பழைய தமிழ்த் தேசம் இதழ்த் தொகுப்பைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். சுவையான நினைவுகளைக் கிளறி விடும் பல குறிப்புகள். அவற்றுள் இரண்டு இதோ:

1) ”இந்தியர்கள் யாருமில்லை!”

தில்லியில் சென்ற (2008) ஏப்ரல் 2ஆம் நாள் இரவு சவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் விடுதியில் சனநாயக மாணவர் சங்கம் (டிஎஸ்யு) சார்பில் ’அரசியல் கைதிகள் பேசுகிறார்கள்’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது.

பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கீலானி, தோழர் கோவிந்தன் குட்டி, ததேவிஇ பொதுச்செயலாளர் தோழர் தியாகு ஆகியோர் உரையாற்றுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்துத்துவ அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் (ஏபிவிபி) கீலானி வருவதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.

பல்கலைக்கழக நிர்வாகமும் கூட கூட்டத்துக்கு அனுமதி மறுத்து விட்ட நிலையில் டிஎஸ்யுவைச் சேர்ந்த நம் மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தையும் இடதுசாரி மாணவர் அமைப்புகளையும் அணுகி அனைவரின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர். மாணவத் தோழர் கலையரசன் தலைமையில் கீலானி, கோவிந்தன் குட்டி, தியாகு மூவரும் உரையாற்றினர்.

இந்தியா தேசிய இனங்களின் சிறைக் கூடமாகவும் இந்திய அரசமைப்பு தேசிய இனங்களின் அடிமை முறியாகவும் இருப்பதை விளக்கிய தோழர் தியாகு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டிய தேவையையும் எடுத்துரைத்தார். உரை முடிவில் ஒரு மாணவர், “நீங்கள் இந்தியர் இலையா?” என்று கேட்டதற்குத் தோழர் தியாகு அளித்த விடை: ”நான் இந்தியன் இல்லை, நீங்களும் இந்தியர் இல்லை.

இந்தியாவில் இந்தியர் யாருமில்லை. இந்தியர் என்பது ஒரு தேசிய இன அடையாளமன்று. இந்தியக் குடிமகனாக இருப்பதாலேயே நாம் இந்தியர்கள் ஆவோம் என்றால், பிரித்தானிய இந்தியக் குடிகளாய் இருந்த போது நாம் பிரித்தானிய இந்தியர்களாய் இருந்தோமா? தேசிய அடையாளம் என்பது ஆளும் அரசைப் பொறுத்ததன்று.”

2) சின்னக் காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா

[சமூகநீதித் தமிழ்த் தேசம், 2008 மே இதழில் தமிழ்நாட்டின் முதல் மே நாள் குறித்து பேராசிரியர் முத்து குணசேகரன் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து:]

தூத்துக்குடி கோரல் மில் சதி வழக்கில் வ.உ.சி. சேர்க்கப்பட்டது போலவே, கரூர் சதி வழக்கில் ஆங்கிலேய அரசால் சேர்க்கப்பட்டுச் சிறைத்தண்டனைக்கு ஆளானவர்தான் கிருஷ்ணசாமி சர்மா. அவர் வாழ்வின் நீண்டதொரு பகுதியைச் சிறையிலே கழித்தார். சிறைக்குச் செல்லாத காலங்களில் இந்துநேசன், சுதேசமித்திரன் போன்ற ஏடுகளில் தொடர்ந்து எழுதி வந்தார். அவர் 21க்கு மேற்பட்ட நூல்கள் எழுதியதாகத் தெரிகிறது என்றாலும் ஒன்று கூட இப்போது கிடைக்கவில்லை.

ஜாலியன்வாலாபாக் கண்டனக் கூட்டத்தில் கிருஷ்ணசாமி சர்மா பேசினார். அரசுக்கு எதிரான எல்லாப் போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.

1887இல் ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் குடவாயில் சடகோபன், பெருந்தேவி ஆகிய பெற்றோர்க்கு மகனாகப் பிறந்த சர்மா இளம் வயதிலேயே சுதந்திர உணர்வு பெற்றவராக மட்டுமின்றி, சாதி மத எதிர்ப்பாளராகவும் வளர்ந்தார். கிலாஃபத் இயக்கம் உட்பட அனைத்து இயக்கங்களிம் பங்கேற்றார்.

இம்மியளவும் பார்ப்பனச் சாதிப் பற்று இல்லாதவராகத் திகழ்ந்தார். சேரன்மாதேவி குருகுலச் சிக்கல், ருக்மணி அருண்டேல் திருமணச் சிக்கல் போன்றவற்றில் அவர் எடுத்த நிலைப்பாடே இதற்குச் சான்று. ஒவ்வொரு நிலையிலும் சாதிமத ஒழிப்பையும் மனித நேயத்தையும் அவர் வலியுறுத்தி வந்தார்.

கொள்கை அடிப்படையில் எவர் தவறு செய்தாலும் கண்டிக்கும் துணிவு சர்மாவுக்கு இருந்தது. சவுரி சவுரா நிகழ்ச்சிக்குப் பின் காந்தியார் தமது ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திக் கொண்ட போது, இது காந்தியின் இமாலயத் தவறு என்று சர்மா கண்டித்தார். பகத் சிங்கின் தியாகத்தை காந்தியார் வெறித்தனம் என்ற போது, இல்லை, இதுதான் தேசப் பற்று என்றவர் சர்மா.

1923இல் சிங்காரவேலர் கொண்டாடிய அந்த முதல் மேநாளில் திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில் சர்மா கலந்து கொண்டார். சிங்காரவேலர் சர்மாவைப் பாராட்டி வரவேற்றார். “சர்மா போன்ற தியாகிகள் வந்ததற்கு நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்” என்றார்.

மேநாள் கூட்டத்தில் உரையாற்றிய கிருஷ்ணசாமி சர்மா மேநாளைத் தொழிலாளர்களின் புனித நாள் எனப் போற்றினார். “மேநாள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் தோழர்கள் நான் சொன்னேன் என்பதற்காக்க் கையெழுத்துப் போட்டு விட்டு காவலர்கள் நெருக்கும் போது பின்வாங்கக் கூடாது” என்றார்.

காலமெல்லாம் சாதிமத எதிர்ப்பாளராக வாழ்ந்த சின்னக் காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா பார்ப்பனர்களால் கடுமையாக வெறுக்கப்பட்டார். காஞ்சிபுரத்துப் பார்ப்பனர்கள் அவரை ’ஜாதிப் பிரஷ்டம்’ செய்தனர்; அதாவது சாதியிலிருந்து விலக்கி வைத்தனர். பொன்னேரியில் ஆசிரமம் அமைக்க முயன்று அதிலும் சர்மா தோற்றுப் போனார்.

காலமெல்லாம் சிறையில் கல்லுடைத்து நோய்வாய்ப்பட்டு நொறுங்கிப் போயிருந்த கிருஷ்ணசாமி சர்மா காஞ்சிபுரத்தில் திடீரென மறைந்த போது, யாரும் சவ அடக்கத்துக்கு செல்லக் கூடாது என்று பார்ப்பனர்கள் தடுத்து விட்டனர். பிணத்தைத் தூக்குவதற்குக் கூட யாருமில்லை.

மூன்று நாள் கழித்து சர்மாவின் தொண்டர் ஒருவர் தன் ஒற்றை மாட்டு வண்டியில் உடலை ஏற்றி சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றார். சர்மாவின் உடலுக்கு அவர் மனைவிதான் கொள்ளி வைத்தார். அதனை வேடிக்கை பார்க்கக் கூட ஒரு பார்ப்பன் அங்கு வந்தானில்லை.

- செங்காட்டான்

Pin It