மோடி அமைச்சரவையில் பல அறிவுக் கொழுந்துகள் இருக்கிறார்கள். டார்வின் பரிணாம வளர்ச்சி கோட்பாடே தவறு. மனிதர்களை குரங்குகள் என்று பேசலாமா என்று ஆவேசப்பட்டார் முன்னாள் பா.ஜ.க. மத்திய அமைச்சர். அவர் பெயர் சத்யபால் சிங். மகாராஷ்டிராவில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர். குரங்குகள் இழிவானவை என்று கூறும் இவர்கள்தான் அனுமானை கடவுளாக்கி ‘அனுமான் ஜெயந்தி’யும் கொண்டாடுகிறார்கள். மாற்றுக் கருத்து பேசுவோர் கூட்டங்களில் எல்லாம் கலவரம் செய்யவே சில கும்பல் தமிழ்நாட்டில் அலைந்து கொண்டிருக்கிறது. அப்படி கலவரம் செய்யும்போது அவர்கள் போடுகிற முழக்கமே ‘ஜெய் அனுமான்; ஜெய்காளி’ என்பதுதான்.

இப்போது மத்திய வர்த்தகத் துறை அமைச்சராக இருக்கும் பியுஷ்கோயல் என்பவர் ஒரு அசத்தலான அறிவியல் ஆராய்ச்சியை அவிழ்த்து விட்டிருக்கிறார். “நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது என்பதற்கு கூறப்படும் புள்ளி விவரக் கணக்குகளை நம்பி விடாதீர்கள். கணிதத்திற்கும் பொருளாதாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதுபோல் கணிதத்துக்கும் அறிவியலுக்கும்கூட சம்பந்தம் இல்லை. புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த அய்ன்ஸ்டின் கணிதம் தெரியாதவர்தானே” என்று ஒரு அதிரடி கேள்வியை எழுப்பி அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார்.

“அய்யா, புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது அய்ன்ஸ்டின் அல்ல; அவரது பெயர் அஸ்சக் நியூட்டன். அய்ன்ஸ்டின் பிறப்பதற்கு முன்பே இன்றிலிருந்து 200 ஆண்டுகளுக்கு முன்பே நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்து விட்டார்” என்று சுட்டிக் காட்டிய பிறகு, “அப்படியா, வாய் தவறி சொல்லி விட்டதாக வைத்துக் கொள்ளுங்கள்” என்று நழுவி விட்டார். நம்மைக் கேட்டால் ஒரு இலவச யோசனையைத் தருகிறோம். இந்த அமைச்சர்கள் எல்லாம் எதை யார் கண்டுபிடித்தார்கள் என்று மண்டையைப் போட்டுக் குழப்பி, உளறிக் கொண்டிருக்கத் தேவையில்லை .

“எல்லாவற்றையும் கண்டுபிடித்தது உலகைப் படைத்த ‘பிர்மா’தான். அந்த பிர்மாவைக் கண்டுபிடித்து நாட்டுக்கு அறிமுகப்படுத்தியது வேதம் படித்த ‘பிராமணர்கள் தான்’ என்று ஒரே வரியில் கூறிவிட்டால், கதை முடிந்தது. பிறகு எவன் எதிர்த்துப் பேசுவான்? அப்படியே பேசினாலும் இந்து மதத்தைப் புண்படுத்திய தேச விரோதி என்று கூறி தேச விரோத சட்டத்தில் கைது செய்து சிறையில் தள்ளி விடலாம். மோடியின் 100 நாள் சாதனைப் பட்டியலிலும் இந்த அடக்குமுறைகளை ‘மதத்தின் பாதுகாப்பில் உறுதி காட்டிய மோடி ஆட்சி’ என்று கூறி பெருமையடித்துக் கொள்ளலாம்!

எப்படி, சரி தானே?

Pin It