பிரிட்டிஷ் ஆட்சி - காங்கிரஸ் ஆட்சி காலங்களில் தமிழர் உரிமைகள் பறிக்கப்பட்ட வரலாறுகளைத் தொடர்ந்து இத்தொடரில் - அதைவிட மோசமாக பா.ஜ.க. ஆட்சியின் ‘இருண்டகால’ வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

பா.ஜ.க.வின் இருண்ட காலம்

golwalkarஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத இருண்ட காலம் பா.ஜ.க.வின் ஆட்சிக் காலம். மவுரியப் பேரரசை வீழ்த்திவிட்டு புஷ்யமித்திர சுங்கன் ஆரிய வேதமத ஆட்சியை நிறுவிய காலம். இப்போது மீண்டும் திரும்பி இருக்கிறது. ‘இராஷ்டிரிய சுயம் சேவக் சங்’ (ஆர்.எஸ்.எஸ்.) என்ற வேத கால ஆட்சியை மீட்டுருவாக்கம் செய்யும் அமைப்பின் காலடியில் மோடி ஆட்சியின் அதிகாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனியம் அதிகார மய்யங்களை வழி நடத்தி வருகிறது. ஒற்றை ஆட்சி என்ற இலக்கு நோக்கி சட்டங்கள் மாற்றப்படுகின்றன; கருத்துரிமைகள் நசுக்கப்படுகின்றன. ‘மதச் சார்பற்ற’ ஆட்சி என்ற அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுள்ள சொற் றொடர் முற்றாக உயிரற்றவையாக்கப் பட்டுள்ளன. மாநிலங்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு, ‘சமஸ்கிருத’ பண்பாடே ஒரே பண்பாடு என்ற திணிப்புகள் வேகமெடுத்துள்ளன.

1) தேசியம் (Nationalism) 2) எதேச்சதிகாரம் (Authoritarianism), 3) மதப் பெரும்பான்மை (Majoritarianism) என்ற மூன்று அடிப்படைத் தளங்களில் இந்த பார்ப்பனிய அரசு கட்டமைக்கப்பட்டு வருகிறது. ‘தேசியம்’ என்ற பா.ஜ.க.வின் கருத்தாக்கம் எது? இது ‘இந்து தேசியம்’ என்பதுதான். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இப்படி கூறுகிறார்:

“இங்கிலாந்தில் வசிப்பவர்கள் ஆங்கிலேயர்கள் என்று அழைக்கப்படும்போது, ஜெர்மனியில் வசிப்பவர்கள் ஜெர்மானியர்கள் என்று அழைக்கப் படும்போது, அமெரிக்காவில் வசிப்பவர்கள் அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படும்போது இந்துஸ்தானத்தில் இருப்பவர்கள் மட்டும் ஏன் இந்துக்கள் என்று அழைக்கக் கூடாது” (2014, ஆகஸ்ட் 10இல் கட்டாக்கில் பேசியது). அதே உரையில், “இந்தியாவில் உள்ள அனைவரின் கலாச்சார அடையாளம் இந்துத்துவா. நாம் அனைவருமே இந்த மாபெரும் கலாச்சார வழி வந்தவர்கள்” என்றும் குறிப்பிட்டார்.

இந்த உரை எதை உணர்த்துகிறது? இந்துக்கள் அல்லாத பிற மதத்தினரும் மதங்கள், கடவுளை மறுக்கும் நாத்திகர்களும், அதாவது இந்து அடையாளத்தை ஏற்க மறுக்கும் எவரையும் இந்த நாட்டின் குடிமக்களாகவே கருதக் கூடாது என்பதே இந்த உரையின் மய்யமான கருத்து. இது அரசியல் சட்டத்தின் நோக்கங்களுக்கே எதிரானது; அரசியல் நிர்ணய சபையிலேயே இது குறித்து விவாதங்கள் நடந்தன. அரசியல் சட்டத்தின் முதலாவது பிரிவு - ‘இந்தியா, அதாவது பாரத்’ மாநிலங்களின் ஒன்றியமாக (Union of States) இருக்கும் என்று வரையறுத்தது. ‘இந்துஸ்தான்’ என்ற சொல்லை ஏற்கவில்லை. சங் பரிவாரங்கள் ‘இந்தியா’ என்ற சொல்லையே ஏற்க மறுப்பவர்கள்; அது இஸ்லாமியர், கிறிஸ்தவர்களை உள்ளடக்கிய சொல் என்றும், ‘பாரதியம்’ என்பதே இந்துக்களுக்கான அடையாளம் என்றும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத் தலைவர் கோல்வாக்கர் கூறுகிறார். (ஆதாரம்: Bunch of thoughts - நூல்) இதன் காரணமாக பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவாரங்களின் அனைத்து அமைப்பு களுமே ‘பாரதிய’ எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ளன.

ஒடுக்குதலிலிருந்து ஒழித்தல் நோக்கி...

மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு மொழி அடையாளத்தை நீக்கி மத அடையாளமான இந்து தேசமாக்க அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்துகிறது பா.ஜ.க. ஆட்சி. இந்திய தேசியம் என்ற இப்போதுள்ள கட்டமைப்பே பார்ப்பன-பனியா பன்னாட்டு சுரண்டலுக்கு கதவு திறந்துள்ளது. இனங்களின் உரிமைகளை ஒடுக்குகிறது என்பது நமது பார்வை. இப்போதுள்ள நடுவண் பா.ஜ.க. ஆட்சியோ ‘ஒடுக்குதல்’ என்ற எல்லைகளைத் தாண்டி மொழி இன அடையாளங்களை ‘ஒழித்தல்’ என்ற இலக்கை நோக்கி பாய்கிறது. இந்தியா பெரும்பான்மையாக இந்துக்களைக் கொண்ட நாடு எனும்போது ஏன் ‘இந்து’ நாடாக இருக்கக் கூடாது என்பதே இவர்களின் அடிப்படையான வாதம். பெரும்பான்மை வாதம் சரியானதா? இது குறித்து தெளிவும் புரிதலும் அவசியமாகிறது.

மதத்தின் அடிப்படையில் ‘பெரும்பான்மை’யை உறுதி செய்யும் வாதங்களுக்கு அம்பேத்கர் தெளிவான மறுப்பை முன் வைக்கிறார்.

இலண்டன் வட்டமேஜை மாநாட்டில் இது குறித்து விவாதங்கள் வந்தபோது அம்பேத்கர் எழுத்து பூர்வமாக இந்த விளக்கங்களை முன் வைக்கிறார்.

“மெஜாரிட்டி அடிப்படையிலான வாதத்தை முன்வைப்பவர்கள் ஒன்றை மறந்து விடு கிறார்கள். அதில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று அரசியல் பெரும்பான்மை (Political Majority), இரண்டு - (மத) வகுப்புவாத பெரும்பான்மை (Communal Majority), அரசியல் பெரும்பான்மை மாற்றத்துக்கு உட்பட்டது. அரசியல் பெரும் பான்மைக்குள் அடங்கியுள்ள பிரிவினர் மாறக் கூடியவர்கள் (Class Composition). ஆனால் (மத) வகுப்புவாத பெரும்பான்மை மாற்றத்துக்கு உள்ளாகவே முடியாது. அது பிறப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. அரசியல் பெரும்பான்மை என்ற வட்டத்துக்குள் யார் வேண்டுமானாலும் வரலாம். அது திறந்தே இருக்கும். (மத) வகுப்புவாதப் பெரும் பான்மைக்கான கதவுகள் எப்போதுமே மூடப் பட்டிருக்கும். அரசியல் பெரும்பான்மையின் அரசியல் என்பது ஒரு ஆட்சியை உருவாக்கு வதற்கும் அகற்றுவதற்கும் அனைவருக்கும் உரிமைகளை வழங்குகிறது. வகுப்புவாதப் பெரும்பான்மையோ இந்து மதத்தில் பிறந்திருப்போருக்கு மட்டுமே உரித்தானது; அவர்கள் மட்டுமே தீர்மானிக்கக் கூடியது.

அரசியல் பெரும்பான்மையை உறுதி செய்யும் ஒரு ஜனநாயக ஓட்டத்தில் மதப் பெரும்பான்மை அதற்கான அடையாளத்தோடு எப்படி பங்கெடுக்க முடியும்? மதப் பெரும்பான்மை என்ற அடையாளத்தை அங்கீகரித்து விட்டால் அது பரம்பரை ஆட்சிக்கு வழி திறந்து விடும். பிறகு மதப் பெரும்பான்மை கொடுங்கோல் ஆட்சியாகவே மாறிப் போய்விடும். ஜனநாயகத்தை சீர்குலைத்து விடும்” என்று அற்புதமாக விளக்கம் தந்தார் அம்பேத்கர்.

அடுத்ததாக, மதசார்பின்மை பற்றி குறிப்பிட வேண்டும். பா.ஜ.க.வும் சங்பரிவாரங்களும் அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுள்ள ‘மதச்சார்பின்மை’ என்பதை முற்றாகப் புறக்கணித்து வருகிறார்கள். இது போலி மதச் சார்பின்மை. சிறுபான்மை சமூகத் தினரை திருப்தி செய்யும் நோக்கம் கொண்டது என்கிறார்கள். 1976ஆம் ஆண்டு இந்திரா பிரதமராக இருந்தபோது அவசர நிலை காலத்தில் அரசியல் சட்டத்தில் 42ஆவது சட்டதிருத்தம் வழியாக சேர்க் கப்பட்டதுதான் சோஷலிசம், மதச்சார்பின்மை என்ற வார்த்தைகள் என்று பா.ஜ.க. வாதிடுகிறது.

“மதச்சார்பின்மை என்பதே மோசமான வார்த்தை (abusive word) அதைப் பயன்படுத்தவே கூடாது. வகுப்பு பதட்டங்களையே இது உருவாக்குகிறது என்று உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகவே அறிவித்தார். (நாடாளுமன்ற உரை 26.11.2016). அது மட்டுமல்ல; அரசியல் சட்டத்தின் முகப்புரையிலும் மதச்சார்பின்மை என்ற சொல்லை, சட்டத்தை உருவாக்கிவர்கள் இணைக்கவில்லை என்றும் அம்பேத்கரே அதை விரும்பவில்லை என்றும் நமது இந்துமதமே மதச்சார்பற்றதுதான் என்றும் பதவுரை, பொழிப்புரைகளை எழுதினார் ராஜ்நாத் சிங். ராஜ்நாத் சிங்கிற்கு அரசியல் சட்டம் குறித்த புரிதலே இல்லை என்றே கூற வேண்டும்.

இந்திய அரசியல் சட்டத்தில் ‘ஜனநாயகம்’ என்ற சொல்கூட அதை உருவாக்கியபோது இடம் பெற வில்லை. அதற்காக இந்தியா ஜனநாயக நாடே இல்லை என்றுகூட கூறிவிட முடியுமா? அதே சட்டத் தில்தான் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை; தேர்தலை நடத்தும் சுயாட்சி உரிமைக் கொண்ட தேர்தல் ஆணையம்; தேர்தல் பிரதிநிதித்துவ சட்டங்கள் இடம் பெற்றிருக்கின்றன. சட்டத்தின் உள்ளடக்கமே ‘ஜனநாயக நாடு’ என்பதைத் தெளிவு படுத்தும்போது அந்த வார்த்தையை சேர்க்கத் தேவை யில்லை என்ற முடிவுக்கு அரசியல் நிர்ணய சபை வந்தது. அதே பார்வையில்தான் ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தையும் தவிர்க்கப்பட்டது. ஆனால் ‘மதச்சார்பின்மை’ என்பதற்கான உள்ளடக்கங்கள் பல்வேறு சட்டப் பிரிவுகளில் இடம் பெற்றுள்ளன. (மத அடையாளமற்ற) குடிமகன் (பிரிவு 9) மதம், இனம், ஜாதி அடிப்படையில் பாகுபாடு கூடாது (பிரிவு 15), பொது வேலைகளில் பாகுபாடு கூடாது (பிரிவு 16), தனிமனித மத சுதந்திர உரிமை (பிரிவு 25) அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பாகுபாடு கூடாது (29(2), மத அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பாகுபாடு கூடாது (பிரிவு 325) போன்ற பிரிவுகள் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை உறுதிப்படுத்துகின்றன; இந்த நிலையில் மதச் சார்பின்மை என்ற வார்த்தை இடம் பெறாததாலேயே இது மதம் சார்ந்த நாடாகி விடாது.

(தொடரும்)

விடுதலை இராசேந்திரன்

Pin It