முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழுரையில் மயங்குவதாகக் காட்ட முயற்சிக்கும் கட்டுரை ஒன்றை தமிழ் இந்து (பிப்ரவரி 21) நாளேடு, அரை உண்மைகள் குழப்பங்களுடன் 'பட்ஜெட் விவாதம் திசை மாறலாமா' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. பொய்யை விட ஆபத்தானது அரை உண்மை. பாஜகவின் 'குஜராத் மாடல்', ஆம் ஆத்மியின் 'டெல்லி மாடலுக்கு' மாற்றாக "திராவிட மாடலை" முன்னிறுத்தும் திமுக, திராவிட மாடலுக்கான கோட்பாட்டை விவரிக்காமல் சமூக நலத்திட்டங்களை பட்டியலிடுவதாக குற்றம் சாட்டுகிறது கட்டுரை. குஜராத் மாடல் - பச்சை வகுப்புவாதம், தனியார்மயம். ஆம் ஆத்மி மாடல் என்பதோ தனக்கான எந்த மாடலுமே இல்லை என்ற மாடல். இதோடு திராவிட மாடலை சமன்படுத்துகிறது கட்டுரை.

திராவிடன் மாடல் என்பது சமூக நலத்திட்டங்கள் மட்டுமே என்று கூறும் கட்டுரை தன்னுடைய கருத்தை தானே மறுக்கிறது. “தமிழ்நாட்டில் கூலிச் சமமின்மை, குறைந்துவரும் உயர்கல்வியின் தரம் பற்றி பேராசிரியர் கலையரசன் தனது திராவிடன் மாடல் நூலில் சுட்டிக்காட்டி இருப்பதை எடுத்துக்காட்டும் இந்தக் கட்டுரை, இதில் அரசின் கவனம் ஈர்க்கப்பட்டு இருக்கிறது என்று அதற்கு பதிலையும் கூறி விடுகிறது. உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் கிளைகளைக் கொண்ட 'அறிவுசார் நகரத்தை' முதலமைச்சர் உருவாக்கி வருவதாக கட்டுரை தனது கேள்விக்கு தானே பதிலையும் கூறுகிறது. கூலிச்சமநிலையுடன் கூடிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று திராவிடன் மாடல் நூலாசிரியர்கள் சுட்டிக்காட்டி இருப்பதை எடுத்துக்காட்டும் கட்டுரை அதற்கும் பதிலை கூறி விடுகிறது” அதன் உடனடி தேவையை முதல்வர் உணர்ந்து தூத்துக்குடி யில் அறைகலன் பூங்காவை உருவாக்கி 17,476 பேருக்கு வேலை வழங்கும் திட்டத்தை தொடங்கியிருப்பதை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். என்று கட்டுரை தனது குற்றச்சாட்டிற்கு தானே பதிலையும் கூறிவிட்டது.

சட்டசபையில் பட்ஜெட் விவாதத்தில் 3,36,000 கோடி திட்டச் செலவுடன் கூடிய நிதிநிலை அறிக்கை குறித்து விவாதங்களை நடத்தாமல், பெரியார் நூல்களை மொழிபெயர்க்க 5 கோடி ஒதுக்கியதை பெரும் பேச்சாக பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறது கட்டுரை. பல்லாயிரம் பேர் சட்டமன்றத்தின் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். விவாதங்கள் பெரியாரை சுற்றி மட்டும் பெரிய அளவில் நிகழவில்லை என்பதை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரடியாக பார்ப்பவர்களுக்குத் தெரியும்.

திராவிடன் மாடல் என்பது சமூக நலத்திட்டங்களோடு மட்டும் முடங்கி விட வில்லை, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி அது சார்ந்த முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகள், தமிழ்நாட்டின் சுயாட்சி, உரிமை, பெண்ணுரிமை, இந்தி எதிர்ப்பு, இல்லம் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களை திறன் மிக்கவர்களாகவும் தொழில்நுட்பம் அறிந்தவர்களாகவும் உருவாக்கும் நான் முதல்வன் திட்டம், தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழ்நாட்டு கல்விக்கொள்கை உருவாக்கம், வெளிப்படையான நிர்வாகம் என பல்வேறு கருத்தாக்கங்களை செயல்பாடுகளுடன் இணைத்து, ஒவ்வொரு நாளும் திராவிடன் மாடல் தான் இங்கே நடை போட்டுக் கொண்டு இருக்கிறது என்ற உண்மைகளை கட்டுரை ஏன் மறைக்கத் துடிக்கிறது.

சோவியத் ஒன்றியம் சிதைவு, அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல், உலகமயமாக்கல் என்ற பெயரில் சர்வதேச அரசியலை ஆட்டிப் படைக்கும் சர்வதேச மூலதனம் ஆகியவற்றுக்குப் பிறகு பொருளியல் கண்ணோட்டங்களில் எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டன. பொருளியல் கோட்பாடுகளில், பொதுவுடைமை பேசிய சீனாவே சந்தை பொருளாதாரத்திற்கும், சர்வதேச நிதி மூலதனத்திற்கும் கதவு திறந்து விட்டதோடு இந்தியாவில் பொதுவுடமை கட்சி ஆட்சி நடத்திய மேற்கு வங்கம், கேரளாவில் கூட பன்னாட்டு நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களே வேண்டாம் என்ற நிலையிலிருந்து அவர்களின் முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகள் போடவேண்டும் என்ற எல்லைக்கு வந்து விட்டன. கட்டுரையாளர் கூறும் காந்திய பொருளாதாரத்தை பூதக்கண்ணாடி வைத்துதான் தேட வேண்டி இருக்கிறது. இந்த எதார்த்தங்களை புறந்தள்ளிவிட்டு, திமுகவின் திராவிடன் மாடலுக்கு கோட்பாடு இல்லை என்ற குற்றச்சாட்டை வீசுவதற்கு வலுவற்ற பல வாதங்களை தேடி அலைகிறது இந்தக் கட்டுரை.

பெரியார் நூல்களை நாட்டுடைமை ஆக்க வேண்டும். குடிஅரசு காலகட்டத்திற்குப் பிறகு பெரியாரின் எழுத்தும் பேச்சும் துவக்கப்பட வேண்டும் என்ற கட்டுரையின் கோரிக்கையை நாமும் முழுமையாக ஆதரிக்கிறோம். ஆனால் அந்தக் கருத்துக்கள் திமுகவை குற்றக் கூண்டில் நிறுத்தும் வாதங்களோடு, அந்த வாதங்களுக்கு வலு சேர்க்க உள்நோக்கத்தோடு மலினப்படுத்த முயல்வதுதான் நாம் கடுமையாக சந்தேகிக்கிறோம்.

முதல்வர் தொடங்கும் மாபெரும் தொழில் வளர்ச்சித் திட்டங்களை விட சாலை ஓரத்தில் டீக்கடையில் டீ குடித்த செய்தி பெரிதாக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டுகிறது கட்டுரை. ஊடகங்களில் டீ குடித்த செய்தியும் வந்தது, அறைகலனிற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டிய செய்தியும் வந்தது. குறிப்பாக இந்து ஆங்கில நாளேடு “Tamilnadu Focus” என்ற பகுதியை உருவாக்கி தொடர்ந்து பல பக்கங்களை தமிழ் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வுக் கட்டுரைகளை அலசி ஆராய்ந்து எழுதி வெளியிட்டு வருவது கட்டுரையாளரின் கண்களுக்கு படாமல் போய் விட்டது போலும்.

நல்லாட்சி நடத்தும் ஒரு முதல்வருக்கு பாராட்டுகள் வரத்தான் செய்யும் அது இயற்கையானதுதான். முதல்வரை எவருமே பாராட்டக் கூடாது என்று தமிழ்நாடு அரசு ஒரு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று கட்டுரையாளர் சொல்ல வருகிறாரா ? அதைவிட இந்தப் பாராட்டுகள் முதல்வரின் முக்கியமான பணிகளை பின்னுக்குத்தள்ளி போட்டு விடுகிறது, என்று கட்டுரை கூறுவது தான் உச்சகட்ட அபாண்டம் அவதூறு. “ஆட்சியை எதிர்ப்பதற்கு பல்வேறு முகமூடிகளை அணிந்து பலரும் வந்து கொண்டு இருக்கிறார்கள்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறிய வார்த்தையின் அர்த்தம் இந்தக் கட்டுரையை படிக்கும்போது அழுத்தமாகவே புரிகிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It