1916இல் சென்னை மாகாணத்தில் திராவிடர் இயக்கம் முன்வைத்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற சமத்துவக் கோட்பாடு இன்று 100 ஆண்டுகள் கடந்து புதிய பரிணாமங்களைப் பெற்று வளர்ந்து வருகிறது. அன்றைக்கு பார்ப்பனப் பிடியில் சிக்கியிருந்த காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் மட்டும் திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, ராஜாஜி காலத்துக்குப் பிறகு சமூக நீதிக் குரலை ஒலித்து, திராவிட இயக்கப் பாதையில் நடைபோடும் சூழல் உருவானது. சனாதன தர்மத்தை என்றுமே மாற்ற முடியாது என்று வர்ணாஸ்ரமத்தை உயர்த்திப் பிடித்த சக்திகள், பல்வேறு தடைகள் எதிர்ப்புகளைக் கடந்தும் உருத்திரட்சிப் பெற்று, இப்போது ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டது. இதன் விளைவாக திராவிடம் - சனாதனம் என்ற முரண்பாடுகள் கூர்மையடைந்து நிற்கின்றன.

புதிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய வரலாற்றுச் சூழலை உருவாக்கியுள்ளது. திராவிட இயக்கம் கடும் சவால்களை ஆதிக்க - அதிகார சக்திகளிடமிருந்து சந்திக்கும் நெருக்கடியான காலகட்டத்தில் அதை எதிர்கொள்வதற்கும் புதிய திசையில் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் நமது முதல்வர். அதற்குப் பல உதாரணங்களைப் பட்டியலிட முடியும்.

mk stalin 220முதல்வர் பதவி என்பது சுழலும் நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு அதிகாரிகளுக்கு ஆணைகளைப் பிறப்பிப்பது தான் என்ற மரபுகளைத் தகர்த்துள்ளார். நேரடியாகக் களத்தில் இறங்கி, மக்களைச் சந்திப்பது தான் மக்களுக்கான இன்றைய நவீன ஜனநாயகம் என்ற முடிவுக்கு வந்தார். அரசுக் கட்டமைப்புகளைத் தாண்டி மக்களுடன் வளர்த்துக் கொண்ட நேரடி உறவுகள் - தொடர்புகள் - அவர்களின் கோரிக்கை மனுக்களை நேரடியாகப் பெறுதல் என்று களமிறங் கினார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் வழியாக இலட்சக் கணக்கான மக்களின் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன. அடுத்து அறிவிக்கப்பட்ட அரசின் திட்டங்கள் செயலாக்கப்படுகிறதா என்பதை நேரிலே மாவட்டம் தோறும் சென்று அதிகாரிகளிடம் கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் எந்த முதல்வரும் கற்பனையில் கூட சிந்திக்காத செயல் திட்டங்கள் இவை.

பள்ளிக் கல்வியைப் பாதியில் நிறுத்தியவர்களை மீண்டும் பள்ளிகளுக்குக் கொண்டு வர பள்ளிக் கல்விக்கு வெளியே தன்னார்வத் தொண்டர்களைப் பயன்படுத்தி விழிப்புணர்வை ஊட்டி வருவதும், கல்லூரி, பொறியியல் பயிலும் மாணவர்களின் திறன் மேம்பாட்டை வளர்த்தெடுக்க கல்லூரிகளுக்கு வெளியே உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கும் நான் முதல்வன் திட்டமும் இப்படிப் பட்டது தான். இல்லம் தேடி மருத்துவமும் இதே பட்டியலில் தான் வருகிறது. கட்டமைப்புகளுக்கு வெளியே நிகழ்த்தப்படும் புதிய நிர்வாக அணுகுமுறை.

முரண்பாடுகளைக் கையாளுவதிலும் முதலமைச் சரின் அணுகுமுறை புதிய திசைவழியில் பயணிக்கிறது என்று கூற முடியும். ஆளுநர் திராவிட மாடல் ஆட்சி யின் அடிப்படைக் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்து தனது அதிகார வரம்பை மீறியபோது அதை உறுதியோடு எதிர்த்தார். அதே வேளையில் ஆளுநர் பதவி என்று ஒன்று இருக்கும் வரை அதற்கேற்ற மரியாதை வழங்கப்பட வேண்டும் என்ற தெளிவான எல்லைக்கோட்டை வகுத்து செயல்படு கிறார். குடியரசுத் தலைவரிடம் உரிய முறையில் தமிழ்நாடு அரசின் எதிர்ப்பைப் பதிவு செய்து, ஆளுநரின் அத்துமீறல்களுக்குக் கடிவாளம் போட்ட முதல்வர், ஆளுநரிடம் ஏற்பட்ட சில மாற்றங்களுக்குப் பிறகு அவர் நடத்திய தேநீரில் விருந்தில் பங்கேற்றார். முதல்வரின் அணுகுமுறையில் பின்பற்றும் நேர்மைக்குச் சான்றாக நிற்கிறது.

கட்சி அரசியலை அணுகும் முறையிலும் புதிய திசை வழியை உருவாக்கியுள்ளார் நம் முதல்வர். எம்ஜிஆர்., ஜெயலலிதா முதல்வர்களாக இருந்த காலத்தில் திமுக எதிர்ப்பு தான் தமிழ்நாட்டின் முதன்மையான அரசியலாக அவர்கள் முன் வைத் தார்கள். எதிர்ப்பு அரசியல் என்ற போர்வைக்குள் மக்கள் பிரச்சினைகளை மூடி மறைத்து திசை திருப்பி வந்தார்கள். அதைத் தலைகீழாகப் புரட்டிப் போட் டுள்ளார் தமிழக முதல்வர். எதிர்க்கட்சி எதிர்ப்பு என்பதற்காக மக்கள் ஆட்சியில் அமர்த்தவில்லை. மக்கள் தங்களுக்கான திட்டங்களை வாழ்வுரிமைகளை நிறைவேற்றவே அதிகாரத்தில் அமர்த்தி யிருக்கிறார்கள் என்பதை சரியாக உணர்ந்தார். கட்சி எதிர்ப்பு அரசியலைக் கடந்து போய்விட வேண்டும்; அதைவிட முன்னுரிமைப் பெற வேண்டியது மக்களும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் தான் என்று தெளிவான பாதையில் பயணித்து வருகிறார்.

பெண்களின் முன்னேற்றத்தில் தான் சமுதாய வளர்ச்சி அடங்கியிருக்கிறது என்ற சுயமரியாதை இயக்கப் பார்வையில் செயல் திட்டங்களை அமல்படுத்துகிறார். பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம் தேவைதான் என்றாலும் அதைவிட முக்கியம் அவர்கள் உயர் கல்வியை எட்டிப் பிடிப்பது தான் என்ற சமூகப் புரிதலோடு அரசுப் பள்ளியில் படித்து கல்லூரியில் நுழையும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தைக் கொண்டு வந்தார். இது புதிய திசை வழிப் பார்வை. பெண்களுக்குக் கட்டணமில்லாத பேருந்துப் பயணம் பெண்களின் சுதந்திரமான நடமாட்டத்தை உறுதி செய்தது; அவர்களை அதிகாரப்படுத்தியது. நீட் தேர்வு ரத்துக்கு சட்டப் போராட்டம், மருத்துவ உயர் பட்டப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இட ஒதுக்கீடு உரிமைக்கு சட்டப் போராட்டம் நடத்தி, அனைத்து மாநிலங்களுக்கும் அந்த உரிமைகளைப் பெற்று தந்தது. பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி என்று திராவிட இயக்கத்தின் இலட்சியங்களை புதிய திசையில் விரிவாக்கி வருகிறார்.

கடந்த கால ஆட்சிகளின் பொருளாதாரச் சீரழிவுக் கொள்கையால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி மூச்சுத் திணறிய தமிழ்நாட்டை அதிலிருந்து மீட் டெடுக்கும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதும், புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகளையும், உற்பத்தியையும் மேம்படுத்தும் செயல்பாடுகளை முடுக்கி விடுவதும், திராவிடக் கொள்கைக் காலத்தின் தேவைக்கேற்ற திசைவழிப் பயணத்தை மேற்கொண்டு வருவதற்கு மேலும் உதாரணங்கள்.

திராவிட இயக்கத்தின் இலட்சிய வாரிசாக கடுமையாக உழைக்கும் முதல்வரின் செயல்பாடுகள், அவரை ஒரு ஆட்சித் தலைவர் என்ற எல்லையைத் தாண்டி மக்கள் தலைவராக உருமாற்றி வருகிறது. இயக்கத் தலைவர்களாக மட்டுமின்றி மக்கள் தலைவர்களாக உருமாற்றம் பெற்றவர்களே உலக வரலாற்றில் நிலைத்து நிற்கிறார்கள். இந்தியா என்பது ஒன்றியம் தான்; தமிழ்ப் பேசும் மாநிலம் - தமிழ்நாடு தான்; சமூகநீதி - சுயமரியாதை - கூட்டாட்சி - பெண்ணுரிமையே எங்களுக்கான அடையாளங்கள் என்ற உறுதியான பிரகடனத்தோடு சனாதனத் துக்கான எதிர்ப்புப் போராட்டத்தில் திராவிட மாடலை முன்வைத்து பயணித்து வருகிறது தமிழ்நாடு அரசு. முதல்வர் கட்சித் தலைவர் என்ற நிலையிலிருந்து மக்கள் தலைவராக மக்கள் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

இந்த புதிய திசைவழிப் பயணத்தைப் பற்றிய புரிதல் நமக்கு வேண்டும்; இவற்றை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்; அதுவே நமது முதல்வருக்கு நாம் செலுத்தும் உண்மையான பிறந்தநாள் வாழ்த்தாக இருக்க முடியும்.

(‘முரசொலி’ - முதல்வர் மு.க. ஸ்டாலின் 70ஆவது பிறந்த நாள் சிறப்பு மலருக்கு எழுதிய கட்டுரை.)

Pin It