சைவ வெள்ளாள வாலிபர் பி.ஏ., படித்திருக்கிறார். வயது 23. கல்யாண மாகாதவர். கொஞ்சம் ஆஸ்தியுண்டு. ஆங்கிலப் பத்திரிகையில் உதவி ஆசிரியர். அவருக்கு எந்த வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, படித்த, அழகுள்ள, ஓர் விதவைப் பெண் தேவை.

கீழ்க்கண்ட விலாசத்திற்கு எழுதவும்.

ஓ. ஊ/டி. பத்ராதிபர் ‘குடி அரசு’
ஈரோடு

20.1.1929 ஆம் நாளிட்ட ‘குடிஅரசு’ இதழின் ஆறாம் பக்கத்தில் வெளியான விளம்பரம் இது. இதைப் பார்த்த விதவைப் பெண் யாரும் பதில் எழுதவில்லை. கணவனை இழந்த பெண் மறுமணம் செய்ய முன்வராத நிலைமை தான் 70 ஆண்டுக்கு முன் இருந்தது. விளம்பரம் போட்டும் பெண் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அந்த உதவி ஆசிரியருக்கு. ‘விதவைப் பெண் கிடைக்காவிட்டால் என்ன... கலப்புத் திருமணம் செய்து கொள். அதுவும் தேவதாசி ஒழிப்பு தீர்மானப்படி தேவதாசி இனப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளேன்’ என்று உடனிருந்தவர்கள் சொன்னார்கள். பத்திரிகையின் ஆசிரியரான தந்தை பெரியாரும் அதையே சொன்னார்.

பெண் தேடும் படலத்தில் சென்னை ஜார்ஜ் டவுனில் பிடில் வித்வானாக இருந்த டி.சுப்பிரமணிய பிள்ளையின் மூத்த மகள் குஞ்சிதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது பி.ஏ. இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். தனது உதவி ஆசிரியருக்கு பெண் கேட்டு சுப்பிரமணிய பிள்ளையின் வீட்டுக்குப் போனார் பெரியார். ‘கடவுள் இல்லை’ என்று பிரச்சாரம் செய்யும் பெரியாருக்கு அந்த வீட்டில் துளசி மாடமும், லட்சுமி படமும் இருந்ததை பார்த்த போது, இவ்வளவு ஆசாரமானவர் சம்மதிப்பாரா என சற்று யோசனைதான். இருந்தாலும் நேரடியாக கேட்டார். அவர் யோசித்த மாதிரியே சுப்பிரமணிய பிள்ளை ஏற்கவில்லை. பேசிப் பேசியே ஒப்புக் கொள்ள வைத்தார் பெரியார். மாப்பிள்ளையை பார்க்க ‘குடிஅரசு’ அலுவலகத்துக்கு சுப்பிரமணிய பிள்ளை வந்தார். உலக விஷயங்கள் மொத்தத்தையும் கரைத்துக் குடித்து வைத்திருந்த உதவி ஆசிரியரின் பேச்சு அவரைக் கவர்ந்தது. அந்த மாப்பிள்ளைதான் ‘குத்தூசி’ என்று அழைக்கப்படும் குருசாமி!

தொண்டை மண்டல முதலியார் வகுப்பைச் சேர்ந்த குருசாமிக்கும், இசை வேளாளர் வகுப்பைச் சேர்ந்த குஞ்சிதத்துக்கும் நடந்த இந்த திருமணத்தைத்தான் - திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ‘முதல் கலப்புத் திருமணம்’ என்று சொல்வார்கள். திருமணம் நடக்க சில நிமிடங்களே இருந்த போது, குருசாமியின் ‘தங்கை கிணற்றில் விழுந்து இறந்துவிட்டதாக தந்தி வந்தது. ‘இந்தக் கல்யாணத்தை நிறுத்துவதற்காக வந்த தந்தி இது’ என்று சொல்லிவிட்டு, பதட்டமே இல்லாமல் திருமணம் செய்து கொண்டார் குருசாமி. அவர் நினைத்ததே உண்மையாகவும் இருந்தது.

பூ சூடுவது, பொட்டு வைப்பது போன்றவை மத சம்பிரதாயங்கள் என்று திருமணத்துக்குப் பிறகு குஞ்சிதம் கை விட்டார். நகைகளும் அணிவதில்லை என்று முடிவெடுத்தார். எங்கே போனாலும், ‘இவர் விதவை போலிருக் கிறது’ என்று பிறர் நினைக்கும் அளவுக்கு அவரது தோற்றம் இருக்குமாம். திருமணம் நடந்த அடுத்த ஆண்டு தான், இருவருமே பி.ஏ. பட்டம் பெற்றார்கள். சேர்ந்தே பட்டமளிப்பு விழாவுக்கு போனார்கள். ஐந்து ஆண்டுகள் கழித்து குஞ்சிதத்துக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ‘ரஷ்யா’ என்று பெயர் வைத்தார்கள்.

‘சோலை மலரே! சுவர்ணத்தின் வார்ப்படமே!
காலையிளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே!”

என்ற தாலாட்டுப் பாடலை இந்தக் குழந்தையை பார்க்க வந்த இடத்தில்தான் எழுதிக் கொடுத்தார் பாரதிதாசன்.

குஞ்சிதம். சென்னை ஜார்ஜ் டவுன் டே ஸ்கூலில் படித்து பள்ளி இறுதித் தேர்வில் தங்க மெடல் பரிசு பெற்றவர். பொருளாதாரம், அரசியல் இரண்டையும் சிறப்பு பாடமாக எடுத்து ராணி மேரி கல்லூரியில் படித்தார். லேடி வெலிங்டன் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி பட்டம் பெற்றார். திருநெல்வேலி அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி யில் 1933-ல் ஆசிரியராக நியமிக்கப் பட்டார். அப்போது குருசாமி சென்னையில் வேலை செய்து வந்தார். குஞ்சிதமும் சென்னையிலேயே வேலை கிடைத்தால் நல்லது என்று நினைத்தார்.

சென்னையில் தனியார் பெண்கள் பள்ளியில் வேலை கிடைத்தது. வேலையில் சேர்ந்ததும் பள்ளி நிர்வாகி அழைத்தார்.

“உங்கள் பெயர்தான் திருமதி குஞ்சிதமா?”

“ஆமாம்.”

“நீங்கள் இந்துப் பெண் தானே?”

“ஆமாம்.”

“நெற்றியில் ஏன் பொட்டு வைக்க வில்லை?”

“அப்படியே பழகி விட்டேன்.”

“இனிமேலாவது வைத்துக் கொள்வதில் ஆட்சேபணை இல்லையே?”

“வைக்க வேண்டாமென்று முடிவெடுத்திருக்கிறேன்”

“உங்கள் கணவர் பெயர்?”

“குருசாமி.”

“அப்படியா... நான் கேள்விப்பட்டது சரியாகிவிட்டது. உங்களைப் போன்றவர்களுக்கு எங்கள் பள்ளியில் வேலை தர முடியாது” என்று சொல்லி அனுப்பிவிட்டார். சிரித்துக் கொண்டே வந்துவிட்டார் குஞ்சிதம்.

மயிலாப்பூர் தேசிய பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தார். தாண்டுவது, ஓடுவது என்று பெண்களுக்கான உடற் பயிற்சி முறையை அறிமுகப்படுத் தினார். கூடைப்பந்து, பேட்மின்டன், டென்னிஸ் விளையாட்டில் பல பரிசுகளை பெற்றார். இந்த நிலையில் ஸ்ரீரங்கத்தில் சுயமரியாதை இயக்க மாநாடு நடந்தது. அதற்கு தலைமை தாங்க குஞ்சிதத்தை பெரியார் அழைத் தார். இவரும் சென்றார். மாநாட்டில் கடுமையாக முழக்கமிட்டார். இது பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வர, மூன்று மாத சம்பளத்தை (மாதம் ரூ.75) கையில் கொடுத்து நீக்கி விட்டார்கள். இது நடந்தது 29.3.1934-ல்.

கடலூர் பெண் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். பிறகு சென்னை மாநகராட்சி பள்ளியில் சேர்ந்தார். அப்போது சென்னை மாநகராட்சியில் தி.மு.க. ஆட்சி நடந்து வந்தது. திராவிடர் கழகத்தில் இருந்து கொண்டு, தி.மு.கவை கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார் குருசாமி. அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், ‘குஞ்சிதம் தான் சூப்பரிண்டென்ட் பதவிக்கு தகுதியானவர். அவருக்கே இந்த பதவியை தர வேண்டும்’ என்று அண்ணா கட்டளையிட்டார். தி.மு.க. ஏகமனதாக முன்மொழிய, காங்கிரஸ் வழி மொழிய குஞ்சிதத்துக்கு பதவி கிடைத்தது. கிடைத்த சில நாட்களில் நோய்வாய்ப்பட்டு இறந்தார் குஞ்சிதம்.

“குஞ்சிதம், சுயநலம் கொஞ்சமும் இன்றி எவ்வித பலனையும் எதிர்பாராமல் உழைத்தவர். அவருடைய உழைப்புக்குத் தக்க பயனை அனுபவிக்கவுமில்லை. அவரைப் போல் யார் இருக்கிறார்கள்?” என்று பெரியாரே சொல்லுமளவிக்கு செயல்பட்டார் குஞ்சிதம்.

குஞ்சிதம் இறந்தபோது ‘குத்தூசி’ குருசாமி எழுதிய மூன்று கட்டுரைகள் பிரபலமானவை. “வாழ்க்கைத் துணையை இழந்த கணவனால் எழுதப்பட்ட கற்பனைக் கட்டுரைகள்” - குருசாமியின் எழுத்தாற்றலுக்கு மகுடம்!

(‘அவள் விகடன்’ ஜூலை இதழில் ‘அரசியல்-அரசியர்’ தொடரில் ஞாநி எழுதிய கட்டுரை)

Pin It