ஒரு சொட்டு இரத்தத்தை மனிதரால் உருவாக்க முடியுமா? கடவுள் உடல் கட்டமைப்பை அப்படி உருவாக்கி இருக்கிறான். இதற்குப் பிறகும் சிலர் கடவுள் இல்லை என்று பிதற்றுவது சிரிப்பாக இருக்கிறது. - ரஜினிகாந்த்
மனித இரத்தத்தை செயற்கையாக உருவாக்கும் ஆய்வுகள் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் இங்கிலாந்து விஞ்ஞானிகள் வெற்றி பெற்று விட்டனர். செயற்கை இரத்தத்தை உருவாக்கி இரண்டு மனிதர்களுக்கு 5 முதல் 10 மில்லி மீட்டர் செலுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள். உலகில் அரிய வகை இரத்தத்தை உருவாக்கும் முயற்சியில் இங்கிலாந்து விஞ்ஞானிகள் வெற்றி பெற்று விட்டார்கள்.
ரஜினி அவர்களே, நவீன அறிவியலுக்கு வாருங்கள்!
***
அர்ச்சகர் சட்டம்: மதுரை நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீரங்கம் குமார வயலூர் கோவிலில் அனைத்து சாதி அர்ச்சகர் சட்டத்தின்படி மூன்று அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் ஒருவர் பார்ப்பனர். ஏனைய இரண்டு பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களின் நியமனம் செல்லாது என்றும், இதற்கு முன்பு பணியில் இருந்த பார்ப்பனர்களுக்கே அர்ச்சகர் பணி கொடுக்கப்பட வேண்டும் என்றும், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் அளித்த தீர்ப்பைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு இவ்விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மார்ச் 9, 2023 மாலை 4 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் இரா. உமாபதி முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தின் தொடக்கமாக கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, காஞ்சிபுரம் ரவிபாரதி உரையாற்றினார். பின், தோழர் நாத்திகன், இரண்யா, ப்ரீத்தி ஆகியோர் ‘தூங்குறியா நடிக்கிறியா ரங்கநாதா?’ பாடல்களைப் பாடினர்.
அனைத்து சாதியினர் அர்ச்சகர் பயிற்சி மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரங்கநாதன், பணி ஆனை வழங்கப்பட்டதில் இருந்து அர்ச்சகர் மாணவர்களுக்கு பார்ப்பன அர்ச்சகர்களால் ஏற்பட்ட அவமதிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மருதையன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். அவர் , ஆகம விதிகள் என்று கூறி தான், பார்ப்பனர்கள் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இனியும் தொடர்ந்தால் ஆகம எரிப்புப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம்' என்று போராட்ட அறிவிப்புடன் உரையை நிறைவு செய்தார்.
ஆர்ப்பாட்டத்தில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் வேழவேந்தன் உட்பட சென்னை பகுதிக் கழகத் தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.