காவிரி நீர் உரிமைக்காக சென்னையில் பெரியாரிய-அம்பேத்கரிய-மனித உரிமை, தமிழ்தேசியம், பொதுவுடைமை இயக்கங்கள் ஒன்றிணைந்து சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை செப்.20 அன்று நடத்தின.

கைது செய்யப்பட்ட தோழர்களை காவல்துறை கொண்டு சென்ற  கீழ்ப்பாக்கத்திலுள்ள திருமண மண்டபம் எது தெரியுமா? அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கியவர்களும் ‘பிராமணர்’ களிலேயே மிகவும் உயர்வானவர்கள் என்று உரிமை கொண்டாடும் ‘சரசுவதி பிராமணர்களுக்கான’ திருமண மண்டபம். அந்த மண்டபத்தின் முதல் மாடியிலேய ‘சரசுவதி பிராமணர்’ சங்கத்துக்கான அலுவலகம் இயங்குகிறது.

500க்கும் அதிகமான தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மண்டபத்தின் தாழ்வாரத்திலேயே நிற்க வைக்கப்பட்டனர். மண்டபத்தை திறந்துவிட நிர்வாகிகள் மறுத்தனர். தோழர்கள் போராட்டத்துக்குப் பிறகே காவல்துறை தலையிட்டு மண்டபத்தை திறந்து விட முன் வந்தார்கள். உள்ளே மின் விளக்கு, மின் விசிறி போட மறுக்கவே அதற்கும் போராட்டம். அதன் பிறகே மின்சார இணைப்பை தந்தார்கள். ‘கழிவறை’களை மூடி விட்டனர். அவ்வளவு கூட்டத்துக்கும் ஒரே ஒரு கழிவறையை மட்டுமே திறந்து விட்டனர். ஆனாலும் போராட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் எந்த வன்முறைக்கும் இடமின்றி அமைதியாகவே கட்டுப்பாடுக் காத்தனர். இது ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை எதிர்த்துப் போராடிய தோழர்கள் காட்டிய பண்பாடு.

பா.ஜக. நடத்திய போராட்டம் ஒன்றோடு இதை ஒப்பிட்டுப் பார்ப்போம். கோவையில் இந்து முன்னணியைச் சார்ந்த சசிகுமார் என்பவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, பா.ஜ.க.வினரும் இந்து முன்னணியினரும் சென்னையில் தடைமீறி ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார்கள். பா.ஜ.க. தலைவர் தமிழிசை, தேசிய செயலாளர் எச்.ராஜாவும் இதில் பங்கேற்றனர். சுமார் 100 பேர் வேப்பேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அன்று பிற்பகல் சுரேஷ் என்ற இந்து முன்னணியைச் சார்ந்தவரைப் பணி நிமித்தமாக சந்திப்பதற்கு முகமது மீரான் என்ற இஸ்லாமிய இளைஞர் மண்டபத்துக்கு வந்திருந்தார். அவ்வளவுதான். வந்தவர், ‘இஸ்லாமியர்’ என்று தெரிந்தவுடன் பெட்ரோல் குண்டு வீச வந்திருக்கிறார் என்ற புரளியை கிளப்பி, தனியாக இந்து முன்னணி நண்பரை சந்திக்க வந்த அந்த இஸ்லாமியரை சூழ்ந்துக் கொண்டு தாக்கினர். பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அந்த இளைஞரை தாக்குதல் கும்பலிலிருந்து மீட்க வந்தபோது போலீசாரையும் தாக்கினர். இதனால் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சேட்டு என்வருக்கு மண்டை உடைந்து இரத்தம் கொட்டியது. இவ்வளவுக்கும் கட்சியின் பொறுப்புள்ள தலைவர்கள் அதே மண்டபத்தில் இருக்கிறார்கள்.

மண்டபத்தில் கைது செய்து வைக்கப்பட்டிருந்த பா.ஜ.க., இந்து முன்னணியினர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கைகளையும் தயார் செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக ‘தினமலர்’ நாளேடு (செப்.30) செய்தி வெளியிட்டுள்ளது. இது பா.ஜ.க., இந்து முன்னணியினரின் ‘பண்பாடு’.

ஒவ்வொரு இஸ்லாமியரையும் பகையாளர்களாகவே பார்க்கும் வெறுப்பு அரசியலே இவர்களை வழி நடத்துகிறது. எனவே அங்கே மனிதநேயத்தையோ பண்பாட்டையோ எதிர்பார்க்க முடியுமா?

Pin It