்பனர்களை சும்மா விடமாட்டார்கள். பார்ப்பனர்களே! நீங்கள் வாழை இலை போன்றவர்கள்.
பார்ப்பனரல்லாத மக்களாகிய நாங்கள் முள் செடி போன்றவர்கள். வாழை இலை முட்செடி மீது விழுந்தாலும், முட்செடி வாழை இலை மீது விழுந்தாலும் பாதிப்பு வாழை இலைக்குத்தான் என்று எச்சரிக்கை செய்தார். ஆனால் பார்ப்பனர்கள் மட்டம் மாறவே இல்லை என்றார் ஆனூர் செகதீசன்.