1957 நவம்பர் 26 - ஜாதி ஒழிப்பு நாள்!

1957 நவம்பர் 26இல் பெரியார் இயக்கம் ஜாதி ஒழிப்புக்காக சட்டத்தை எரித்த நாள். 3000 தோழர்கள் 6 மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை பெற்றனர். அந்த நாள் நினைவாக சில வரலாற்றுக் குறிப்புகள்.

இன்றைக்கும் போர் வீரர்களின் நினைவுக் கல்வெட்டுகளில் அவர்களுடைய பெயர்கள் தெரியாத காரணத்தால் ‘பெயர் தெரியாமல் மரித்துப் போன போர் வீரர்கள்’ என்று எழுதப்படுவது வழக்கம். அதேபோல் பெரியார் நடத்திய ஜாதி ஒழிப்புக்கான அரசியல் சட்ட எரிப்புப் போரில் பங்கேற்று மாதக் கணக்கில் சிறைக் கொடுமைகளை அனுபவித்த பெயர் தெரியாத தோழர்கள் பலர் உண்டு.

சட்ட எரிப்புப் போரில் பங்கேற்ற பெரியாரின் கருஞ்சட்டைத் தொண்டர்களின் உறுதிமிக்க தியாக வரலாற்றிலிருந்து சில செய்திகள்:

•             சிறையிலிருந்த தோழர் திருவாரூர் முத்துகிருட்டிணனின் மனைவிதான் அவரது கடையையும் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டார். காலராவினால் திடீரென முத்து கிருட்டிணன் மனைவி இறந்து விட்டார். மனைவிக்கு இறுதி மரியாதை செலுத்த முத்துகிருட்டிணன் பரோல்கூட கேட்கவில்லை. தாய் இறந்த நிலையில் சிறுவர், சிறுமிகளாக இருந்த குழந்தைகளை கவனித்து வந்த மாமியாரும் அவரைத் தொடர்ந்து காலராவில் இறந்தார். திக்கற்று நின்ற அந்தக் குழந்தைகளை கழகத் தோழர்களே, முத்துக் கிருட்டிணன் சிறை மீண்டு வரும் வரை தங்கள் குடும்பங்களில் வளர்த்தனர். தோழர் முத்துகிருட்டிணன் விடுதலை பெற்று வெளியே வந்தபோது, திருவாரூர் வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அந்த ஜாதி ஒழிப்பு வீரரைக் கண்ட மக்கள் கண்ணீர் வடித்தனர்.

•             16 வயதே நிரம்பிய திருச்சி வாளாடியைச் சார்ந்த சிறுவன் பெரியசாமி, பெரியார் கூட்டங்களுக்கு தவறாமல் சென்று வரும் கருஞ்சட்டைத் தொண்டன். சட்டத்தை எரித்தான். நீதிமன்றம் அந்த சிறுவனுக்கு விதித்த தண்டனை இரண்டு ஆண்டுகள். தூத்துக்குடி தட்டப்பாறை சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டான். ஏழைத் தாய்க்கு ஒரே மகன். பொருள் வசதி இல்லாமையால் மகனை ஒருமுறைகூட சென்று அவரது தாயால் பார்க்க முடியவில்லை. அப்போது தமிழக ஆளுநராக இருந்த ஆளுநர் விஷ்ணுராம் மேதி, சிறையைப் பார்வையிட வந்தவர், சிறுவனின் போராட்டம் பற்றி அறிந்து வியந்து, மொழி பெயர்ப்பாளர் வழியாகக் கேட்டார். “உன்னை மன்னித்து விடுதலை செய்கிறேன்; இனிமேலாவது இதேபோல் சட்டத்தை எரிக்காமல் இருப்பாயா?” சிறுவன் கூறினான்: “வெளியே அனுப்பினால் மீண்டும் எரிப்பேன்.” வியந்துபோன ஆளுநர், “கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” என்று கூறி நகர்ந்தார். சிறையில் மோசமான உணவு, கோடை வெய்யிலைத் தாங்க முடியாமல் வயிற்று உபாதைக்கு உள்ளானான், பெரியசாமி. நினைவிழந்த நிலையிலும் உறுதியாகப் பிணை கோர மறுத்து சிறையிலேயே மாண்டான்.

•             திருச்சியைச் சேர்ந்த தோழர் மாணிக்கத்துக்கு, ஓராண்டு சிறை தண்டனை. திருமணமான ஒரே வாரத்தில் போராட்டத்துக்கு வந்துவிட்டார். சிறைக்கு நேர்காண லுக்கு வந்த இளம் மனைவி, கண்ணீர் விட்டு கதறினார். ‘இனி நேர்காணலுக்கு வரவேண்டாம்’ என்று கூறி விட்டார் மாணிக்கம். மனம் உடைந்த இளம் மனைவி, கணவர் கைவிட்டதாகவே அஞ்சி, மனநோய்க்கு உள்ளாகிவிட்டார். ஓராண்டுக்குப் பிறகு விடுதலையான மாணிக்கம், முழுமையான மனநோயாளியாகிவிட்ட மனைவியுடன், ஒருவார மணவாழ்க்கை நினைவு களுடனேயே வாழ்ந்து மனைவிக்கு முன்பே மரணத்தைத் தழுவினார்.

•             திருவாரூரில், உறுதிமிக்க நீண்டகால பெரியார் தொண்டர்கள் சிவசங்கரன், முத்துகிருட்டிணன் பெரியார் இயக்கத்தில் கலைஞர் இருந்த காலத்தில் அவரது நெருங்கிய தோழர்கள். இவர்கள் சிறையி லிருந்தபோது இருவரின் மனைவியரும் வெவ்வேறு காலங்களில் நோய்வாய்ப்பட்டார்கள். ‘பரோலில்’ வெளியே வருவது ‘கோழைத்தனம்’ என்ற சிந்தனை ஓட்டமே அன்று கழகத் தோழர்களிடம் மேலோங்கி யிருந்தது. இருவரும் பரோல் கேட்க மறுத்தனர். சிறையிலிருக்கும்போதே இருவரது மனைவியரும் இறந்துவிட்டனர். “உயிரோடு இருக்கும்போதே பார்க்க வில்லை; பிணத்தைப் போய் பார்த்து என்னவாகப் போகிறது?” என்று சிறையில் கண்ணீர்விட்டபடியே அன்றைய சிறைச்சாலை வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார்கள் இருவரும். (தோழர் சிவசங்கரன் - 1975ஆம் ஆண்டு அவசர நிலை காலத்திலும் ‘மிசா’வில் கைது செய்யப்பட்டு ஓராண்டு திருச்சி சிறையில் இருந்தார்)

•             அந்தக் காலத்து சிறை என்பது கொடுமையானது. சிறை சீர்திருத்தங்கள், கைதிகளுக்கான உரிமைகள் என்ற சிந்தனைகளே உருப்பெறாத காலம். கருஞ்சட்டைத் தோழர்கள் அனைவரும் மோசமான குற்றங்களை இழைத்த கிரிமினல்கள் போலவே நடத்தப்பட்டனர். அரைக்கால், அரைக் கைசட்டை, சட்டையில் வில்லை என்று அவமதிக்கப்பட்டனர். தோட்ட வேலை, சமையல் கூடத்தில் பாத்திரம் கழுவுதல், அதிகாரிகளுக்கு பணிவிடை செய்யும், வேலைகளை ஜாதி ஒழிப்பு இலட்சியத்துக்காக சிறைக்கு வந்த இந்த தோழர்களுக்கு சிறை அதிகாரிகள் மனிதாபிமானமே இல்லாமல் அளித்தனர்.

•             பெரும் வசதி படைத்த நிலவுடைமையாளர்களான நீடாமங்கலம் அ. ஆறுமுகம், சிதம்பரம் கு. கிருட்டிண சாமி, ஆனைமலை நரசிம்மன் - சிறை உடை அணிந்த தோடு, சிறையில் கூட்டி சுத்தம் செய்தல், பாத்திரம் கழுவுதல், புல் வெட்டுதல் போன்ற வேலைகளை செய்யும்படி கொடுமை படுத்தப்பட்டனர். அந்த காலத்திலேயே வருமானவரி செலுத்தி வசதியான நிலையிலிருந்த வர்த்தகர்கள் வேலூர் திருநாவுக்கரசு, திருச்சி வீரப்பா போன்றவர்களுக்கு அவரது வயது மூப்பையும் கருத்தில் கொள்ளாமல் அதிகாரிகளுக்கு ‘ஏவலர்’ வேலை செய்ய பணிக்கப்பட்டனர்.

•             அப்போது சிறையில் மின்விசிறிகள் கிடையாது. சிறுநீர் கழிப்பதற்கு மண்சட்டி, சுட்டெரிக்கும் வெய்யிலின் கொடூரம், வயிற்றுப் புண் உண்டாக்கும் மோசமான புழுக்கள் மிதக்கும் கூழ், கஞ்சி உணவு, உடல்நலம் கெட்டு சிறைக்குள்ளேயே மரணத்தின் எல்லைக்கு வந்துவிட்ட 13 தோழர்களை, தன்னை காப்பாற்றிக் கொள்ள சிறை நிர்வாகம் தண்டனை காலத்துக்கு முன்பே விடுதலைசெய்தது. ஒரே வாரத்துக்குள் அவர்கள் இறந்து போனார்கள்.

•             சிறைக்குள்ளேயே அயந்து தோழர்கள் மரணமடைந் தனர். விடுதலையான ஒரு மாதத்துக்குள்ளேயே பல தோழர்கள் மரணத்தை தழுவினர். ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் பெரியார் இயக்கம் கொடுத்த களப்பலி 18 பேர்!

•             தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி அடுத்தடுத்த நாள் களிலேயே சிறைக்குள் மாண்டனர். சிறையில் மாண்ட செய்தி வெளியே கசிந்து பெரும் பதட்டம் உருவானது. பட்டுக்கோட்டை இராமசாமியின் உடலை உறவின ரிடம் ஒப்படைக்காமல், சிறை நிர்வாகம் சிறைக்குள்ளே புதைத்தது. அன்னை மணியம்மையார் வெகுண்டு எழுந்தார். அமைச்சர் பக்தவத்சலத்திடம் சென்று, “உயிரோடு அனுப்பினோம்; பிணத்தைக் கூட தர மாட்டீங்களா?” என்று கேட்டார். அதற்குப் பிறகு பிணத்தைத் தோண்டி எடுத்து, அழுகிய நிலையில் அதிகாரிகள் கொடுத்தார்கள்.

•             கருஞ்சட்டைத் தொண்டர்கள், ஜாதி ஒழிப்புக்கு உயிர்ப்பலி தந்த 2 தோழர்களின் சடலங்களை தோளில் சுமந்து வர திருச்சியில் உணர்ச்சி மிக்க இறுதி ஊர்வலம் நடந்தது. பல இளைஞர்கள், ஜாதி ஒழிப்பு வீரர்களின் சடலத்துக்கு முன் ஜாதி மறுப்புத் திருமணங்களையே செய்வோம் என்று உறுதி ஏற்றனர். சொல்லியதை செய்தும் காட்டினார்கள். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மண்ணச்சநல்லூர் அரங்கரசன், மகுடஞ்சாவடி கிள்ளி வளவன், டி.டி. வீரப்பாவின் மகன் ஜனார்த்தனம் ஆகியோரை உதாரணத்துக்குக் கூறலாம். பல இளைஞர்களுக்கு பெரியாரே பெண் பார்த்தார். தலைமை தாங்கி திருமணங்களையும் நடத்தி வைத்தார்.

•             அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் ஒரு ஊரில் ஒரு இடத்தில் என்ற அளவில் நடைபெறவில்லை. ஒவ்வொரு ஊரிலும் ஒரே நாளில் பல இடங்களில் எரிக்கப்பட்டன. ‘விடுதலை’ நாளேட்டில் வந்த தகவல்படி, சென்னையில் - 35 இடங்கள்; வடார்க்காடு மாவட்டம் - 30 இடங்கள்; தென்னார்க்காடு மாவட்டம் - 26 இடங்கள்; சேலம் மாவட்டம் - 41 இடங்கள்; கோவை மாவட்டம் - 14 இடங்கள்; இராமநாதபுரம் மாவட்டம் - 4 இடங்கள்; மதுரை மாவட்டம் - 13 இடங்கள்; நெல்லை மாவட்டம் - 8 இடங்கள்; தர்மபுரி - 18 இடங்கள்; செங்கல்பட்டு - 9 இடங்கள்; கன்யாகுமரி - 5 இடங்கள்; திருச்சிராப்பள்ளி - 107 இடங்கள்; தஞ்சாவூர் - 161 இடங்கள்; புதுச்சேரி - 6 இடங்கள்; பெங்களூர் - ஒரு இடம்; ஆந்திரா - ஒரு இடம்.

அரசியல் சட்டத்தை எரிப்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை என்று தமிழ்நாட்டில் பெரியார் போராட்ட அறிவிப்புக்குப் பிறகு அவசரமாக சட்டம் கொண்டு வரப்பட்டது.

சட்டத்தை துச்சமென மதித்து பெரியார் ஆணை ஏற்று 10,000 தோழர்கள் சட்டத்தை எரித்தார்கள். 3000க்கும் மேலாக கைதானார்கள்.

ஜாதி ஒழிப்பு வரலாற்றில் புரட்சிக்கரமான அத்தியாயங்கள் இவை.

அந்த நவம்பர் 26இல் ஜாதி ஒழிப்பு வீரர்களின் தியாகத்தைப் போற்றி ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுக்க உறுதி ஏற்போம்!

(தகவல்கள்: கோவை மாவட்டம் பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட திருச்சி செல்வேந்திரன் எழுதிய அரசியல் சட்ட எரிப்புப் போராட்ட வரலாற்று நூலிலிருந்து)

பெரியார் முன்கூட்டியே கைதானார்!

1957 நவம்பர் 26 - சட்ட எரிப்புக்கு முதல் நாள் பெரியார் திருச்சியில் முன்கூட்டியே கைது செய்யப்பட்டு விட்டார். இது குறித்து ‘விடுதலை’ ஏடு வெளியிட்ட செய்தி:

ஜாதி ஒழிப்புக்கு, பெரியார் கொடுத்த 15 நாள் கெடு 18.11.57 அன்று முடிவடைந்தது. எந்தப் பயனும் இல்லாததால் நவம்பர் 26இல் சட்டம் கொளுத்தும் போராட்டம் உறுதி செய்யப்பட்டு விட்டது. 26.11.57 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் அச்சடிக்கப்பட்ட தாள் கட்டினை எரிக்க நாடு முழுவதும் தோழர்கள் பெயர்கள் பட்டியல் தந்து போராட்டத்திற்கு ஆவலாக அணியாயிருந்தனர்.

பெரியார் அவர்கள், 25.11.57 இல் சீரங்கம் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு விரைவுத் தொடர் வண்டி (எக்ஸ்பிரஸ்) மூலம், சென்னைக்கு வந்து நவம்பர் 26இல் சென்னையில் எழும்பூர் பெரியார் திடல் (டிராம் ஷெட்) கூட்டத்தில் பேசி இறுதி யில், அரசியல் சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்தத் திட்டமிட் டிருந்தார்கள்.

இந்நிலையில், 25.11.57 மாலை பெரியார் அவர்கள், அவரது புத்தூர் மாளிகையிலிருந்து சீரங்கம் பொதுக் கூட்டம் பேசப் புறப்பட்டு ஆயத்தப் படுகையில், திருச்சிக் காவல் துறைக் கண் காணிப்பாளர் (சூபரின்டென்ட்) திரு. எஸ். சோலையப்பன் அவர்கள் பெரியார் மாளிகை வந்து மாலை 6.40 மணிக்கு பெரியார் அவர்களைக் கைது செய்தார். கிரிமினல் சட்டப்பிரிவு 151இன்படி (குற்றங்களைத் தடை செய் தலுக்கான சட்டப் பிரிவு). உத்தேசிக்கப்பட்ட நவம்பர் 26ஆம் நாள் அரசியல் சட்டப் புத்தகத்தைக் கொளுத்துவதைத் தடுப்பதற்காக, கைது செய்வதாகக் கூறி, கைது செய்து தமது உந்து வண்டி (கார்)யில் அழைத்துச் சென்றார். பின், கூடுதல் முதல் வகுப்பு நீதிபதி திரு. இராமச் சந்திரன் அவர்கள் முன்பாக, பெரியார் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு 3 நாள் ரிமான்டில் வைக்கும்படி உத்தரவிட்டார். பெரியார் அவர்கள் திருச்சி மத்திய சிறையில் வைக்கப்பட்டார். டிசம்பர் 9 வரை ரிமாண்டில் வைக்கும்படி அரசு தரப்பில் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, 3 நாள் ரிமாண்டில் வைக்கப்பட்டு நிபந்தனையின் பேரில் வெளியில் இருக்க பெரியார் அனுமதிக்கப் பட்டார்.

திராவிடர் கழகம் செய்த தீர்மானத்திற்கிணங்கவும், பெரியார் அவர்களின் ஆணைக்கு இணங்கவும் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சியின் முதல் கட்டப் போராட்டமாகத் துவங்கப்பட்ட அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் தமிழ் நாடெங்கும் 26.11.57 அன்று நடந்தேறியது.

சென்னை முதல் குமரி வரை சுமார் 10 ஆயிரம் பேர் கொளுத்தினர்.

Pin It