தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்கிய நெல்லை நிகழ்ச்சியில், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனும் பங்கேற்றுப் பேசி இருக்கிறார்.
அரசு விழா என்பதால் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினரும் அழைக்கப்படும் மரபு அங்கே பின்பற்றப்பட்டு இருக்கிறது. அது இயல்பானதுதான். ஆனால் அவ்விழாவில் நாகேந்திரன் ஆற்றியுள்ள உரைதான் வியப்பிற்கும் பாராட்டுக்கும் உரியதாக இருக்கிறது.
முதலமைச்சரின் நடவடிக்கைகளையும் செயல்பாடுகளையும் நயினார் நாகேந்திரன் அவ் விழாவில் மனந்திறந்து பாராட்டியிருக்கிறார். அவருடைய நெல்லைப் பயணம் மாநகரத்துக்குப் பல நன்மைகளைக் கொண்டு வந்திருப்பதாகக் கூறியுள்ள அவர், அடிக்கடி முதலமைச்சர் நெல்லைக்கு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சியினருக்கு உரிய மதிப்பும் வாய்ப்பும் அளிப்பதாகக் கூறி முதல்வரை அவர் பாராட்டி இருக்கிறார்.
அண்மைக் காலமாக வார ஏடுகளில் நயினார் நாகேந்திரன், வி. பி. துரைசாமி ஆகியோர் பாஜகவை விட்டு வெளியேறப் போகின்றனர் என்னும் செய்தி வந்து கொண்டிருக்கிறது.
ஜூனியர் விகடன் வெளிப்படையாகவே வெறும் பேச்சு அண்ணாமலை என்று அட்டைப்படக் கட்டுரையே வெளியிட்டு இருக்கிறது. அண்ணாமலைக்குக் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும், அவருடைய பேச்சு எந்தச் சாரமும் இல்லாத வெட்டிப் பேச்சாக இருப்பதாகக் கட்சியில் உள்ள சீனியர்கள் பலர் கருதுவதாகவும் அந்த ஏடு எழுதி இருக்கிறது.
கட்சி வளர்ச்சியில் எந்தக் கவனமும் செலுத்தாமல் வெறுமனே ஊடகங்களைச் சந்திப்பதிலும், தன் பெயரும் படமும் பத்திரிகைகளில் அன்றாடம் வெளிவர வேண்டும் என்பதிலும் மட்டுமே அண்ணாமலை ஆர்வம் காட்டுகிறார் என்று அக்கட்சியினர் கருதுகின்றார்கள் என்று கூறுகிறது. அதற்கான ஆதாரத்தையும் ஜூனியர் விகடன் தந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் 72,000 வாக்குச்சாவடிகள் (பூத் கமிட்டிகள்) இருப்பதாகவும், அத்தனைத் தொகுதிகளிலும் அத்தனை வாக்குச்சாவடிகளிலும் திமுகவின் குழுக்கள் அமைத்திருக்கின்றன என்றும், அதற்கு இணையாக அதிமுகவும் உள்ளது என்றும் கூறிவிட்டு, பாஜகவின் நிலையோ மிகப் பரிதாபமாக இருக்கிறது என்றும் கூறுகிறது.
எல் முருகன் தலைவராக இருந்தபோது, 6700 பூத் கமிட்டிகள் இருந்தன. அந்த எண்ணிக்கை இப்போதும் அப்படியேதான் இருக்கிறது என்று அந்த ஏடு குறித்துள்ளது. அதனால்தான் அண்ணாமலைக்கு இணையாக இனிமேல் முருகனும் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து கட்சி வேலைகளைக் கவனித்துக் கொள்வார் என்று தெரிவதாகவும் அந்த வார இதழ் செய்தி தந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் தாங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறோம், அடுத்த முதல்வர் அண்ணாமலைதான் என்று சின்ன பிள்ளைக்கும் கேட்டுச் சிரிக்கும் விதத்தில் வாய்ச்சவடால் பேசிக் கொண்டிருக்கும் பாஜகவின் ஒரு பகுதியினர், தங்கள் கட்சியின் உண்மை நிலையை உணர வேண்டும். உண்மையில் அந்தக் கட்சிக் கட்டிடம் தமிழ்நாட்டில் மேலும் கலகலத்துக் கொண்டிருக்கிறது.
டாக்டர் சரவணன் கட்சியை விட்டு வெளியேறினார். இப்போது நயினார் நாகேந்திரன், வி.பி. துரைசாமி ஆகியோர் ஒரு காலை எடுத்து வெளியில் வைத்து விட்டார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றன. அவர்களைத் தொடர்ந்து இன்னும் எத்தனை பேர் என்பது தெரியவில்லை.
வெறும் பேச்சு வீராசாமிகள் உண்மை நிலையை உணர்ந்திட வேண்டும். தமிழ்த் தேசியம் என்னும் பெயரால் திராவிட இயக்கத்தை எதிர்ப்பதற்குச் சில கைக்கூலிகளை வைத்துக் கொண்டு இருப்பது மட்டும் போதாது. திராவிட இயக்கத்தின் சமூக நீதி, சமத்துவம், பெண் விடுதலை ஆகிய அசைக்க முடியாத கோட்பாடுகளை வெறும் போலித் தமிழ் தேசியவாதிகளைக் கொண்டு தகர்த்து விட முடியாது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தாமரையால் இங்கு துளிர் விட முடியாது. இருக்கும் இதழ்களும் உதிர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வது கட்சியின் இன்றைய நிலையாகவும், தேவையாகவும் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்தால் நல்லது!
- சுப.வீரபாண்டியன்