கழகத்தின் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளமதி, 23 (வன்னியர்), கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்த செல்வன், 25 (அருந்ததியர்) ஆகியோர் ஒருவரையொருவர் காதலித்தனர். இவர்களின் சுயமரியாதைத் திருமணம் காவலாண்டியூரில் 09.03.2020 அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவலாண்டியூர் ஈஸ்வரன் தலைமையில், கழகத் தோழர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
ஜாதியை காரணம் காட்டி பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காத தாலும், அச்சுறுத்தலில் ஈடுபட்டதாலும் கழகத் தோழர்களே திருமணம் செய்த இணையரை பாதுகாப்பாக வைத்திருந்தனர். இதனையறிந்த மணமகள் உறவினரான ஜாதி வெறிக்கும்பல் 40க்கும் மேற்பட்டோர் 9.03.2020 அன்று சுமார் 10 மணியளவில் கழகத் தோழர் காவலாண்டியூர் ஈசுவரன் வீட்டிற்குள் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து அவரைக் கடுமையாக தாக்கி கத்திமுனையில் கடத்திச் சென்றனர்.
அதேபோல வேறு இடத்தில் பாது காப்பாக தங்க வைக்கப்பட்டிருந்த இணையர்களையும் தேடிச் சென்று பலவந்தமாக கடத்திச் சென்று, மூவரையும் அடையாளம் தெரியாத பகுதிக்கு அழைத்துச் சென்று கடுமையாகக் தாக்கினர். மூவரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் இரவில் கடத்திச் சென்றனர்.
மூவரும் கடத்தப்பட்ட தகவலறிந்து திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் உடனடியாக கொளத்தூர் காவல் நிலையத் தில் குவிந்தனர். காவலாண்டியூர் ஈஸ்வரன் மற்றும் இணையர்களை உடனடியாக மீட்க வேண்டும், கடத்தலில் ஈடுபட்ட ஜாதி வெறியர்களை கைது செய்ய வேண்டுமென கொளத்தூர் காவல் நிலையத்தை முற்றுகை யிட்டு கழகத் தோழர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர். திருப்பூர் நிகழ்வுகளை முடித்துக் கொண்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணியும் நள்ளிரவே காவல் நிலையம் விரைந்தார்.
இதன் விளைவால் திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன் மற்றும் மணமகன் செல்வனை நள்ளிரவுக்குப்பின் போலீசார் மீட்டனர். மணமகள் இளமதி ஜாதி வெறிக்கும்பலிடம் இருந்து மீட்கப்படவில்லை. இளமதியை மீட்கக்கோரி கொளத்தூர் காவல் நிலையத் தில் கழகத் தோழர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் கழகத் தோழர்கள் தாக்குதல் சம்பவம் நடந்த 09.03.2020 நள்ளிரவு முதல் அடுத்த நாள் காலை வரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராடியதன் விளைவாக மணமகன் செல்வன் கொடுத்த புகாரின் அடிப்படை யில் கொலை முயற்சி, ஆள் கடத்தல், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளமதியின் தந்தை, பெரியப்பா, மாமா உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டு தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் மற்றும் கொலை முயற்சி, ஆள் கடத்தல்,கொள்ளை ஆகிய குற்றங்களுக்காக மணமகன் செல்வன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொளத்தூர் காவல் நிலைய குற்ற எண் 49/2020 ன் படிSC/ST (PoA) Act 3 (1) R.S. 3(2) V -341, 363, 365, 323, 342, 379, 506(2) - பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர்.
கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவலாண் டியூர் ஈஸ்வரன் கொடுத்த புகாரில் கொளத்தூர் காவல் நிலைய குற்ற எண் 48/2020 ன்படி 147, 448, 323, 365, 342, 379, 506(2) ஆகிய பிரிவுகளிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 18 பேரும் சிறையில் அடைக்கப்பட் டார்கள். மணமகள் இளமதியை நேரடியாக நீதிமன்றத்திற்குத் தான் அழைத்து வந்தார்கள்.
தொடர்ந்து, ஜாதி வெறியர்களின் போக்கைக் கண்டித்து, 11.03.2020 அன்று சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஒரு வருடம் ஏழு மாதங்கள் கழித்து, 14.10.2021 அன்று இளமதி - செல்வன் ஜாதி மறுப்பு இணையர் வாழ்வில் இணைந்தனர். பெற்றோரின் பிடியிலிருந்த இளமதி - ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு கணவர் செல்வனுக்கு அலைபேசி வழியாக குரல்வழித் தகவல் செய்தி ஒன்றை அனுப்பி, “தனக்கு பெற்றோருடன் இருக்க விருப்பமில்லை; தங்களிடம் வரவே விரும்புகிறேன்” என்று கூறினார். அத்தகவலை ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி.சசிமோகன் அவர்களுக்கு செல்வன் நேரில் அளித்தார். உடனே காவல்துறை அதிகாரி பெண் வீட்டுக்கு காவல்துறையினரை அனுப்பி, அவரை அழைத்து வரச் செய்து தனி அறையில் தங்க வைத்தார். அடுத்த நாள் பெண்ணிடம் கேட்டபோது நான் என் கணவருடன் தான் செல்வேன்; பெற்றோரிடம் திரும்பப் போவதில்லை என்று உறுதியாக தெரிவித்தார். ஈரோடு கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்த வழக்கில் தீவிர ஆர்வம் காட்டி வாதிட்ட வழக்கறிஞர் ப.பா. மோகன், ஈரோடு இரத்தினசாமி, ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி (கோபி), நங்கவள்ளி கிருஷ்ணன், உள்ளிட்ட ஏராளமான தோழர்களும்திரண்டிருந்தனர். பெண் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் வாழ்த்து முழக்கங்களுடன் வரவேற்று, ‘ஜாதி ஒழிக; ஜாதி ஆணவப் படுகொலை களை முறியடிப்போம்; பெரியார் வாழ்க!’ என்று முழக்கமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம், பெற்றோர்களே சம்மதித்து அனுப்பி வைத்ததாகவும் இளமதி பேட்டியளித்தார். “நாங்க இரண்டு பேரும் காதலித்தோம், ஆனால் எங்கள் வீட்டில் ஜாதியை காரணம் காட்டி வேண்டாம் என்றார்கள். நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். அப்போதும் எங்களை பிரித்து விட்டார்கள். தற்போது அப்பா, அம்மா இருவரும் சம்மதத்தோடு தான் என்னை அனுப்பி வைத்தார்கள். பெற்றோர் சம்மதித்தாலும் ஜாதியமைப்பினரும் ஜாதி உறவினருமே அச்சுறுத்தி எங்களைப் பிரித்தனர். ஒன்றரை ஆண்டுகள் கழித்து செல்வனுடன் இணைவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இருவரும் சேர்ந்து வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வோம்” என்று அவர் மகிழ்ச்சியுடன் பேட்டியளித்தார்.
இணையர்களின் வழக்கைத் வழக்கறிஞர் ப.பா.மோகன் தொடர்ந்து நடத்தினார்.
கழகத்துக்கு நன்றி தெரிவித்து செல்வன் முகநூல் பதிவு
மணமகன் செல்வன், கழகத்தின் செயல்பாடுகளை முகநூல் வழியாகத் தொடர்ந்து கண்காணித்து, பெரியாரியல் இயக்கங்களிலேயே ஜாதி எதிர்ப்புக் களத்தில் நிற்கும் சரியான இயக்கம் இது ஒன்று தான் என்று முடிவுக்கு வந்த பின் செல்வனும் அவரது தம்பியும், கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம இளங்கோவனை சந்தித்து கழகத்தில் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து கழகத்தின் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று வந்திருக்கிறார். அதேபோல அவரது ஜாதி மறுப்பு காதலுக்கு ஜாதிவெறியர்களிடமிருந்து பிரச்சினை வந்தவுடன் கழகத் தோழர்களே அவர்களுக்கு அடைக்கலம் தந்து உதவினார்கள். வழக்கு நடத்துவதற்கான முயற்சிகளையும் கழகத் தலைவர் வழியாக கழகமே ஏற்பாடு செய்தது. தலைமைக் கழக உறுப்பினர் காவலாண்டியூர் ஈசுவரன் நள்ளிரவில் வீட்டில் தனியாக இருந்தபோது ஜாதி வெறியர்கள் கடத்திச் சென்று ஒரு பள்ளியில் வைத்து கொடூரமாகத் தாக்கினர். தொடர் போராட்டம் இப்போது வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து இணையரில் ஒருவராகிய செல்வன் கழகத்துக்கு நன்றி தெரிவித்து முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு.
“நாடகக் காதல் தோற்றது. உண்மையான காதல் வென்றது. எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து பெரியாரிய, அம்பேத்காரிய, மார்க்சிய, முற்போக்குத் தோழர்களுக்கும் நன்றிகள். இறுதி வரை எனக்கு உறுதியாக களத்தில் துணை நின்ற தி.வி.க. தோழர்களுக்கும் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அண்ணன் அவர்களுக்கும் வழக்கறிஞர் ஐயா ப.பா. மோகன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
வெல்லட்டும் திராவிடம்! வாழ்க பெரியார்! வாழ்க அம்பேத்கர்! வாழ்க மார்க்ஸ்!”
நேர்மையான காவல்துறை அதிகாரி வி. சசிமோகனுக்கு குவியும் பாராட்டுகள்
காவல்துறையில் சில நேர்மையான அதிகாரிகள் உறுதியுடன் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவர் தான் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி. சசிமோகன். அவர்தான் இப்பிரச்சினையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெண்ணை அழைத்து வரச் செய்து கருத்தைக் கேட்டு, விரும்பியவாறே காதலுடன் அனுப்பி வைத்தார். காவல்துறை அதிகாரி வி.சசிமோகனை அனைவரும் பாராட்டுகிறார்கள். வழக்கறிஞர் ப.பா. மோகன், கழகத் தோழர்களோடு இணைந்து இந்த வழக்கில் மிகுந்த ஆர்வம் காட்டி இருவரையும் இணைத்து வைப்பதில் தொடர்ந்து செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.