புலவர் புலமைப் பித்தன் 08.09.2021 அன்று முடிவெய்திவிட்டார். அவருக்கு வயது 86. நிறை வாழ்வு வாழ்ந்திருக்கிறார். சமரசமற்ற பெரியாரிஸ்ட். புரட்சிக் கவிஞர் மரபில் வந்த கவிஞர். எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது அவரை அரசவைக் கவிஞராக்கினார். அப்போது நடந்த நிகழ்வு ஒன்றை இப்போது நினைவு படுத்தியாக வேண்டும்.

pulamaipithanகவிஞர் கண்ணதாசன் அப்போது எம்.ஜி.ஆர். ஆட்சியை தீவிரமாக ஆதரித்து பத்திரிக்கைகளில் எழுதிக் கொண்டிருந்தார். அ.இ.அ.திமுக.வின் ஆதரவு ஏடான ‘தென்னகம்’ பத்திரிக்கையில் பெரியாரின் துணைவியார் நாகம்மையாரை இழிவுபடுத்துகிற கட்டுரை ஒன்றை கண்ணதாசன் எழுதியிருந்தார். அடுத்த இரண்டு நாட்களில் சென்னை அண்ணா சாலையில் உள்ள பாவாணர் அரங்கில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற புலவர் புலமைப்பித்தன் கண்ணதாசனைக் கடுமையாகச் சாடினார். அந்தக் கவிஞனை என்னுடைய ‘பாதக் குறடால்’அடிப்பேன். ‘செருப்பால் அடிப்பேன்’ என்று அவர் பேசினார்.

எம்.ஜி.ஆர்.க்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. தனது கட்சிக்கு ஆதரவாக இருக்கிற கண்ணதாசனை தனது ஆட்சியின் அரசவைக் கவிஞர் ஒருவர் இப்படி பேசியிருக்கிறாரே என்ற வருத்தத்தில் அவரை நேராய் அழைத்து வருத்தம் தெரிவிக்கச் சொன்னார். புலமைப் பித்தன் நெஞ்சை நிமிர்த்தி "நான் ஒரு போதும் வருத்தம் தெரிவிக்க மாட்டேன். நான் ஏற்றுக் கொண்டிருக்கிற தலைவர் பெரியார். தான் பேசிய எந்தப் பேச்சிற்காகவும் வருத்தம் தெரிவித்தது இல்லை" என்று நேருக்கு நேராகவே அவர் கூறிவிட்டார். பிறகு எம்.ஜி.ஆர்., புலமைப்பித்தன் சார்பில் தான் மன்னிப்புக் கேட்பதாகக் கூறினார்.

ஈழ விடுதலைக்கு தோளாக நின்று செயல்பட்டவர் புலவர் புலமைப் பித்தன். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அவர் மேலவைத் துணைத் தலைவர் பதவியில் இருந்தார். மேலவைத் துணைத் தலைவராக அவர் பதவியில் இருந்த காலத்தில் சென்னை மயிலாப்பூர் அப்பு முதலி தெருவில் உள்ள அவரது இல்லம் விடுதலைப் புலிகளின் சரணாலயமாக செயல்பட்டது. பல புலிகள் அந்த வீட்டிற்கு வருவதும் தங்குவதுமாக இருந்தார்கள். முதல்வர் எம்.ஜி.ஆரிடம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை நெருக்கமாகக் கொண்டு வந்து சேர்த்தலில் புலவருக்கு பெரும் பங்கு உண்டு.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் வந்து போகின்ற இல்லமாகவும் அவரது இல்லம் இருந்தது. திரைப்படத் துறையில் அவர் கால் பதித்தார். அவர் எழுதிய பல பாடல் வரிகள் திராவிட இனத்தையும், தமிழனையும் வரலாற்று வரிகளால் பெருமைப்படுத்தி இருக்கிறது. இன்றும் அந்த பாடல்கள் உயிரோட்டமுள்ள பாடல்களாக உலா வந்து கொண்டிருப்பதை நாம் குறிப்பிட்டாக வேண்டும்.

அரசு நடத்திய நிகழ்ச்சிகளாக இருந்த உலக தமிழ் மாநாடுகளில் கவிதைகள் படிப்பதும் கூட அவர் பகுத்தறிவை விடாமல் முழங்கி வந்தார். எந்த மேடையிலும் தனது கொள்கையை அவர் சமரசம் செய்து கொண்டதே இல்லை. ‘பெரியார் பெருங்காவியம்’ ஒன்றை எழுதுகின்ற முயற்சியில் அவர் இறங்கினார். ஆனால் அந்தப் பணி முற்றுப் பெறாமலே போய் விட்டது. பெரியாரைப் பற்றி ஏராளமான கவிதைகளை அவர் எழுதி குவித்திருக்கிறார்.

“ஆயிரம் ஆண்டாய் சிறையே கோயிலாய் எண்ணிய குருட்டு மாந்தர் விழிக்கு விடுதலை வெளிச்சம் கொடுத்த அறிவுக் கோமகன் தான் நம் பெரியார்” என்று அவர் எழுதினார்.

“ஊனப்படுத்திய உளுத்தர்கள் மீது மான நட்ட வழக்கு தொடுக்க கருப்படை தரித்த முதல் வழக்கறிஞன், தருப்பைகள் போட்ட சதித்திட்டத்தை சுட்டுப் பொசுக்கிய துப்பாக்கி” என்று அவருடைய கவிதைகள் பெரியாருக்காக வெடித்துக் கொண்டிருந்தன. தன்மானமிக்க அந்த கவிஞருக்கு நம்முடைய புகழ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்வோம்.

***

மொத்தமாய் கிடைத்த முகவரி

periyar 312அள்ளப் பழுத்த
அழகு முகத்தில்
வெள்ளைத் தாடி
விரிந்து கிடப்ப
கறுப்புடை போர்த்த
சிவப்பு ஞாயிறே!

செருப்பாய் கிடந்த
செந்தமிழ் இனத்துக்கு
அரியணை ஏறி
துரைத்தனம் நடத்தும்
உரிமை பெற்றுத் தந்தவனே!

தமிழ்நாட்டு இலையுதிர் காலத்து
எழுந்த வசந்தமே! தத்துவ மூலதனமே!
தமிழர்க்கு மொத்தமாய்
கிடைத்த முகவரியே!

நீ ஒருவன் மட்டும் உதித்திருக்காவிடில்
தர்ப்பைப் புல்லினால்
தமிழனின் கழுத்தைச்
சுருக்குப்போட்டு
தொங்க வைத்திருப்பர்!

- கவிஞர் புலமைப்பித்தன்

Pin It