தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஏன் தீபாவளிக்கு வாழ்த்து கூறவில்லை, இது சங்கிகள் எழுப்புகிற ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. தொலைக்காட்சி விவாதங்களிலும் தொடர்ச்சியாக இதையே கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு பல விளக்கங்களை நம்மால் கூறமுடியும்.

தீபாவளிப் பண்டிகை என்பது என்ன? அது தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்த போராட்டத்தைப் பற்றி நடந்த ஒரு புராணக் கதை. தேவர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் வேதங்களை வைத்துக் கொண்டு மக்களை சுரண்டி பிழைத்த ஒரு கூட்டம். நாடோடியாக வந்த ஒரு கூட்டம், அவர்களை எதிர்த்துக் கேள்வி கேட்டவர்கள் உள்ளூர் மன்னர்களாக இருந்த அசுரர்கள். எனவே தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நீண்ட நெடிய போராட்டங்கள் நடந்திருக்கிறது என்பதைத் தான் புராணக் கதைகளாக எழுதி, அந்தப் புராணக் கதைகளில் தேவர்கள் உயர்வானவர்கள், அசுரர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற சிந்தனையை மக்கள் உள்ளத்தில் ஆழமாக விதைத்து விட்டார்கள். அந்த அடிப்படையில்தான் நரகாசுரன் என்பவன் அசுரன் அவன் அழிக்கப்பட வேண்டியவன், மகா விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து வந்து நரகாசுரனை அழித்தார், அதை கொண்டாடும் நாள்தான் தீபாவளி என்று கூறுகிறார்கள். ஒரு சிறிய கேள்வியை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. மனித மாண்புள்ள எவரும் சூழ்ச்சிகரமாக ஒருவர் கொல்லப்பட்டதை கொண்டாட்ட நாளாக நடத்த முடியுமா? பொதுவாக இறந்து போனவர்களை பற்றி விமர்சிப்பதே பண்பாடு குறைவானது என்று கருதுகிற நாம், சூழ்ச்சிகரமாக கொல்லப்பட்டவருக்கு விழா எடுத்துக் கொண்டாட வேண்டும் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

தமிழக அரசு தீபாவளி கொண்டாடுகிற மக்களை மதிக்கவில்லை என்று சொல்வதிலும் நியாயம் இல்லை. தீபாவளி கொண்டாடுகிற மக்களுக்கு அரசு செய்ய வேண்டிய கடமைகளில் எந்த கடமைகளில் இந்த அரசு தவறியிருக்கிறது என்பதையும் அவர்கள் சொல்ல வேண்டும். மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்வதில் இருந்து, போனஸ் வழங்குவதில் இருந்து, அவர்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கு பேருந்துகளை சிறப்பாக ஏற்பாடு செய்தது என்று இன்னும் சொல்லப்போனால் தீபாவளிக்கு அடுத்தநாள் கூட அரசு விடுமுறை என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. எனவே நம்பிக்கை கொண்ட மக்களை புண்படுத்துவது தமிழக அரசின் நோக்கம் அல்ல. ஆனால் இதன் உள்ளடக்கத்தை பகுத்தறிவு பூர்வமாக திராவிட இயக்க கொள்கையின் அடிப்படையில் நாங்கள் பின்பற்றுகிறோம் என்று காட்டிக்கொள்வது என்பது ஒரு இலட்சியத்தின் அடையாளம் ஆகும்.

இங்கே தமிழ்நாட்டில் நரகாசுரன் அழிக்கப்பட்டதை கொண்டாட்டமாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால், கேரளாவில் என்ன நடக்கிறது? மாபலி அசுரன் நல்லாட்சி நடத்தினான், நீங்கள் மீண்டும் வரவேண்டும் என்று சொல்லி இதே அசுரனை வரவேற்பதற்கு ஒரு விழாவாக ஓணம் பண்டிகை கொண்டாடுகிறார்கள். வீட்டு வாசலிலே கோலம் போட்டு புத்தாடை உடுத்தி அசுரனை வரவேற்கிறார்கள். இந்து மதம் என்பது இந்தியா முழுமைக்கும் பொதுவானது என்று சொல்வது எவ்வளவு முரண்பாடானது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. கலைஞரானாலும் சரி, தமிழக முதல்வர் ஆனாலும் சரி தீபாவளிக்கு வாழ்த்து கூறாவிட்டாலும், அசுரனை வரவேற்கிற ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களுடைய பண்பாடு என்பது இறந்து போனவர்களை கொண்டாடி மகிழ்வது அல்ல என்பதுதான் தீபாவளிக்கு வாழ்த்து கூறாததற்கு காரணம் என்பதை சங்கிகள் இப்போதாவது புரிந்து கொள்ளட்டும்.

விடுதலை இராசேந்திரன்

Pin It