அய்தராபாத் நிசாமுக்கு வழங்கப்பட்டது வெளியுறவுத் துறை அதிகாரம்
‘சவுத் பிளாக்’ பார்ப்பன அதிகார வர்க்கத்தின் பிடி தளர்த்தப்பட வேண்டும்
இந்தியாவில் வெளியுறவுக் கொள்கைகள், எப்படி, எவரால், எந்தப் பார்வையில் செயல்படுத்தப்படுகின்றன என்ற கேள்விக்கு வெளிப்படையான பதிலோ, விவாதங்களோ கிடையாது. வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் பார்ப்பன அதிகார வர்க்கத்துக்கு பெரும் பங்கு உண்டு. டெல்லி தலைமைச் செயலகத் தில் ‘சவுத் பிளாக்’ அவ்வளவு சக்தி வாய்ந்தது. பார்ப்பன அதிகார வர்க்கத்தின் ஆளுமையையும் அதிகாரங்களையும் அங்கே பார்க்க முடியும்.
ஈழத் தமிழர் இனப்படுகொலைக்குள்ளான 2009ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகமே ஓரணியில் திரண்டு கொதித்து, “இந்திய அரசே ஈழத் தமிழர்களைக் காப்பாற்று” என்று கண்ணீர்விட்டுக் கதறிய ஓலம், டெல்லி பார்ப்பன அதிகாரவர்க்கத்தின் செவிப்பறைகளில் கேட்கவே இல்லை. அன்றைய ஆளும் காங்கிரஸ், சிறிலங்கா அதிகார வர்க்கமும், இந்திய பார்ப்பன அதிகார வர்க்கமும் இனப்படுகொலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு ஒவ்வொரு நாளும் கலந்து பேசி திட்டங்களைத் தீட்டின.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை தீர்மானிப்பதற்கு முன்பு, அப்பிரச்சினையோடு தொடர்புடைய மாநிலங்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற ஒரு நிலை இருந்திருக்கு மானால், இப்படி தமிழர்கள் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்களா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது.
வெளி விவகாரத் துறையில் மாநிலங் களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதோடு மாநிலங்களின் உரிமைகளை வெளி விவகாரத் துடன் தொடர்புபடுத்தி பறிக்கக்கூடிய அதிகாரத்தையும் சட்டத்தின் 253ஆவது பிரிவு வழங்கியிருக்கிறது. 253ஆவது பிரிவு வழியாக ஏற்கனவே மாநிலங்களுக்கு வழங்கப் பட்டுள்ள உரிமைகளையும் குறுக்கு வழியில் நடுவண் ஆட்சி பறித்துக் கொண்டிருக் கின்றன. சர்வதேச உடன்படிக்கை, சர்வதேச ஒப்பந்தம், சர்வதேச மாநாடுகளில் இந்தியா மேற்கொள்ளும் உடன்படிக்கைகள் அது மாநில அரசுக்குரிய உரிமையாக இருந்தாலும், நடுவண் அரசே அந்த உரிமைகளை பறித்து இந்தியா முழுமைக்கும் தனது அதிகாரத்துக் குள் கொண்டு வர முடியும்.
உதாரணமாக சுகாதாரம், உள்ளாட்சி அமைப்புகள், சமூக நலன் போன்ற மாநிலங்கள் உரிமைகளின் கீழ் வரும் பிரச்சினைகளில் சர்வதேச உடன் பாடுகளை இந்தியா ஏற்படுத்திக் கொண்டால் இப் பிரச்சினைகளில் நாடு முழுமைக்குமான சட்டத்தை நாடாளுமன்றமே இயற்ற முடியும். கடந்த 70 ஆண்டுகளில் இப்படி எவ்வளவோ உரிமைகளில் நடுவண் அரசு தலையிட் டிருக்கிறது. விளையாட்டுத் துறையைக்கூட விட்டு வைக்கவில்லை. வெளியுறவுத் துறை தொடர்பான முடிவுகளை எடுக்கும் உரிமை நடுவண் அரசிடம் மட்டுமே இருப்பதால் வந்த கேடுகள் இவை. குறைந்தபட்சம், சம்பந்தப் பட்ட மாநிலங்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும் என்ற நிபந்தனைகூட இல்லாமல், மாநிலங்கள் கொத்தடிமைகளாகவே நடத்தப் பட்டு வருகின்றன.
இராஜீவ் காந்தி, இலங்கை அதிபர் ஜெய வர்த்தனாவுடன் 1987இல் ஈழத் தமிழர் களுக்காக ஒரு ஒப்பந்தம் போட்டபோது, தமிழ்நாடு அரசின் கருத்துகளைக் கேட்டாரா? சொல்லப்போனால் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதை தெரிந்தும் அந்த ஒப்பந்தத்தைப் போட்டார்.
அதே நேரத்தில் கங்கை நதிநீரை பங்களா தேஷ் நாட்டுடன் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் உருவாவதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதிபாசுவின் உதவி, நடுவண் அரசுக்கு தேவைப்பட்டது. ஜோதிபாசு டாக்காவுக்குச் சென்று நதி நீர்ப் பங்கீடு குறித்து பேச்சு நடத்தி சுமூகமான தீர்வுக்கு வழி வகுத்தார். இப்போது பங்களாதேசுடன் தீஸ்தா நதி நீர் பங்கீட்டில் மோடி ஆட்சிக்கு மம்தா பானர்ஜியின் கருத்தைப் புறக்கணிக்க முடியாத நிலையை மம்தா உருவாக்கி யிருக்கிறார். மாநிலங்களுக்குள் நதிகள் ஓடுவதால் மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெற வேண்டிய கட்டாயத்துக்கு நடுவண் அரசு தள்ளப்படுகிறது. அதே நேரத்தில் காவிரி நீர் உரிமையில் காங்கிரஸ் ஆட்சி யானாலும் பா.ஜ.க. ஆட்சியானாலும் நேர்மையான அணுகுமுறையைப் பின்பற்றா மல் தொடர்ந்து தமிழகத்துக்குத் துரோக மிழைத்து வருகின்றன.
இப்போது பஞ்சாப் மாநிலத்துக்கு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த அமரிந்தர்சிங் மீண்டும் முதல்வராகியுள்ளார். காமன்வெல்த் நாடுகளுக்கு பஞ்சாபிலிருந்து பொருள்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தை மேம்படுத்த திட்டமிட்டு வருகிறார். இதற்கு பஞ்சாபி லிருந்து பாகிஸ்தான் தரை மார்க்கமாக பொருள்களைக் கொண்டு செல்ல பாகிஸ் தான் அரசோடு இந்தியா பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று வற்புறுத்துகிறார். ஏற்கனவே இவர் முதல்வராக இருந்தபோது பாகிஸ்தான் அரசோடு வர்த்தக ரீதியாக நல்ல உறவைக் கொண்டிருந்தார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
இந்தியாவின் பிரதமர்களால் ஏற்படுத்த முடியாத நல்லுறவை மாநில முதல்வர்களால் உருவாக்கிக் கொள்ள முடிகிறது என்பதற்கு இவையெல்லாம் உதாரணங்கள். ஆனால், இந்த உண்மைகளை ‘சவுத் பிளாக்’கில் உள்ள பார்ப்பன அதிகார வர்க்கம் கவனத்தில் எடுத்துக் கொள்ள தயாராக இல்லை. தனது சொந்த விருப்பு வெறுப்புகளை சர்வதேச கொள்கைகளாக உருவாக்குகின்றன.
இது தொடர்பாக ஒரு வரலாற்றுச் செய்தியை சுட்டிக்காட்ட வேண்டும்.
1948ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம், அய்தராபாத் நிசாமுடன் ஒரு உடன்பாடு செய்து கொண்டது. அதன்படி “நிசாம், அண்டை நாடுகளுடன் நேரடியாக, வர்த்தக உறவுகளை, சமஸ்தானத்தின் பொருளாதார மேம்பாட்டுக்காக ஏற்படுத்திக் கொள்ள முடியும். மத்திய அரசு கண்காணிப்பு மற்றும் நெருக்கமான ஒத்துழைப்புடன் இதை மேற் கொள்ளலாம் என்று அந்த உடன்படிக்கை கூறியது. 1948இல் அய்தராபாத் நிசாமுக்கு, இது சாத்தியமாகியபோது, இப்போது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மட்டும் வெளியுறவுத் துறையில் பங்கெடுக்கும் உரிமைகள், ஏன் சாத்தியமாகாது” என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது!
இதற்காக அரசியல் சட்டங்களைத் திருத்த வேண்டிய தேவையும் இல்லை. வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான முடிவுகளை சம்பந்தப்பட்டுள்ள மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்து, அதனடிப்படையில் ஒரு கொள்கை ஆவணத்தை உருவாக்கி, அந்த ஆவணத்துக்கு நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற நடைமுறையை உருவாக்கலாம். சட்டத்தையே திருத்த வேண்டியிருந்தாலும் அதைச் செய்தாக வேண்டும்.
1976ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் கவர்னர் ஜெனரலாக இருந்த ஜான்கெர் (Sir John Kerr), பிரதமராக இருந்த கவ் வில்தம் (Gough Whiltam) என்பவரை பதவி நீக்கம் செய்தார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலி யாவில் அரசியல் சட்டம் தொடர்பான விவாதங்கள் தலைதூக்கின. பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசியல் சட்ட விவாதங்கள் நடந்தன.
இறுதியாக 1996ஆம் ஆண்டு நாடாளு மன்றத்தில் வெளி விவகாரத் துறை அமைச்சர் அலெக்சாண்டர் டவ்னர் (Alexander Downer) அறிக்கை சமர்ப்பித்தார். அதன்படி வெளிநாட்டு உடன்பாடுகள் ஒப்பந்தங்களை ஆஸ்திரேலியா மேற்கொண்டால் மாநில அரசுகளை கலந்து ஆலோசித்து நாடாளு மன்றத்தில் விவாதத்துக்கு வைத்து ஒப்புதலைப் பெற வேண்டும். அதுவும் இந்தியாவில் மோடி ஆட்சி நிறைவேற்றிய நிதி மசோதாவைப் போல் கடைசி நாளில் சமர்ப்பித்து அவசர அவசரமாக விவாதங்களின்றி நிறைவேற்றி டாமல், நாடாளுமன்றக் கூட்டம் நிறைவடை வதற்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன் சமர்ப்பித்து விவாதிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா முடிவு செய்தது.
ஆஸ்திரேலியாவின் வெளிநாட்டுக் கொள்கை சர்வதேச உடன்படிக்கைகள், சர்வதேச ஒப்பந்தங்கள், அனைத்தும் மாநில அரசுகளுடன் கலந்து பேசிய பிறகு முடி வெடுக்கப்படும் நிலை இப்போதும் தொடர் கிறது. கூட்டாட்சி தத்துவம் உண்மையாக செயல்படுவதற்கு வெளி நாட்டுக் கொள்கை முடிவுகளில் தொடர்புடைய மாநிலங்களின் கருத்துகளை ஏன் புறக்கணிக்க வேண்டும்? இதற்கான குரலை இனியாவது தமிழர்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும்!
- விடுதலை இராசேந்திரன்
தகவலுக்கு ஆதாரம்: ஏ.ஜி. நூரானி, டெக்கான் கிரானிக்கல் ஏட்டில் எழுதிய கட்டுரை, மார்ச் 19, 2017