ஸ்ரீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் கும்பகோணத்தில் பேசிய பேச்சைப் பற்றி 18.8.26- ² ‘சுதேசமித்திரன்’ தனது உப தலையங்கத்தில் ‘அபத்தப் பஞ்சாங்கம்’ என்ற தலைப்பின் கீழ் ஸ்ரீமான் இராமசாமி நாயக்கர் எழுத்தும் பிரசங்கங்களும் வரவர விபரீதமாயிருக்கிறது என்றும், நாயக்கருக்கு சீக்கிரத்தில் கவர்ன்மெண்டு அடிமை முத்திரை போடப்பட்டுவிடும் என்றும், நாயக்கர் பேசுகையில் எவ்வித காரணமில்லாமல் சிறை சென்றதற்கு விசனப்படுகிறேன் என்றும், பிராமண சூழ்ச்சி வலையில் அகப்பட்டுக் கொண்டேன் என்றும் சொன்னதாக எழுதி, இதன் மூலம் நாயக்கருக்கு அசட்டுப் பட்டம் ஏற்பட்டு விட்டதாகவும், நாயக்கரை ஒரு பிராமணனும் ஏமாற்றி சிறைக்கனுப்பவில்லை என்றும் காங்கிரசினால்தான் பனகல் ராஜாவுக்கு மந்திரியானதென்றும், நாயக்கருக்கு ராஜீய உலகில் ஒரு முக்கிய ஸ்தானம் கிடைத்ததென்றும், அப்படி இருக்க, காங்கிரசை இகழ்வது மாதுரு துரோகமென்றும் எழுதுகிறான். இவற்றை நன்றாய் ஆராய்ந்து நாயக்கர் மாதுரு துரோகியா அல்லது ‘மித்திரன்’ கூட்டத்தார் மாதுரு காமியா என்பதை கவனிப்போம்.
இப்பார்ப்பன ‘மித்திரன்’ யோக்கியனாயும் பயங்காளியாயில்லாதவனாயுமிருந்திருந்தால் கும்பகோணத்தில் நாயக்கர் இரண்டரை மணி நேரம் பேசிய பேச்சை கொஞ்சமாவது எழுதியிருக்க வேண்டும். ‘மித்திரனே’ நாயக்கரைப் பற்றி எழுதுகையில் நாயக்கர் வெறும் ஆளல்ல, ராஜீய உலகத்தில் (எந்த விதத்திலோ) ஒரு முக்கிய ஸ்தானம் அடைந்தவர் என்று ஒப்புக் கொள்ளுகிறான். அப்படியிருக்க, அப்படிப்பட்டவர் பேசியதை பிரசுரிக்காமல் விட்டது எவ்வளவு அக்கிரமம் என்பதை வாசகர்களே உணர வேண்டும். நாயக்கர் ஜெயிலுக்குப் போனதைப் பற்றி சொன்ன வார்த்தைகள் என்னவென்றால் இந்த பார்ப்பனர்களை நம்பி சுயராஜ்யத்திற்கு என்று ஜெயிலுக்குப் போனது முட்டாள்தனமென்று உணருவதுடன் இப்படிப்பட்டவர்களை நம்பி ஜெயிலுக்குப் போனோமே, இப்போது அதன் பலன்கள் சுயராஜ்யத்திற்கு உதவாமல் பார்ப்பனராட்சிக்கு உதவுவதோடு பார்ப்பனரல்லாதாரின் அடிமைத்தனத்திற்கும் நிரந்தர தாழ்வுக்கும் உபயோகப்படும்படியாய் விட்டதே என்று வருத்தப்படுவதுடன் இக்காரியத்திற்கு நாமும் துணை நின்றோமே என்று நினைத்து வெட்கப்பட வேண்டியதாயுமிருக்கிறது என்றே பேசினார். அல்லாமலும் இனியும் இந்த பார்ப்பன ஆதிக்கமிருக்கும் வரை சுயராஜ்யத்திற்கென்று ஜெயிலுக்குப் போவது பயித்தியக்காரத்தனமாய் முடியுமென்றே இன்னமும் சொல்லுகிறோம்.
ஏனெனில் ஸ்ரீமான்கள் நாயக்கர், நாயுடு முதலிய பல ஆயிரக்கணக்கான பேர்கள் நமது நாட்டில் ஜெயிலுக்குப் போனதை சொல்லிக் கொண்டு அதன் பலனை நமது பார்ப்பனரே அனுபவிக்கிறார்கள். தேச மக்களுக்கு அது கொஞ்சமும் உபயோகப்படாமலே செய்து விட்டார்கள். பார்ப்பன சூழ்ச்சி வலையில் அகப்பட்டுக் கொண்டேன் என்று சொல்ல வரவில்லை. பார்ப்பனர்களை நம்பினேன், அவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்கள் என்றே சொன்னோம். ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்காரையும், எ. ரெங்கசாமி அய்யங்காரையும், எஸ்.சத்தியமூர்த்தி அய்யரையும் நாம் எப்பொழுதுமே நம்பவில்லை. அவர்களால் ஏமாந்ததாகவும் சொல்லவில்லை. ஆனால் ஸ்ரீமான் சி.இராஜகோபாலாச்சாரியாரை நம்பினோம்; அவர் மோசம் செய்து விட்டார். அவரை நம்பி மோசம் போனோமே என்று தான் வருத்தப்பட்டோம். இதை மகாத்மா காந்தியிடமும் நேரில் சொன்னோம். இதற்காக ‘மித்திரன்’ நாயக்கர் ஏமாறுவதற்கு அவர் சிறுபிள்ளையா சிறுபிள்ளைத்தனமா? என்று எழுதியிருக்கிறான். நாயக்கர் சிறுபிள்ளையா? கிழவனா? என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நாயக்கர் மாத்திரம் பார்ப்பனர்களால் ஏமாறவில்லை. கோடிக்கணக்கான பார்ப்பனரல்லாத ஜனங்கள் ஏமாந்து போனார்கள்; ஏமாந்து போகிறார்கள்; இன்னமும் பார்ப்பனர்களை நம்பி ஏமாந்து கொண்டுதான் வருகிறார்கள். இவ்வளவும் போதாமல் மகாத்மா காந்தியே இப்பார்ப்பனர்களை நம்பி ஏமாந்து போய்விட்டதோடு “படித்தவர்களை நான் நம்பினேன் நம்பின அளவு பலனடையவில்லை” என்றே சொல்லியிருக்கிறார். படித்தவர்கள் யார் என்று கூட சொல்ல வேண்டுமா?
நிற்க, ஜெயிலுக்குப் போவதில் இன்னமும் நமக்கு சலிப்பு ஏற்பட்டுப் போகவில்லை. பார்ப்பன ஆதிக்கத்திற்காக ஜெயிலுக்குப் போவது தப்பு என்று மாத்திரம் எண்ணுகிறோமே ஒழிய பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதற்கு நாமும் நம் குடும்பமும் நண்பர்களும் இனியும் எத்தனை தடவையானாலும் ஜெயிலுக்குப் போகக் காத்துக் கொண்டுதானிருக்கிறோம். சட்ட சபைத் தேர்தல்கள் முடிந்தவுடன் கண்டிப்பாய் அந்த பாக்கியம் கிடைக்குமென்றே மனைவியார் சகிதம் சந்தோஷத்துடன் காத்துக்கொண்டே இருக்கிறோம். அதற்கு வேண்டியகாரியங்கள் நமது பார்ப்பனர்களால் வெகு நாளாகவே நடந்து வருவதையும் நாம் அறிவோம்.
தவிர காங்கிரசினால்தான் நமக்கு யோக்கியதை வந்ததாக ‘மித்திரன்’ எழுதுகிறான். காங்கிரசினால் நமக்கு யோக்கியதை வந்ததா? நம் போன்றவர்களால் காங்கிரசுக்கும் ‘மித்திரன்’ கூட்டத்தாராய இப்பார்ப்பனர்களுக்கும் யோக்கியதை வந்ததா? என்பதை வாசகர்களேதான் அறிய வேண்டும்.
நாயக்கர் காங்கிரசுக்கு வரும்போது காங்கிரசுக்கு நாட்டில் இருந்த யோக்கியதை யாரும் அறியாததல்ல. யாரோ நான்கு படித்த பார்ப்பனர்களான அனாமதேயங்களும், அன்னக் காவடிகளும் அதில் சேர்ந்து பணம் சம்பாதித்து வந்தார்கள். அவைகளை வைத்துக்கொண்டு மாதம் 10 ரூபாய் கூட தங்கள் வக்கீல் உத்தியோகத்தில் சம்பாதிக்க முடியாமலிருந்தவர்கள் காங்கிரசில் சேர்ந்து, பத்திரிகைகள் போட்டு, வெறும் அபத்தப் பஞ்சாங்கத்தையே எழுதி அதன் பேரால் மாதம் 1000, 2000, 5000 ரூபாய் வீதம் நமது பொருளைக் கொள்ளை அடித்துக் கொண்டு வந்தார்கள். அதல்லாமலும் தாங்கள் காங்கிரசில் இருப்பதன் மூலம் சர்க்காருக்கு தேசத்தை காட்டிக் கொடுத்தும் தங்கள் பிள்ளை குட்டிகளுக்கு உத்தியோகம் சம்பாதித்து கொடுத்துக் கொண்டும் வந்தார்கள். இந்த மாதிரி காங்கிரசைப் பற்றி 100-க்கு 99 பேர் பார்ப்பனரல்லாதாருக்கு யாதொரு விஷயமும் தெரியாமலே இருந்தது.
இந்த நிலையில் இந்தக் கூட்டத்தாரை ஒழிக்க சர்க்காரார் அடக்குமுறைச் சட்டங்கள் போட்டதற்கும் ஜஸ்டிஸ் கட்சியார் உதைபோட ஆரம்பித்ததற்கும் பயந்து கொண்டு மகாத்மாவையும் நம் போன்றவர்களையும் தஞ்சமடைந்து அதிலிருந்து தப்பினார்கள். இந்த நிலையில் நாயக்கர் போன்றவர்கள் காங்கிரசுக்குள் வரும்போது அவருடைய யோக்கியதையும் காங்கிரசுக்குப் போன பின்பு அவருடைய யோக்கியதையும் யோசித்துப் பார்த்தால் ‘மித்திரனின்’ கூட்டத்தாருக்கு யோக்கியதை கிடைத்ததா? நாயக்கருக்கு யோக்கியதை கிடைத்ததா? என்பது விளங்காமல் போகாது.
ஸ்ரீமான் நாயக்கர் காங்கிரசுக்கு வருமுன் வருஷம் 1000 ரூபாய் வருமானவரி செலுத்தி வந்தார். பல பெரிய மில்லுகளுக்கு ஏஜண்டாகயிருந்தார். சொந்தத்தில் யந்திரசாலைகள் வைத்து நடத்தி வந்தார். இப்போது அவருக்கு வியாபாரத்தில் ஒரு காசுகூட வருமான வரி இல்லை. அவர் இருந்த ஏஜண்டு வேலைகளுக்கு அவருக்குப் பின்னால் வந்தவர்கள் 4 லட்சம், 5 லட்சக்கணக்கான பணம் சம்பாதித்திருக்கிறார்கள். ஒத்துழையாமையின்போது பதினாயிரக்கணக்கான ரூபாய் பத்திரங்கள் ஆதாரங்கள் வாய்தா கடந்து நஷ்டமேற்பட்டது. உதாரணமாக ஒரு முப்பது ஆயிரம் ரூபாய் பத்திரம் சம்பந்தமான விவகாரத்தில் வழக்காடாமல் அப்படியே அடியோடு விட்டு விடப்பட்டது. அப்போதைய காங்கிரஸ் பிரசிடெண்டான ஸ்ரீமான் சி.விஜயராகவாச்சாரியாருக்கு இது நன்றாய் தெரியும். அதோடு அவர் எதிர் வழக்காடும்படியும், கண்டிப்பாய் ஜெயித்து 30 ஆயிரம் ரூபாயை பெறலாம் என்றும், தானே பீசில்லாமல் வந்து பேசுவதாகவும் நாயக்கரை எவ்வளவோ கட்டாயப்படுத்தினார். ஸ்ரீமான் ஆச்சாரியார் இப்போது சேலத்தில் இருக்கிறார். யார் வேண்டுமானாலும் எழுதிக் கேட்டுக் கொள்ளலாம்.
இன்னும் நாயக்கர் காங்கிரசுக்கு வருமுன் முனிசிபல் சேர்மென், ஜில்லா - தாலூக்கா போர்டுமெம்பர், ஆனரரி மேஜிஸ்ட்ரேட்டு முதலிய சர்க்கார் சம்பந்தப்பட்ட பதவி வேலையிலும் இருந்து வந்ததோடு ஒரே தாளில் இவை அனைத்தையும் ராஜினாமா கொடுத்தார். ராஜினாமா செய்த பிறகும் இரட்டை முதல் வகுப்பு பிரயாணப்படியும், நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் கௌரவப் படிப்பணமும் சர்க்கார் கொடுப்பதாகவும் தெரிவித்து, இன்கம்டாக்ஸ் அப்பீல் போர்ட்டில் கமீஷனராக இந்தியா கவர்மெண்டாரால் நியமிக்கப்பட்டவராகவுமிருந்தார். சர்க்காரிலும் அசிஸ்டெண்ட் ரெக்ருட்டிங் ஆபீசர் வேலை கொடுக்கத்தக்க நம்பிக்கையுடையவராகவும் இருந்தார். (இது ராணுவ சம்மந்தமான உத்தியோகம்) இன்னும் பல வகைகள் இருந்தாலும் இவைகளைப் பற்றி எழுதுவது தற்பெருமைக்கு இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொண்டதாகக் கருதப்படும் என்று அஞ்சுவதோடு இதையும் தற்பெருமைக்கு எழுதுவதாகவே சிலர் கருதுவார்கள் என்று பயப்படுகிறோம். ஆனாலும் இப்பார்ப்பனர்களின் அக்கிரமத்திற்குப் பதில் சொல்லாமலிருக்க முடிவதில்லை. இவ்வைந்தாறு வருஷ காலத்தில் வருஷம் பதினாயிரக்கணக்கான ரூபாய் சம்பார்த்தனையும் போய், கை முதலும் எவ்வளவோ நஷ்டப்பட்டுமிருக்கிறோம். ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி சாஸ்திரிக்கோ, எ.ரெங்கசாமி அய்யங்காருக்கோ, எஸ்.சீனிவாசய்யங்காருக்கோ, வி.எஸ். சீனிவாச சாஸ்திரிக்கோ, பி.என்.சர்மாவுக்கோ, எம்.கே.ஆச்சாரிக்கோ மற்றும் பல அய்யர், ஆச்சாரியார், சர்மாவுக்கோ காங்கிரசில் சேர்ந்து எவ்வளவு ரூபாய் எவ்வளவு கௌரவ நஷ்டம் ஏற்பட்டது? இவர்களிடம் இருந்து காங்கிரசைக் கழித்து விட்டால் மீதி என்ன என்பதை இவர்களே யோசித்துப் பார்க்கட்டும்.
இப்படி இருக்க நாம் காங்கிரசின் மூலம் யோக்கியதை அடைந்து விட்டதாக சொல்லுகிறார்கள். இவ்வளவும் போதாமல் நம்மிடம் பிராமணத் துவேஷமிருக்கிறது என்கிறார்கள். நம்மிடம் உண்மையில் துவேஷமிருக்கிறதா, இவர்களிடம் இருக்கிறதா? நம்மிடம் இருக்குமானால் குறைந்த அளவு அவர்கள் நம்மைச் சொல்லுவது போலவாவது நாமும் அவர்களைச் சொல்ல மாட்டோமா? அவர்கள் நம்மை சூத்திரன் என்று கூப்பிடுவதோடு, சூத்திரன் என்றால் வைப்பாட்டி மகன், தாசி மகன் என்று எழுதியே வைத்துக் கொண்டிருக்கிறார்களே, நாமும் அவர்களை அந்த மாதிரி சொல்ல மாட்டோமா? சொன்னால் தலை போய்விடுமா? பார்ப்பனர் விஷயத்தில் அவர்கள் யோக்கியதையைப் பற்றி எவ்வளவோ உண்மைகளைக்கூட நாம் சொல்லப் பயப்படுகிறோமே. இப்படியெல்லாம் நாம் பயப்படும்போதே இவர்கள் நம்மை இவ்வளவு தூரம் ஒழிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் இவைகளை எதிர்பார்த்தே இக்கருமத்தில் இறங்கினோமானதால் இவைகளைப் பற்றி ஒரு சிறிதும் நாம் கவலைப்படாமல் இன்னும் இப்பார்ப்பனர்கள் வெடிகுண்டுக்கு மார்பைக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதாக உறுதி கூறுகிறோம்.
(குடி அரசு - கட்டுரை - 29.08.1926)