நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வ தகவல்கள்

மத்திய அரசுத் துறை செயலாளர்களில்  82 பேர்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் வெறும் 4 பேர்களே. 20 அய்அய்எம் நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் வெறும் 11 பேர்களே என்கிற அதிர்ச்சிகர தகவல் நாடாளுமன்றத்தில் வெளியாகியுள்ளது.

மத்திய அரசுத்துறைகளில் உயர் பதவி களுக்கானப் பணியிடங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனமாகிய அய்அய்எம் கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கான பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர்கள், முசுலீம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.சோமநாத்பிரசாத் எழுப்பிய கேள் விக்கு, மத்திய பணியாளர், பொது குறைகளை மற்றும் ஓய்வூதியத்துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் குறிப்பிடுகையில், மத்திய அரசுத் துறைகளில் செயலாளர் பதவிக்கான 82 பணியிடங்களில் நான்கு இடங்களில் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் உள்ளதாக வும், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவன மாகிய 20 அய்அய்எம் நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் 11 பேர் மட்டுமே உள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் அதிகாரத்துறை, நில வளங்கள் துறை, மருந்தியல் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை ஆகிய துறைகளில் செயலாளர்களுக்கான பணியிடங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர்  மட்டுமே உள்ளனர்.

உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் களுக்கான பணியிடங்களிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநிலங்களவையில், காங்கிரஸ் கட்சியின் உறுப் பினர் பர்தாப் சிங் பாஜ்வா எழுப்பிய கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ்போக்ரியால் நிஷாங்க் பதில் அளித்தார்.

20 அய்அய்எம் கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்களில் ஒட்டு மொத்தமாக வெறும் 11 இடங்களில் மட்டுமே தாழ்த் தப்பட்ட, பழங்குடி யினத்தவர் உள்ளனர். அதன்படி, அகமதாபாத், கொல்கத்தா அய்அய்எம் கல்லூரிகள் உள்பட 12 அய்.அய்.எம். கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர்கூட நியமிக்கப்படவில்லை.

பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட 5 அய்அய்எம் கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்களில் தாழ்த் தப்பட்ட அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் களுக்கு  ஓரிடம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, கோழிக்கோடு, ஷில்லாங், ஜம்மு ஆகிய அய்.அய்.எம். கல்லூரிகளில்பேராசிரியர் பணியிடங்களில் இரண்டு இடங்கள் மட்டும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவருக்கு அளிக்கப் பட்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கடந்த 20.11.2019 அன்று அய்அய்எம் இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை மூலம் உத்தரவு அனுப்பியுள்ளது. மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர்களுக்கான இட ஒதுக்கீடு) சட்டம் 2019இன்படி, தாழ்த்தப்பட்டவர் களுக்கு 15 விழுக்காடு, பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடு, சமூக அளவிலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (இதர பிற்படுத்தப் பட்டவர்களுக்கு) 27 விழுக்காடு, பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு 10 விழுக்காடு என்கிற இடஒதுக்கீடு கட்டாயம். அந்த அடிப்படையிலேயே எதிர்காலத்தில் அனைத்து பணிநியமனங்களிலும், ரோஸ்டர் முறையிலேயே இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த அரை நூற்றாண்டு காலமாகவே அய்அய்எம்  உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கும் உயர் கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களின் நியமனங்களில் இடஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படாமலேயே இருந்துள்ளது. 

அரசுத் துறைகளில் செயலாளர்கள், இணை செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள், துணை செயலாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கான இடங்களில் தாழ்த்தப்பட்டவர்கள், முசுலீம்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும்  பழங்குடியினர் உள்ளிட்டவர்களின் பிரதிநிதித்துவம்குறித்த தகவல்களை அளிக்குமாறு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கே.உசைன் தல்வாய் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். 

மத்திய அமைச்சர் பதில் கூறுகையில், உயர் பதவிக்கான பணியிடங்களில் உள்ளவர்களின் இடஒதுக்கீட்டு தகவல்கள் பராமரிக்கப்படுவதில்லை என்றார்.

பிரதிநிதித்துவம் குறித்த தகவல்கள் பணி நியமனத்தின் தொடக்கத்தில் திரட்டப்பட்டவையே ஆகும். உயர் பதவிக்கான பணியிடங்களில் பணி நியமனம், பதவி உயர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் பிரதிநிதித்துவத் தகவல்கள் பராமரிக்கப்படுவதில்லை என்று அமைச்சர் பதிலில் குறிப்பிட்டார்.

Pin It