இந்து சாம்ராஜ்ஜியத்தை ‘சிவாஜி’ படைத்ததாக கூறுவார்கள். ஆனால் சிவாஜி படையில் அதிகமாக இஸ்லாமியர்கள் இருந்தார்கள். இதை கோல்வாக்கரும் குறிப்பிட்டுள்ளார். கோவிந்த் பன்சாரே அதைப் பற்றித் தான் நூல் எழுதினார். சிவாஜி எவ்வளவு இஸ்லாமியர்களை நம்பத்தகுந்தவாறு தன்னுடன் வைத்திருந்தார் என்பதைத் தான் ஆதாரங்களுடன் நூல் எழுதினார். அதற்காகத்தான் கொல்லப்பட்டார். அந்த நூல் இலட்சக்கணக்கில் விற்கப்பட்டது. பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பாக, “யார் எதிரிகள்” என்ற தலைப்பில் 31.07.2022 அன்று சென்னை அம்பத்தூர் தாய்த் தமிழ் பள்ளியில் நடைபெற்ற பயிலரங்கில் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு கருத்தியலை வழங்கிய கோல்வாக்கர் கொள்கைகளை மோடி ஆட்சி செயல்படுத்தி வருவதை கழகத் தலைவர் கொளத்தூர் மணி பட்டியலிட்டார். (சென்ற இதழ் தொடர்ச்சி)

அமிர்தசரசில் 1908இல் காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் தான் “வந்தே மாதரம்” பாடலை ஒட்டிய ஒரு விவாதம் நடைபெறுகிறது. வந்தே மாதரம் 1875இல் எழுதப்பட்ட தனிப்பாடல். சமஸ்கிருதம், வங்காளம் மீண்டும் சமஸ்கிருதம் இப்படி எழுதப்பட்ட ஒரு நீண்ட பாடல். ‘வெற்றியடைந்த ஒரு போர் வீரன் காளியைப் பார்த்து நன்றி கூறுகிறான்’ இது தான் வந்தே மாதர பாடலின் கரு. 1875இல் காளியை பார்த்து எழுதிய இந்தப் பாடலை பக்கிம் சந்த் சட்டர்ஜி என்பவர் ‘ஆனந்த மடம்’ என்ற அவரது நாவலில் இந்தப் பாடலை திணிக்கிறார். கதை என்னவென்றால் போர் நடைபெறுகிறது. ஆங்கிலேயர்கள் தலைமையில் இஸ்லாமியர்கள் போராடுகிறார்கள். மற்றொரு பக்கம் அரசர்கள் தரப்பிலிருந்து இந்துக்கள் போராடுகிறார்கள். இஸ்லாமியர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள். அந்த இந்து படைகளுக்கு தலைமை தாங்கிய சன்னியாசி ‘சத்யானந்தா’ அவர் காளியை பார்த்து பாடுகிற பாடல் தான் அந்த நாவலில் கொண்டு சேர்க்கப்பட்ட பாடல். இவர் பல நாவல்களை எழுதியுள்ளார். சீதா இராமன் என்ற நாவலும் எழுதியுள்ளார். அதிலும் இது போன்று தான் எழுதியுள்ளார். அதிலும் இஸ்லாமியர்களை பற்றி தான் எழுதியிருப்பார். அந்த நூலும் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்ட நூல். இந்த நேரத்தில் தான் இந்துக்கள் தங்களின் மேலாண்மையை நிறுவியாக வேண்டும் என்ற காலகட்டம் அது.

kolathur mani 368இந்து மேலாண்மையை நிறுவியாக வேண்டும் என்றத் தலைவர்களை நாம் பார்க்க வேண்டும். முதலில் ‘இந்து சபா’ என்று பஞ்சாபில் தான் ஆரம்பிக்கிறார்கள். அதில் லாலா லஜபதி ராய், மதன் மோகன் மாளவியா போன்றவர்கள் இருக்கிறார்கள்.

இவர்களெல்லாம் மிதவாதிகளாக இருந்தார்கள் என்று அது சாவர்க்கருக்கு மாறியதோ அப்போது தீவிரவாத கட்சியாக மாறுகிறது. முதலில் தன் மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும், கைம்பெண் மணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று லாலாலஜபதி ராய் பேசுகிறார். மாளவியா இன்னும் கொஞ்சம் பிற்போக்குவாதி. அதற்கு அடுத்து மோசமான பிறபோக்குவாதி சாவர்க்கர். சாவர்க்கர் கூட அவர்கள் பார்வையில் முற்போக்குவாதி தான். பசு வதையை அவர் எதிர்க்கவில்லை. இந்துக்கள் மாட்டுக்கறி சாப்பிட வேண்டும், பசு மூத்திரத்தை குடிப்பதை விட வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

‘ஹர்தயாள்’ என்ற ஒரு புரட்சியாளர் இருந்தார். அவர் ஒரு மார்க்சிஸ்ட். அவரைப் பற்றி ஆய்வு செய்து ‘எமிலி கிளாரா பிரவுன்’ ஒரு நூலை எழுதியுள்ளார். வரிசைப்படி கூறினால் , ‘An atheist, Revolutionary, A buddhist, Pacifist’ இப்படி வரிசைப் படுத்தி அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவர் வெளிநாட்டிற்கு சென்று முனைவர் பட்டமெல்லாம் பெற்று வந்தார். அவர் ‘மகரிஷி மார்க்ஸ்’ என்று புத்தகம் எழுதியுள்ளார். இவர் எப்படி இருந்தார் என்றால் இந்த நாட்டிலிருந்து இஸ்லாமியர்களை துரத்த வேண்டும் என்று கூறுபவராக இருந்தார்.

ஹர்தயாள் ஒரு புத்தகத்தில் ‘அரசியல் ஏற்பாடு’ என்று ஒரு அறிக்கை வெளியிடுகிறார். அதில், “இந்து இனம், இந்துஸ்தானம் மற்றும் பஞ்சாபின் எதிர்காலம் எதிர்வரும் நான்கு தூண்களை சார்ந்து இருக்கிறது. 1) இந்து சங்காத்தன், 2) இந்து இராஜ் ஜியம், 3) முஸ்லிம் சுத்தி, 4) ஆஃப்கானிஸ்தானம் மற்றும் எல்லை மாகாணங்களை கைப்பற்றி சுத்திகரிப்பது இந்த நான்கு இலக்குகளை இந்து தேசம் அடையவில்லையெனில் நம் குழந்தைகள், பேரக்குழந்தைகளின் பாதுகாப்பு எப்போதுமே அபாயத்தில் இருக்கும். இந்து இனத்தின் பாதுகாப்பு என்பது இயலாததாகிவிடும். இந்து இனத்திற்கு ஒரே வரலாறு தான், அதன் நிறுவனங்கள் ஒரே தன்மை கொண்டவை. முசல்மான்களும், கிறிஸ்தவர்களும் அன்னிய மதங்களைப் பின்பற்றுவதாலும் பாரசீக மொழியையும், அய்ரோப்பிய நிறுவனங்களை அவர்கள் நேசிப்ப தாலும் இந்து மத அமைப்பிலிருந்து அவர்கள் தூர விலகியே இருக் கின்றனர். இந்துக்கள் தங்களை பாது காத்துக் கொள்ள விரும்பினால், அவர் கள் ஆஃப்கானிஸ் தானத்தையும் எல்லை மாநிலத்தையும் கைப்பற்றி அனைத்து மலைவாழ் மக்களையும் மதமாற்றம் செய்ய வேண்டும்” இப்படி கூறுபவர் யார்? ஒரு மார்க்சிய வாதியே கூறும்படி இருக்கிறதென்றால் யோசித்துப் பாருங்கள்.

இதற்குப் பின்னால் தான் ஆர்.எஸ்.எஸ் வருகிறது. இதே கொள்கையைத் தானே ஆர்.எஸ்.எஸ் கொண் டுள்ளது. பிறகு எதற்கு ஆர்.எஸ்.எஸ்? ஆர்.எஸ்.எஸ்-அய் உருவாக்கிய அனைவருமே இந்து மகா சபை யினர் தான். புதியதாக யாரும் வந்து ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்த 5 பேரும் இந்து மகா சபையில் இருந்தவர்கள் தான். ஆனால் தேர்தலில் போட்டி யிடும் அரசியல் கூடாது என்று முடிவு செய்கிறார்கள். இந்து மகாசபையில் இருப்பவர்கள் சண்டையை தவிர்க்கும் பண்பாளர்களாக இருந்தனர். ஆனால் ஆர்.எஸ் எஸ்காரர்கள் கரடு முரடாக சண்டையிடுபவர்களாக இருக்க வேண்டும் என்று எண்ணினர். பிற்காலத்தில் இரண்டிற்கும் உள்ள இந்த வேறுபாட்டை அவர்களே பிற்காலத்தில் குறிப்பிடுகிறார்கள்.

அய்ந்து பேர் ஆரம்பிக்கிறார்கள், 1) டாக்டர் பி.எஸ் மூஞ்சே, (இவர் முசோலினியை சந்தித்தவர்) 2) டாக்டர் பராஞ்சிபே, 3) டாக்டர் கே.பி. ஹெட்கேவர், 4) டாக்டர் கோல்கர், 5) டாக்டர் பாபாராவ் சாவர்க்கர், இவர் சாவர்க்கரின் அண்ணன். இவர்களெல்லாம் இணைந்து தான் ஆர்.எஸ்.எஸ் - அய் தொடங்குகிறார்கள். ஆரம்பித்த பின்னும் ஆர்.எஸ்.எஸ் யும், இந்து மகா சபையும் வேறு வேறு அல்ல. 1931 வரைக்கும் ஹெட்கேவர் ஆர்.எஸ்.எஸ் ற்கு தலைவர், இந்து மகா சபைக்கு பொதுச் செயலாளர்.

ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு செப்டம்பர் 1925 விஜயதசமியில் ஹெட்கேவர் இல்லத்தில் கூடி தொடங்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் இன் தத்துவத் தலைவர் கோல்வாக்கர். இவரின் நூல் ‘ஞான கங்கை’ என்று தமிழில் வந்துள்ளது. அதில் எதுவெல்லாம் நமது நாடு என்று குறிப்பிட்டிருப்பார். “எந்த ஒரு புனித நதியின் பெயரால் நமக்கு ‘ஹிந்து’ என்று பெயர் வந்ததோ, நம் நாட்டுக்கு ஹிந்துஸ்தானம் என்று பெயர் வந்ததோ அந்த புனித நதியான சிந்து நதியில் நீராடும் வாய்ப்பே நமக்கில்லை. உலகிற்கெல்லாம் இந்து மதத்தைப் பரப்பிய கேந்திரமான ‘தட்ஷசீலம்’.

இன்று நம் நாட்டில் இல்லை. அரக்கர் இரணியனிடமிருந்து காக்க வந்த அவதார தலமாகிய மூல்ஸ்தானம் நம்மிடம் இல்லை “இவையனைத்தும் பாகிஸ்தானில் உள்ளது. இல்லை என்று சொல்வது எதனாலென்றால் அவற்றை இணைத்துக் கொள்ள வேண்டும்” என்ற பொருளில் கூறுகிறார். “பாரதியர் என்பதும் மிகப் பழமையான பெயர். பாரதம் என்ற பெயர் வேதங்களிலேயே வருகிறது. இந்தியன் என்ற சொல்லின் மொழி பெயர்ப்பாக இந்த நாட்டில் வாழும் முஸ்லிம், கிறிஸ்துவர்கள், பார்சிகள் என அனைவரையும் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. எனவே நமது சமுதாயத்தை நாம் குறிப்பிட விரும்பும்போது ‘பாரதீயர்’ என்ற சொல் தவறான சொல். எனவே நாம் நினைப்பதை முழுமையாக வெளிப்படுத்தும் சொல் ‘ஹிந்து’ என்ற சொல் தான் வெளிப்படுத்தும்” என்று கோல்வாக்கர் குறிப்பிடுகிறார்.

கோரேகான் பிரச்சனையைப் பற்றியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. “பேஷ்வாக்களை வெற்றி கொண்டதை சித்தரிப்பதற்கு பூனாவுக்கு அருகில் ஆங்கிலேயர் எழுப்பிய ஒரு வெற்றித் தூண் உள்ளது. ஒரு சமயம் புகழ்பெற்ற அரிஜனங்களின் தலைவர் ஒருவர் (அம்பேத்கர்) அத்தூண் அருகில் தமது குலத்தவர் மத்தியில் ஓர் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் அரிஜனங்கள் பிராமணர்கள் மேல் கொண்ட வெற்றி என்று குறிப்பிட்டார். ஏனெனில் அரிஜனங்கள் தான் ஆங்கிலேயரின் கீழ் போரிட்டு, பேஷ்வாக்களை அதாவது பிராமணர்களை தோற்கடித்தனர் என்றார். இழிவான அடிமைச் சின்னத்தை வெற்றியின் சின்னம் என்றும் ஒரு பெருந்தலைவர் ஒருவரே புகழ்ந்து கூறுவதும் அன்னியர்களுக்கு அடிமையாயிருந்தும் நமது சொந்த சகோதரர்களுக்கு எதிராக சண்டையிட்டது ஒரு பெரும் சாதனையாக எண்ணுவதும் நெஞ்சை பிளக்கவில்லையா?” என்று கோல்வாக்கர் குறிப்பிடுகிறார். இப்போது புரிகிறதா ஏன் தற்போது பாஜகவினரால் வழக்குகள் பதியப்படுகிறது என்று? கோல்வாக்கரின் நெஞ்சு பிளந்ததற்கு தான் இப்போது இத்தனை பேரின் மீது வழக்குகள் பாய்ந்து கொண்டே இருக்கின்றன.

தருண் விஜய், திருக்குறளை உலக நூலாக்கப் போகிறேன் என்று கூறிக்கொண்டிருந்தார். அது உங்களுக்குத் தெரியும். அந்த முயற்சி எங்கிருந்து வந்தது என்று பாருங்கள், “திருவள்ளுவ முனிவர் இதன் ஆசிரியர். இவரை நாம் ஏகாத்மாதா ஸ்தோத்திரத்தில் நினைவு கூறுகிறோம். (இதில் பல பேரை இணைத்துக் கொள்வார்கள், தற்போது காந்தி, அம்பேத்கரைக் கூட அந்த ஸ்தோத்திரத்தில் அணைத்துக் கொண்டனர்) மிக புகழ் பெற்ற வ.வே.சு அய்யர் என்ற புரட்சியாளர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். திருக்குறளில் கூறப்பட்டுள்ள விசியம் தான் என்ன? பழமையான ஹிந்து தத்துவமாகிய நான்கு வித உறுதிப் பொருள், எனவே திருக்குறள் ஹிந்து நூல்” என்று கோல்வாக்கர் குறிப்பிடுகிறார். ஏன் தருண் விஜய் திருவள்ளுவருக்கு சிலை வைக்கப் போகிறேன் என்று கூறினார் என்று புரிகிறதா? ஏன் இவற்றை கூறுகிறேன் என்றால், ஆர்.எஸ்.எஸ். தத்துவத்தை அறிந்து கொண்டால் தான் இன்றைக்கு அரசு நடைமுறைப் படுத்துவதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இது பாஜகவின் தத்துவங்கள் அல்ல; ஆர்.எஸ்.எஸ் -இன் தத்துவம்.

 இந்து சாம்ராஜ்ஜியத்தை ‘சிவாஜி’ படைத்ததாக கூறுவார்கள். ஆனால் சிவாஜி படையில் அதிகமாக இஸ்லாமியர்கள் இருந்தார்கள். இதை கோல்வாக்கரும் குறிப்பிட்டுள்ளார். கோவிந்த் பன்சாரே அதைப் பற்றித் தான் நூல் எழுதினார். சிவாஜி எவ்வளவு இஸ்லாமியர்களை நம்பத்தகுந்தவாறு தன்னுடன் வைத்திருந்தார் என்பதைத் தான் ஆதாரங்களுடன் நூல் எழுதினார். அதற்காகத்தான் கொல்லப் பட்டார். அந்த நூல் இலட்சக்கணக்கில் விற்கப்பட்டது. பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது.

இட ஒதுக்கீடுகளைப் பற்றி, “வேலைகளில் சலுகைகள், பொருளாதார உதவிகள், கல்வியில் வாய்ப்பு என்று எல்லாத் துறைகளிலும் தனிச் சலுகைகளையும், உரிமைகளையும் கோருவதை முற்றிலும் நிறுத்தி விட வேண்டும்” என்று கோல் வாக்கர் குறிப்பிடுகிறார். “ஜாதி அடிப்படையிலோ, வழிபாட்டு முறை அடிப்படையிலோ, தனியான அலாதியான விஷேச உரிமை கோருவது என்பது இந்து பாரம்பரியத்திற்கும் மத நம்பிக்கைக்கும் விரோதமானது. எனவே அதை நிறுத்தி விட வேண்டும்” இப்படி பல இடங்களில் தொடர்ந்து கூறுகிறார் கோல்வாக்கர்.

அடுத்தது, மாநிலங்களே கூடாது என்பது அவர்கள் கொள்கை. இந்த கொள்கைகளைத் தான் பாஜக தேர்தர் அறிக்கையிலும் தந்தது.

1934 வரை காங்கிரசிலும் இருக்கலாம், ஆர்.எஸ்.எஸ்.சிலும் இருக்கலாம் என்ற இரட்டை உறுப்பினர் முறை இருந்தது. 1934 இல் தான் நேரு கடுமையாக எதிர்த்து அப்படி இரட்டை உறுப்பினர் முறை கூடாது என்றார். அதன் பின் ஜனதா கட்சியில் அந்த சிக்கல் வந்தது. அப்போது ராஜ் நாராயணன் கடுமையாக எதிர்த்தார். அதனால் ராஜ் நாராயணன், ராம் நரேஷ் யாதவ், கற்பூரி தாகூர் ஆகியோரை கொலை செய்ய முயற்சித்தார்கள். ஆனால் தப்பித்து விட்டார்கள். ஜனதா கட்சியாக இருக்கிற போதே ஜனதா கட்சியில் இருக்கிற சமத்துவவாதிகளை கொலை செய்ய முயற்சித்தனர். இப்படி இரட்டை உறுப்பினர் முறையை வைத்துக் கொண்டு அமைச்சரவையிலும் பல சிக்கல்களை ஏற்படுத்தினர். வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது தான் வெளி நாடுகளில் ஆர்.எஸ்.எஸ். பரவியது.

இந்த நாட்டில் இருப்பவர்களை அதாவது மண்ணின் மைந்தர்களை எப்படி குறிப்பிடுகிறார்கள் என்றால், “பாரசீகர்களும், யூதர்களும் தங்கள் சொந்த நாட்டில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்தவர்கள். அவர்கள் பிரச்னையில்லை. ஆனால் கிறிஸ்துவர்களும், முஸ்லீம்களும் இந்த இந்த நாட்டை ஆக்கிரமிப்பவர்களாக வந்தவர்கள், நம்மை அழிக்க வந்தவர்கள், தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட வந்தார்கள், உள்ளூர் மக்களை அடிமைப் படுத்த வந்தார்கள். இருவரையும் ஒன்றாக பார்க்க முடியாது” என்கிறார்.

அடுத்தது ஆரியர் என்பதில் பெருமை கொள்ள வேண்டும். இரண்டாவது வட்ட மேசை மாநாட்டிற்கு சென்ற டாக்டர் மூஞ்சே, அங்கிருந்து நேராக இத்தாலிக்குச் செல்கிறார்.

இத்தாலிக்குச் சென்று முசோலினியை சந்திக்கிறார். முசோலினியின் இளைஞர் அமைப்புகளை பார்க்கிறார். அதைத்தான் ஆர்.எஸ்.எஸ் - ற்கும் கொண்டு வருகிறார்கள். முசோலினையைப் பார்த்து தான் இங்கே இராணுவப் பள்ளிகளை நிறுவுகிறார்கள். அப்போது, “அரசியலை இந்து மயமாக்கு, இந்துக்களை இராணுவ மயமாக்கு, இராணுவத்தை இந்து மயமாக்கு” இந்த கொள்கையைத் தான் தற்போது ‘அக்னிபாத்’ ஆக கொண்டு வருகின்றனர்.

இந்தத் தத்துவங்களை செயல்படுத்துவதைத் தான் கொள்கையாக கொண்டுள்ளது பாரதிய ஜனதா கட்சி, என்பதை நாம் அறிந்து கொண்டு பேச வேண்டிய தேவையும் இருக்கிறது.                                                                      

- கொளத்தூர் மணி

Pin It