(TRIBES யூடியூப் தளத்திற்கு மருதையன் அளித்த நேர்காணல்)

நெறியாளர்: கடந்த காலங்களில் ஆர்.எஸ்.எஸ் எப்போவாவது இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார்களா? இப்போது ஆர்.எஸ்.எஸ் தலைவரே இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் என்ற போது காலம் மாறிக் கொண்டுள்ளது, ஓபிசி,எஸ்.சி, எஸ்.டி மக்கள் மத்தியில் தங்களுக்கான அரசியல் சமூக உரிமைகளுக்கான விழிப்புணர்வு அதிகமாகி விட்டது. அதனால் காலத்திற்கு ஏற்றவாறு ஒரு அரசியலை ஆர்.எஸ்.எஸ் முன்னெடுக்கிறார்கள் என்ற வாதம் வைக்கப்படுகிறது. அது சரிதானா?

மருதையன் : வாதம் வைப்பவர்கள் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். இப்போது பிற்படுத்தப்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ்-யை பற்றி, சனாதனத்தை பற்றி, பார்ப்பன கொடுங்கோன்மையைப் பற்றி மேலும் தெளிவு பெற்று விட்டார்கள். அதனால் தான் மோகன் பகவத் பின் வாங்குகிறார் என்பது அவர்களின் வாதம் என்றால் பொருளாதார இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தமிழ்நாடு தவிர இந்தியாவில் எங்கே எதிர்ப்பு வந்தது என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். ஏன் வரவில்லை? ஏன் சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் பொருளாதார இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக இருந்தனர்? அப்போது அந்தக் கட்சிகள் அப்படி இருக்கிறார்கள் என்பது மட்டும் முக்கியமில்லை, இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மத்தியில் பொருளாதார இட ஒதுக்கீடு என்பது இட ஒதுக்கீட்டின் அடித்தளத்தையே அசைக்க கூடிய ஒரு நிலைப்பாடு. இட ஒதுக்கீட்டு முறையை ஒழிக்கக் கூடியது என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களா? புரிந்துகொள்ளவில்லை என்பது ஒன்று.

இரண்டாவது, விஸ்வகர்மா சம்வான் அபியான் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். அது குலத் தொழிலை புதுப்பிப்பதற்கான ஒரு சதி. சேவை சாதிகள், சூத்திர சாதிகளை சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் கல்விப் பெற்று நவீன தொழில்களுக்கு செல்லாமல் பாரம்பரிய தொழில் என்ற பெயரில் அதிலேயே முடக்கி வைப்பதற்காக அன்றைக்கு ராஜாஜி செய்த காரியத்தை இன்று மோடி அரசு செய்கிறது. இதை தமிழ்நாட்டில் மட்டும்தான் பேசுகிறோம். வேறு எங்கும் பேசவில்லை. அங்கு இது போன்ற விழிப்புணர்வு அந்த மக்களுக்கோ, கட்சிகளுக்கோ இருக்கிறதா என்றால் அப்படி இல்லை. அதனால் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு பெற்றுவிட்டார்கள் என்று சொல்பவர்கள், இன்றைக்கு அவர்கள் சொல்வது உண்மையானால் உதயநிதி ஸ்டாலின் பேசியதில் என்ன தவறு? சனாதன தர்மம் தானே எங்களை 2000 வருடங்கள் ஒடுக்கியது, என்ன பிரச்சனை இப்போ என்று கேட்டிருக்க வேண்டும். அப்படி ஒரு கேள்வியை மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் மட்டும் தான் கேட்டுள்ளார். மற்றவர்களெல்லாம் உறுதியாக பேசவில்லை.தமிழ்நாட்டில் ஆ.இராசா பேசி உள்ளார். இதுதான் நிலவரம்.

இதில் வேடிக்கை என்னவென்று கேட்டால் பகவத் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று பேசும்போது இட ஒதுக்கீடு கொடுப்பது என்பது பொருளாதார சலுகை அல்ல; அது சுயமரியாதை பிரச்சனை என்கிறார். சமூக ரீதியான ஒடுக்குமுறைக்கு எதிரானது. இன்னும் கொஞ்சம் விட்டால் கூட புரட்சியே செய்துவிடுவார் போல.

நாம் ஒடுக்கப்பட்ட சாதிகளோடு ஒப்பிடப்பட வேண்டுமென்றால் ஆர்.எஸ்.எஸ் சுயம் சேவக்-கள் பசு மாமிசமும் சாப்பிட தயாராக இருக்க வேண்டும். அதற்கு ஒரு கதை எல்லாம் சொல்கிறார். எங்கோ ஒரு இடத்தில் தலித் மக்களுடன் ஐக்கியப்பட செல்லும்போது அவர்கள் மாட்டு கறி சாப்பிட வேண்டும் என்று சொன்னார்களாம், இவர்களும் சாப்பிட்டார்களாம். சாப்பிட்ட பிறகு உங்களை சோதிப்பதற்காக தான் இதை செய்தோம், மாட்டுக்கறி இல்லை என்று அந்த தாழ்த்தப்பட்டவர் சொன்னார். அதனால் மாட்டுக்கறி சாப்பிடுவதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். இந்த பேச்சை வைத்துக் கொண்டு அவர்களை நம்புவதற்கு நாம் அவ்வளவு ஏமாளிகளாக இருக்கிறோமா என்பது தான் கேள்வி? அதாவது இரட்டை நாக்கு என்பது ‘பேச நா இரண்டுடையா போற்றி!’ என்று அண்ணா எழுதியிருக்கிறார். இரட்டை நாக்கு என்பது அவர்களுடைய பிறவி குணம்.

பாபர் மசூதி இடிக்கும் வரைக்கும் உச்சநீதிமன்றத்தில் நாங்கள் எதுவும் செய்யப் போவதில்லை, அங்கு பஜனை செய்யப் போகிறோம் என்று தான் அனுமதி வாங்கினார்கள். மறுநாள் மசூதியை இடித்தார்கள். அவர்கள் சொல்வதற்கும் செய்வதற்கும் என்றைக்கும் நேர்மை என்பதே கிடையாது. அந்தக் கோணத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு பற்றிய அவர்களின் கடந்த கால நிலைப்பாடுகளை கொஞ்சம் நிதானமாக வரலாற்றை புரட்டிப் பார்த்தால் அவர்களை புரிந்து கொள்ள முடியும்.

நெறியாளர்: எல்லாருக்கும் 10 வருடங்களுக்கு முன்பு ஒரு கருத்து இருக்கிறது. இன்றைக்கு அந்த கருத்து மாறுபடுகிறது. அப்படி ஆர்எஸ்எஸ் க்கு கருத்து மாறாதா? மாற்றத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று சொல்ல முடியாதா? ஆர்எஸ்எஸ் கடந்த கால நிலைப்பாடுகளை வைத்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் இன்றைக்கு பேசியதை மதிப்பீடு செய்ய வேண்டுமா?

மருதையன்: ஆர்.எஸ்.எஸ் என்ற இயக்கம் ஒரு நோக்கத்திற்காக தொடங்கப்பட்டது. அது என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. ஹிந்துராஷ்டிராவை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது. இதைப் பற்றி ஹெட்கேவார், கோல்வாக்கர், சாவர்க்கர் இத்தனை பேரும் பேசி இருக்கிறார்கள். அவர்களுக்கு பின்னால் தீன் தயாள் உபாத்தியாயா ஜன சங்கத்தை தொடங்கியவர் அவர். அவர் Integrel Humanism என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்தில் அவர் குறிப்பிடுவது “நமது நோக்கம் தூய வடிவிலான வர்ணாசிரம தர்மத்தை புதுப்பித்து நிலைநாட்டுவது தான்” இது 1965இல் ஜன சங்கத்தின் நோக்கம் என்று எழுதியிருக்கிறார். இந்த கொள்கைகளை எல்லாம் அவர்கள் விட்டுவிட்டு தலைகீழாக மாறிவிட்டார்கள் என்றால் ஆர்.எஸ்.எஸ்-யை கலைத்து விடலாம். ஒரு கட்சி தான் உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு எதிராக ஒருபோதும் வேலை செய்யாது.

அன்றைக்கு வெள்ளைக்காரன் ஆண்டபோது தேசிய விடுதலை இயக்கத்திற்கு எதிராக பிரிட்டிஷ் காரனோடு கூட்டு சேர்ந்து கொண்டார்கள். இரண்டாவது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வந்தபோது Organaizer பத்திரிகையில் “இதில் பாரதியம் என்று எதுவும் இல்லை, நமக்காக மனுதர்மம் இருக்கும்போது அதை அங்கீகரிக்காமல் இப்படி ஒரு அரசியல் சட்டமா? என்று எழுதினார்கள். Hindu Code Bill -யை அம்பேத்கர் கொண்டு வந்த போது அதை மிகக் கடுமையாக எதிர்த்தார்கள்.

இந்தியாவிலேயே முதல்முறையாக இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கலவரம் நடந்த ஊர் குஜராத். 1981இல் நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகராக இருக்கும் போது தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மிகப் பெரிய கலகம் நடக்கிறது. அப்போது ஆர் எஸ் எஸ் ஒரு அறிக்கை விடுகிறது, கற்றறிந்த சான்றோரை வைத்து இந்த தலித்களுக்கும், பழங்குடிகளுக்கும் இட ஒதுக்கீடு தொடர வேண்டுமா என்பது குறித்து நடுநிலையான அத்தகைய சான்றோர்கள் தயவு செய்து தீர்ப்பு கூற வேண்டும். இது 1981 ஆர்.எஸ்.எஸின் நிலைப்பாடு.

1985இல் இட ஒதுக்கீடு இனிமேலும் நீடிக்க முடியாது, கேலிக்கூத்தாகிவிட்டது, இதை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்றது.

1990களில் மண்டல் கமிஷன் வருகிறது. விபி.சிங் ஆட்சி கவிழ்க்கப்படுகிறது. இவர்கள் தான் கவிழ்த்தனர். இதை முறியடிக்கத் தான் பாபர் மசூதி- ராமஜென்ம பூமி பிரச்சனையை கையில் எடுத்து ரத யாத்திரையை நடத்தினார்கள்.

2006 இல் UPA அரசு ஐஐடி, ஐஐஎம்-களில் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி இட ஒதுக்கீடு என்பதை கொண்டு வருகி்றார்கள். அப்போது 2006 ஜூன் மாதத்தில் “ஆரம்பக் கல்வி மட்டும் தான் உரிமையாக இருக்க வேண்டும், அதற்கு மேல் படிப்பது என்றால் அவரவர் தகுதியிலிருந்து வரவேண்டும். இந்த நாட்டினுடைய சிறந்த கல்வி நிறுவனத் தகுதி என்பதை தனக்காக வைத்திருப்பது ஐஐடி, ஐஐஎம் அதையே நாசமாக்குவதற்கு UPA அரசு இறங்கியுள்ளது என்று தனது Organaizer எழுதியுள்ளது.

2015ல் குஜராத்தில் படேல் சாதியினர் இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தினார்கள். அப்போது அதை சமாளிப்பதற்காக மோகன் பகவத், இட ஒதுக்கீடு பிரச்சனை எல்லாம் நீண்ட நாள் நீடிக்க முடியாது இதை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தாக வேண்டும் என்று பேசுகிறார். கெடுவாய்ப்பாக அப்போது பீகார் தேர்தல் வருகிறது. அதனால் உடனடியாக மோடி, யார் சொன்னாலும் இட ஒதுக்கீட்டை ஒழிக்க முடியாது, யாரும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என்று பேசினார். அதன் பிறகு இட ஒதுக்கீட்டை எப்படி ஒழிக்கிறார்கள் என்றால் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து ஒழிக்கிறார்கள். 10% EWS, எதன் அடிப்படையில், வருமான வரம்பு 8 இலட்சம் என்று அயோக்கியத்தனமாக வைத்து EWS நிறைவேற்றப்படுகிறது. EWS பற்றி ஆர் எஸ் எஸ் நிலைப்பாடு என்ன? இதை மூர்க்கமாக ஆதரிக்கிறது, இதுதான் ஆர்.எஸ்.எஸின் நிலைப்பாடு.

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் தான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு. அதை பொருளாதார அடிப்படையாக்கி தகர்த்து விடுகிறார்கள்.

இப்போது சென்சஸ் எடுக்கவில்லை. ஏனென்றால் சாதி ரீதியான கணக்கெடுப்பு எடுத்தால் ஒடுக்கப்பட்ட சாதியினரின் வாழ்க்கை நிலை என்ன என்பது வெளியே வரும். வறுமையில் யார் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், யார் கல்வியில் பின்தங்கியிருக்கிறார்கள், யாருக்கு வீடில்லை, யார் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். அது தெரிய வருவது ஆர்.எஸ்.எஸ்-க்கு ஆபத்து. இந்து ஒற்றுமை என்று ஒரு போர்வையை போட்டு மூடி வைத்திருக்கிறார்கள். முஸ்லிம் எதிரி, இந்து ஒற்றுமை என்ற ஒரு மாய்மாலம் சாதி ரீதியான கணக்கெடுப்பு எடுத்தால் அந்த மாய்மானம் குலைந்து விடும். சாதிக்காக கணக்கெடுப்பு நடத்துகிறோம் என்று பீகார் அரசு கூறிய போது அதை எதிர்த்து இவர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடினார்கள். இதுதான் அவர்களின் வரலாறு.

Pin It