மறைந்த இந்திய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ஏ.எஸ்.கே., ‘பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈவெ.ரா’ என்ற தனது நூலில் ஆபாச விநாயகன் பிறப்பை அலசுகிறார்.

பிள்ளையார் பற்றிய கதையை விளக்க வேண்டியது அவசியம். இந்த உண்மையை உணர்ந்தபின் பிள்ளையார் கடவுள்தானா - பிள்ளையார் பொம்மையை உடைத்ததினால் பெரியார் அவர்கள் என்ன அடாத செயலைச் செய்துவிட்டார் என்பதைத் தெளிவாக உணர முடியும்!

புராணக் கதைகளில் கணபதியின் பிறப்பே பல்வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. எது உண்மை என்பதை யாரும் கூற முடியாது. ஆனால் ஒன்று தெளிவு - கற்பனையின் விளைவே கணபதி. கீழ்க்கண்ட பல்வேறு கதைகள் இதைத் தெளிவாக நிரூபிக்கின்றன.

கணபதி பெண்ணில்லாமல் ஆணிற்குப் பிறந்தவரென்றும், இதற்கு நேர்மாறாக ஆணில்லாமல் பெண்ணுக்குப் பிறந்தார் என்றும் கூறப்படுகின்றன. புராணக் கதையில் கணபதியின் பிறப்பு அசிங்கமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. பார்வதி தன் உடல் அழுக்கை உருண்டையாக்கி விளையாடிக் கொண்டிருந்தாளாம். உருண்டையின் மீது அன்பு சொரிய அதற்கு அவள் உயிர் கொடுத்து அதைத் தன் மகன் என்று அழைத்தாளாம்.

மற்றொரு கதை கணபதியின் பிறப்பை வேறு விதமாகச் சித்தரிக்கிறது. பார்வதி தன் உடல் அழுக்கைக் கழுவி அதை கங்கா நதியின் முகத்துவாரத்தில் உள்ள யானைத் தலை இராட்சசி மாலினியைக் குடிக்க வைத்தாளாம். இதன்  விளைவாக மாலினி கர்ப்பம் தரித்து பிறகு ஒரு குழந்தையைப் பெற்றாளாம். அக்குழந்தையைப் பார்வதி எடுத்துச் சென்று விட்டாளாம்.

மேற்கூறிய கதைகள் எதுவும் கணபதிக்கு யானைத் தலை ஏன் வந்தது என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. பிரம்ம வைவர்த்த புராணத்தில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது. கணபதி பிறந்த நேரத்தில் சனிப் பார்வை தோஷத்தால் தலை இல்லாமல் பிறந்தாராம். கணபதியின் தாய் தன் குழந்தைக்குத் தலை இல்லையே என்று தேம்பித் தேம்பி அழ, விஷ்ணு பகவான் ஒரு யானைத் தலையை ஒட்ட வைத்தாராம். ஆனால் ஸ்கந்த புராணம் இதை மறுக்கிறது.

கணபதி தன் தாயின் வயிற்றில் இருந்தபோது சிந்தூரா என்ற இராட்சசி வயிற்றில் புகுந்து குழந்தையின் தலையைக் கடித்துத் தின்று விட்டாளாம். பிறந்த குழந்தைக்குத் தலை இல்லாமல் போகவே அக்குழந்தை யானைத் தலையைக் கொண்ட கஜாசூரன் என்ற இராட்சசன் தலையை வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டதாம். தலையும் கண்ணும் இல்லாத இக் குழந்தை தனக்குத் தலை இல்லை என்று எங்ஙனம் உணர்ந்தது? கஜாசூரனின் யானைத் தலையை எப்படி வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டது என்பதை விகந்த புராணம் தெளிவுபடுத்தவில்லை.

Pin It