1992 ஜூன் மாதம் 20ஆம் தேதி தர்மபுரி மாவட்ட மலைக் கிராமமான வாச்சாத்தி பழங்குடி மக்கள் மீது அந்தக் கொடூரமான தாக்குதல் நடந்தது. சந்தன மரங்களை வெட்டி சட்டவிரோதமாகக் கடத்துகிறார்கள் என்று சந்தேகித்து வனத்துறை – வருவாய்த்துறை – காவல்துறையினர் 269 பேர் சூழ்ந்து கொண்டு, 655 மக்கள் வசிக்கும் அந்த கிராமத்தை சூறையாடினர். குழந்தைகள், பெண்களை கொடூரமாக தாக்கியதோடு, நீர்நிலைகளில் விஷம் கலந்தனர். 18 பெண்கள் பாலுறவு வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு தெரிந்தே இவ்வளவு கொடுமைகளும் நடந்தன. இந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யக்கூட ஜெயலலிதா ஆட்சி தயாராக இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் சி.பி.அய் விசாரணைக் கோரி உயர்நீதிமன்றம் சென்றார்கள். சமூக இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டின, நான்கு ஆண்டுகள் கடந்து, 1996இல் சி.பி.அய் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. தொடர்ந்து தர்மபுரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 15 ஆண்டுகள் வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டன. நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக 2011இல் தீர்ப்பு வழங்கியது.

பாலுறவு வன்முறை, தீண்டாமை ஒழிப்புச் சட்டங்களின் கீழ் அனைவரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் உறுதி செய்தது. தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அதிகாரிகள் தீர்ப்புக்கு தடை வாங்கினர். தொடர்ந்து வந்த ஆட்சிகள் குற்றவாளிகளைக் காப்பாற்றவே முயன்றன என்பது கசப்பான உண்மை. உயர்நீதிமன்றம் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ததோடு அதிமுக ஆட்சியையும் கடுமையாகக் கண்டித்தது.

30 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளிகளின் குற்றத்தை உறுதிப்படுத்தி தீர்ப்பு வழங்கியிருப்பது பாராட்டி வரவேற்கத்தக்கதாகும். நீதிபதி வேல்முருகன் வாச்சாத்திக்கே நேரில் சென்று மக்களிடம் உண்மையை கேட்டறிந்தார். இப்போது பிணையில் உள்ள அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட 265 பேரில் இறந்தவர்கள் போக உயிருடன் இருப்பவர்கள் 215 பேர், 2011இல் தீர்ப்பளித்த தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உயிருடனிருந்த 215 பேரில் 12 பேருக்கு 10 ஆண்டுகள், 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1-3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்ததை நீதிபதி வேல்முருகன் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கான இழப்பீட்டுத் தொகையை 10 இலட்சமாக உயர்த்தி வழங்கியதோடு, அதில் 5 இலட்சத்தை குற்றவாளிகளிடமிருந்து பெற வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டோருக்கு அரசு வேலை அல்லது சுய தொழில்களுக்கான ஏற்பாடுகளை அரசு வழங்கிட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அதிகாரி உள்ளிட்டோர் மீதான புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிரிமினல் நீதித்துறையின் மீது நம்பிக்கையூட்டும் தீர்ப்பு என்பதோடு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் வலிமையையும் இத்தீர்ப்பு உணர்த்துகிறது. நீதி வென்றுள்ளது. தீர்ப்பை பாராட்டி வரவேற்கிறோம்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It