தலைநகர் மீட்புப் போரில் திராவிடர் கழகம்

 தமிழரசு கழகத்தைத் தொடங்கிய ம.பொ.சி., மீண்டும் காங்கிரசுக்குள் தன்னை இணைத்துக் கொள்ளவே தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார். இது குறித்து ம.பொ.சி.யே இப்படி எழுதுகிறார். (சென்ற இதழ் தொடர்ச்சி) காங்கிரசிலிருந்து வெளியேறி விடுவதென்று தமிழரசுக் கழகம் எடுத்த தீர்மானத்தின் ஆங்கில நகலை எனது கையெழுத்துடன் நேருஜிக்கு அனுப்பி வைத்தேன்.

அவர், “தமிழரசுக் கழகம் எடுத்த துரதிருஷ்டமான முடிவு எனக்குக் கிடைத்தது” என்று மட்டுமே குறிப்பிட்டு பதில்  எழுதினார். “தமிழரசுக் கழகத்தார் அனுப்பிய ராஜினாமாக்களை ஏற்று பதில் எழுதவேண்டாம்; மேற்கொண்டு அவர்கள் எப்படி நடக்கிறார்கள் என்பதைக் கண்காணித்து வாருங்கள்” என்று நேருஜி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு எழுதியதாகக் கேள்விப்பட்டேன்.

பிரதமர் நேருஜி என்பால் காட்டிய பேரன்பு காரணமாக ஒன்றரையாண்டு காலம் நான் காங்சிரசில் நீடித்திருக்க அவகாசம் கிடைத்தது. (ம.பொ.சி. ‘நேருஜி என் ஆசான்’ பக். 93 முதல் 100 வானதி பதிப்பகம், சென்னை-17) சென்னை நகர் பிரச்சினை 1953 சனவரி முதல் 1953 மார்சு வரை மட்டுமே. இந்தக் காலக்கட்டத்தில் ம.பொ.சி.க்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கும் சுமூக உறவே இல்லை என்பதை அவரே எழுதியுள்ளார். தனக்குப் பெருமை கிடைக்க வேண்டும் என்பதற்காக எல்லோர் மீதும் வீண்பழி சுமத்தி ‘எனது போராட்டத்தில்’ எழுதியுள்ளார்.

அவருடைய ஆட்சிக் காலத்திலே தமிழ் மாகாணம் அமைந்தது. குமரி மாவட்டமும் செங்கோட்டை வட்டமும் கேரளத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டுத் தமிழகத்தோடு சேர்க்கப்பட்டன. தணிகை வட்டமும் ஆந்திரத்திடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டுத், தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. சென்னை நகரம் தமிழகத்திற்கே உரியதாக்கப் பெற்றது.

இவ்வளவுக்கும் பிரதமர் நேருஜிக்கு என்பாலிருந்த அன்பும் காரணமாக இருந்தது என்பதனைத் தமிழ் மக்களுக்கு நான் நினைவூட்ட வேண்டும். ம.பொ.சி. ஒருவருக்காகத் தான் நேருஜி எல்லாம் செய்தாராம். அப்படியானால் தேவிகுளம் பீர்மேடு ஏன் கொடுக்கப்படவில்லையாம். (மேற்கண்ட நூல் பக். 101)

1954 ஜனவரி 17இல் தமிழரசுக் கழகத் தின் சார்பில் ம.பொ.சி. தலைமையில் நடைபெற்ற தமிழர் திருநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் “சென்னையைக் காத்தது ம.பொ.சி. என்று சிலர் நினைக்கிறார்கள். அது வெறும் மாயை.

இராஜாஜிதான் சென்னையைக் காத்தார்” என்று பேசினார். (ம.பொ.சி. ‘நானறிந்த இராஜாஜி’ பக். 325) சென்னை மாநகராட்சியின் சிறப்புக் கூட்டத்தில் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்று நான் பேசினேன். வேடிக்கை பார்க்கப் பெரியக் கூட்டம் கூடியது என்பதெல்லாம் சுத்த பொய். இன்றைக்கும் மாநகராட்சி தீர்மானப் புத்தகத்தில் அந்தச் சொற் பொழிவு உள்ளது.

“இந்த மாமன்றம் பிரதமர் நேரு அவர்கள் 19.01.1953இல் நாடாளுமன்றத்தில் தெலுங்கு பேசும் பகுதியைத் தனி ஆந்திர மாநிலமாக உருவாக்கப்படும் அதில் சென்னை இடம் பெறாது என்று அறிவித்ததற்கு வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறது. சென்னை தமிழ்நாட்டுக்குச் சொந்த மானது. சென்னை தற்காலிகத் தலைநகரமாகக்கூட ஆந்திராவுக்கு இங்கு இருக்கக்கூடாது. அது இரு மாநில மக்களின் உறவுகளைப்பாதிக்கும் என்று சென்னையில் ஆந்திரா தற்காலிகத் தலைநகர் வேண்டும் என்பதற்கு இம் மாமன்றம் எதிர்ப்புத் தெரிவிக்கின்றது.” அந்தக் கூட்டம் 03.01.1953இல் நடை பெற்றது. வேண்டுமென்றே ம.பொ.சி. எனது போராட்டத்தில் கூட்டத் தேதியை எழுதவில்லை.

ஏனென்றால் இவருடைய தீர்மானத்தால் நேரு மனமாற்றம் அடைந்தார் என்று எல்லோரும் நம்ப வேண்டும் என்பதற்காகவே நேரு நாடாளுமன்றத்தில் வாஞ்சுக் குழு அறிக்கையை வைத்துப் பேசியபோது 25.03.1953இல் ஆந்திராவின் தலைநகர், ஆந்திர எல்லைக்குள் அமையும் என்று அறிவித்தார். இந்த இடைப்பட்ட மூன்று மாதத்தில் சென்னை தலைநகர் தொடர்பாக ஏராளமான நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

அனைத்துக் கட்சித் தலைவர்கள் செய்த முயற்சியை எல்லாம் ம.பொ.சி. தன்னுடைய சொந்த முயற்சியாக எழுதிக் கொண்டார். சென்னை தலைநகருக்காக ம.பொ.சி.யின் தமிழகரசுக் கழகமோ, இந்தியத் தேசிய காங்கிரசோ, எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை. திராவிடர் கழகம் மட்டுமே தனித்து நின்றுப் போராடியது. திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் குத்தூசி குருசாமியின் தலைமையில் 5000த்திற்கும் மேற்பட்ட திராவிடர் கழகத்தினர் 22.02.1953 அன்று சென்னைக்கு வந்த குடியரசுத் தலைவர் இராஜேந்திரப் பிரசாதுக்குக் கருப்புக் கொடி காட்டினர்.

குடிஅரசுத் தலைவர் கவர்னர் மாளிகைக்குச் சென்றபின் தமிழர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று அறிவித்தார். அதே நாளில் 22.02.1953 தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் நடத்தி வாஞ்சு அறிக்கைக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

ஆந்திராவின் தற்காலிகத்தலைநகராகக்கூட சென்னையில் இடம் தரக்கூடாது என்று போராட்டம் நடத்தினர். தமிழகத்தின் வடக்கெல்லைப் போராட்டம் மற்றும்  தெற்கெல்லைப் போராட்டத்தில் தமிழகத்திற்குத் துரோகம் இழைத்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினர் சென்னை தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்பதில் உறுதியாக இருந்தனர்.

ஆந்திராவில் இருந்த பொதுவுடைமைக் கட்சியினர் ஆந்திராவில் சென்னையைத் தமிழ்நாட்டுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பரப்புரைச் செய்தனர். தமிழக முதலமைச்சர் இராஜாஜியின் உறுதிப்பாடும், இந்தியத் தேசிய காங்கிரசின் தமிழ்நாடு கமிட்டி சென்னை தலைநகர் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக உறுதியாக இருந்தது. அனைவருடைய முயற்சியால் தான் சென்னை தமிழ்நாட்டுக்கே கிடைத்தது.

(நிறைவு)

Pin It