தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்திய மக்களுக்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என்று வருணிக்கப்படுகிறது. முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டுவந்த பாராட்டுக்குரிய மக்கள் நலச் சட்டங்களில் இது முக்கியமானது. இச்சட்டத்தின் மூலம் அரசின் திட்டங்கள், அவை நடைமுறைப்படுத்தப்படும் முறைகள், அரசு அதிகாரிகளின் பணிகள் ஆகியவற்றைக் கண்காணிக்கவும், கேள்வி கேட்கவும் சாதாரண மக்களால்கூட முடிந்திருக்கிறது. ஊழல் முறைகேடுகள் வெளிக்கொணருவதிலும், அரசு அதிகாரிகளை வேலை வாங்குவதிலும் இது முக்கியமான பங்கை வகிக்கிறது.

பிரதமரின் வெளிநாட்டுப் பயணம், அதற்கு ஆகும் செலவு, அதனால் என்ன விளைவு ஆகியவற்றை தகவல் பெற்று மக்களின் பார்வைக்கு வைக்க முடிந்திருக்கிறது. இதற்கு முன்பெல்லாம் இவை சாத்தியம் இல்லாததாக கருதப்பட்டது. தற்போது சில தகவல்கள் தவிர பல தகவல்கள் மக்கள் பார்வைக்குக் கிடைக்கின்றன.

RTI

12.01.2005 அன்று நடைமுறைக்கு வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் "அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருப்பதும், ஊழலைக் கட்டுப்படுத்தி தவிர்ப்பதும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள் மக்களுக்கு தேவையான தகவல்களை தரக் கடமைப்பட்டுள்ளதை உறுதி செய்வதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நோக்கம்" என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிப்பது எப்படி உரிமையோ, அதுபோல் தகவல் அறிவதும் உரிமையாகும். ஏற்கனவே ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் "வாக்களிக்கும் உரிமை, தகவல் அறியும் உரிமை இரண்டையும் அடிப்படை உரிமை" என்று குறிப்பிட்டுள்ளது.

சில மாதத்திற்கு முன்பு மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் "தகவல் அறியும் உரிமைச் சட்ட திருத்த மசோதா 2018" கொண்டு வரப்படும் என்று அறிவித்தார். அப்போதே இச்சட்டத்தை வலுவிழக்கும் வகையில் திருத்தம் செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது என்பதை உணர முடிந்தது.

தற்போது நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நியமிக்கப்படும் தகவல் ஆணையர்களின் பதவிக்காலம், ஊதியம்-படிகள்" ஆகியவற்றை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு தனதாக்கிக் கொள்ள முயற்சிப்பதை திருத்தங்கள் உணர்த்துகின்றன. "தேர்தல் ஆணைய பதவியைப் போல் தகவல் அறியும் சட்டப்படியான ஆணையர்கள் பதவி, அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்டதல்ல. எனவே ஆணையர்கள் ஊதியம்-படிகள், பதவியாண்டு போன்றவற்றை தீர்மானிக்கும் உரிமை அரசுக்கு வேண்டும்" என்று மத்திய அரசு கூறுகிறது.

இதற்கு ஆரம்ப கட்டத்திலேயே எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது மத்திய தகவல் ஆணையம். "தலைமைத் தகவல் ஆணையர் பதவியை தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு கீழாகத் தாழ்த்துகிறது" என்பது அதன் முதன்மையான குற்றச்சாட்டு. தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதா 2018ன் அபாயத்தையும், அதற்கு பின்னுள்ள நோக்கத்தையும் குறிப்பிட்டு அதுகுறித்து அனைத்து தகவல் ஆணையர்களையும் விவாதிக்க அழைத்திருக்கிறது மத்திய தகவல் ஆணையம். மத்திய அரசின் இந்த திருத்தம் ஒரு பக்கம் மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கிறது என்றால் மற்றொரு பக்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்கிறது.

ஏற்கனவே தகவல் கேட்டு மனு செய்தால் தகவல் கிடைக்க தாமதம் ஆகிறது அல்லது சம்மந்தம் இல்லாத பதிலாக வருகிறது என்று தகவல் அறியும் ஆர்வலர்கள் வருந்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தகவல் ஆணையத்தில் இருக்கும் காலி இடங்களை நிரப்பாமலும், அதற்கு வழங்கும் நிதியைக் குறைத்தும் மத்திய அரசு அதன் செயல்பாடுகளை முடக்குவதாக பலரும் குறைபட்டுக் கொள்கிறார்கள். "மத்தியத் தகவல் அறியும் ஆணையத்தில் 23,500 மேல்முறையீடுகள் மற்றும் புகார்கள் இன்னமும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே இருக்கிறது" என்று தகவல் அறியும் மக்கள் உரிமைக்கான தேசியப் பிரச்சாரம் தெரிவிக்கிறது. மத்திய அரசின் இந்த திருத்தத்தால் இந்நிலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

அது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துவிடும். எப்படி ஆங்கிலேயர் ஆட்சியில் "அரசு ரகசிய சட்டம்-1923" கொண்டு வந்து மக்களுக்கு தெரிய வேண்டிய அடிப்படைத் தகவல்கள் மறைக்கப்பட்டதோ, அந்த நிலைக்கு இச்சட்டத் திருத்தம் இட்டுச் செல்லும். இம்மசோதா மறு ஆய்வுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் வலியுறுத்தி இருக்கின்றன. "ஒவ்வொரு இந்தியரும் உண்மையை அறியத் தகுதியானவர்கள். ஆனால் பாஜக உண்மையை மறைக்க விரும்புகிறது. மக்களிடம் இருந்து உண்மையை மறைக்கவும், அதிகாரத்தில் உள்ளவர்களை கேள்வி கேட்கவும் கூடாது என பாஜக விரும்புகிறது" என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மக்கள் கையில் கிடைத்திருக்கும் ஓர் அரிய சட்ட ஆயுதமே தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகும். இந்த சட்டம் கொண்டு வரப்படுவதற்கு சமூக ஆர்வலர் அருணாராய் உள்ளிட்ட பலரது உழைப்பு மிகுந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்தம் குறித்து மக்களோடு உரையாடுவதற்கு மத்திய அரசு தயாராக இல்லை என்பது அதன் நடவடிக்கையின் மூலம் தெரிய வருகின்றது. முன்பு ஊழலை வெளிப்படுத்துபவர்கள் பாதுகாப்பு திருத்த மசோதா கொண்டு வந்தபோதும் அதனை வெளிப்படையாக அரசு அறிவிக்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். விவாதம், ஆலோசனை, கருத்துப் பரிமாற்றம் இல்லாமல் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நினைக்கும் அரசு எப்படி ஜனநாயக அரசாக இருக்க முடியும்?

கருத்து உரிமை, பேச்சு உரிமை, வாழ்வு உரிமை, வழிபாட்டு உரிமை, சட்ட உரிமை, சம உரிமை போன்று தகவல் அறியும் உரிமையும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படையான உரிமையாகும். இதை பலவீனப்படுத்த முனைவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

- வி.களத்தூர் எம்.பாரூக்

Pin It