திராவிட மாடல் பயிற்சிப் பாசறை தொடக்க விழா 5.6.2022 அன்று கலைஞர் அரங்கில் நடந்ததது. திட்டக் குழு துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் பங்கேற்று ஆற்றிய உரை:
1967இல் ஆட்சிக்கு வந்த பிறகு நமக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தது. சமூகநீதி இயக்கம் எதற்காகப் போராடியதோ, அதை எல்லாம் செயல் வடிவம் கொடுக்கக் கூடிய ஓர் அரிய வாய்ப்பு நமக்குக் கிடைத்தது.
ஆனால், அண்ணா முதலமைச்சராக இருந்தது ஒன்றரை ஆண்டுகள்தான். அவர் மறைந்த பிறகு, அந்த அரும்பணியும், அந்த அரிய வாய்ப்பும் டாக்டர் கலைஞரிடம் வந்து சேர்ந்தது.
1976 ஆம் ஆண்டுவரை அவர் செய்த காரியம் இருக்கிறதே, தமிழ்ச் சமுதாயத்தையும், தமிழ்ப் பொருளாதாரத்தையும், தமிழக அரசியல் செயல் படுகின்ற விதத்தை எந்த அளவிற்கு மாற்றியமைத் திருக்கின்றார் என்பதைப் பார்த்தால், வியப்பாக இருக்கும்.
தமிழகத்தில் மட்டும்தான் வளர்ச்சி என்பது ஜனநாயகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்குப் பொருள் என்னவென்று சொன்னால், நிலம் என்பது ஒரு சிலரிடம் மட்டும்தான் குவிந்திருந்தது. அதற்காக நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்தச் சட்டம் தமிழ்நாட்டில் வெற்றி பெறவில்லை.
கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு, அவர் செய்த ஒரு அமைதிப் புரட்சி - நிலத்தை ஜனநாயகப்படுத்தியது. காங்கிரஸ் ஆட்சியில் உச்சவரம்பு சட்டத்தில் ஓட்டை போடும் பல முயற்சிகளும் நடந்தன.
அதைத் தடுக்க அறக்கட்டளைகளை அமைத்து, அதன் மூலமாக நிலங்களை பினாமியாக வைத்திருந் தார்கள்; உச்சவரம்பிலிருந்து அறக்கட்டளை வழியாக தப்பித்துக் கொண்டனர்.
இந்த சூழ்ச்சியை முறியடிக்க கலைஞர் ஒரு சட்டம் கொண்டு வந்தார்.
ஒரு குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு, எந்தெந்த அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டனவோ, அந்த அறக்கட்டளையில் இருக்கும் நிலங்கள் எல்லாம் - மீண்டும் யார் நிலவுடைமையாளரோ அவரிடம் சென்றுவிடும். அதன் பிறகு, நில உச்சவரம்பு சட்டம் செயல்படுத்தப்பட்டு, அதன் வழியாக அந்த நிலங்கள் கைப்பற்றப்படும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்.
ஆனால், நம்முடைய அரசமைப்புச் சட்டம் எப்படி இருக்கிறது என்று சொன்னால், மாநிலங் களில் நாம் ஒரு சட்டத்தை நிறைவேற்றி, அதை ஆளுநருக்கு அனுப்பினால், அது திரும்பி வராது. அப்படியே அந்தச் சட்டம் டில்லிக்குப் போனாலும், அங்கே இருந்து திரும்பி வராது. அதுபோன்றுதான் முடங்கிப் போனது அந்த சட்டம் - அந்த சட்டம் திரும்பியே வரவில்லை.
அந்த சட்டத்தில் ஒரு பிரிவு இடம் பெற்றிருந்தது - என்னவென்றால், அறக்கட்டளையில் உள்ள நிலங்களை நீங்களே வைத்துக் கொள்ளலாம்; ஆனால், அறக்கட்டளையின் மூலம் நீங்கள் நேரிடையாக விவசாயம் செய்ய முடியாது; குத்தகைதாரர் மூலம்தான் விவசாயம் செய்ய முடியும் என்று கூறியது காங்கிரஸ் ஆட்சியில் வந்த சட்டம்.
ஆகவே கலைஞர் என்ன செய்கிறார் என்றால், குத்தகைதாரர்களுடைய கரத்தை வலுப்படுத்தினால், நிலவுடைமையை ஜனநாயகப்படுத்தலாம் என்கிற முடிவிற்கு வருகிறார். அதன் வழியாக அவர், குத்தகைப் பாதுகாப்புச் சட்டத்தை மிகவும் வலுவுள்ளதாக மாற்றுகிறார்.
எப்படி வலுவுள்ளதாக மாற்றுகிறார் என்றால், குத்தகைதாரர் என்று பதிவது மிகவும் கடினம். டாக்குமெண்ட் சான்று வேண்டும் என்ற நிலையில் அதை எளிமைப்படுத்தினர்.
பக்கத்து நிலக்காரர் சொன்னால் போதும், இவர்தான் விவசாயம் செய்துகொண்டிருக்கிறார் என்று. ஒருமுறை பதிவு செய்யப்பட்டுவிட்டால், அதன் பிறகு அந்தக் குத்தகை உரிமை நிலைநாட்டப் படும். அவ்வளவு சுலபமாக அவர்களை வெளியேற்ற முடியாது.
அதன் வழியாக, பெரு நிலச் சுவாந்தாரர்களுடைய நிலவுடைமைப் பிடியை மிகவும் தளர்த்திவிட்டார் கலைஞர்.
கிராமப்புறங்களில் இருக் கக்கூடிய நிலவுடைமை யாளர்களுடைய அதிகாரத் தின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.
இன்னொரு பக்கம் என்ன செய்தார் சொன்னால், நம்மாட்கள் நிறைய பேருக்கு குடியிருக்கும் இடம் கூட சொந்தம் இல்லாமல் இருந்தது. நிலச் சுவான்தார் வீட்டில்தான் குடியிருக்க வேண்டி இருந்தது.
உத்தரவுக்கு படியவில்லை என்றாலோ, அதிகாரத் திற்குக் கட்டுப்படவில்லை என்றாலோ அவர் களுடைய வீட்டின் ஓட்டைப் பிரிப்பது - கதவை உடைப்பது என்பது சர்வ சாதாரணமாக இருந்தது 1950- 1960ஆம் ஆண்டுகளில். அதைத் தடுக்க - ஒரு குறிப்பிட்ட தேதியில், எவர் எங்கு குடியிருக்கிறாரோ, அந்த குடியிருக்கும் மனை அவருக்கே சொந்தம் என்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றினார்.
குடியிருப்பு நில உரிமைச் சட்டமும், குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டம் - இந்த இரண்டு சட்டங்களும்தான் நிலத்தை தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் ஜனநாயகப்படுத்தியது.
இதனால், கிராமப்புறத்தில் உள்ள விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பெரிய அளவில் பயன்பெற்றனர். அவர்களுடைய உரிமைகள் நிலைநாட்டப்பட்டன.
அடுத்ததாக, உணவு என்பதைப் பார்த்தீர்களே யானால், நன்றாக விளையக்கூடிய பகுதியில்கூட, எல்லோருக்கும் உணவு கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல.
ஏனென்றால், நம்முடைய சமுதாயம் எப்படி கட்டமைக்கப்பட்டு இருக்கிறது என்று சொன்னால், ஜாதி ரீதியாகக் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. நிலவுடைமை ஜாதிக் கட்டமைப்பை இணைத்தே இருந்தது.
மேல்ஜாதியில் இருக்கின்றவர்களுக்கு நிலம் அதிகமாகவும், அடுத்தடுத்த ஜாதியில் உள்ளவர் களுக்கு நிலம் குறைவாகவும், கடைசியில் இருப்ப வர்கள் நிலமற்ற ஏழைகளாக, கூலித் தொழிலாளர் களாக இருந்தார்கள் - 1950-1960 ஆம் ஆண்டுவரை.
அதுபோன்ற ஒரு காலகட்டத்தில், பிரிட்டிஷ் அரசாங்கமாக இருக்கட்டும்; விடுதலை கிடைத்த பிறகு வந்த அரசாங்கமாக இருக்கட்டும்; இதுபற்றி யாரும் சிந்தித்தது கிடையாது.
கிராமப்புறங்களில்தான் விவசாயம் நடைபெறு கிறது - அங்கெல்லாம் உணவு இருக்கும் என்று கற்பனை செய்துகொண்டிருந்தார்கள்.
ஆனால், கிராமப்புறத்தில் நெல் விளைந்தாலும் கூட, எல்லோருக்கும் அந்த உணவு தானியம் போய்ச் சேராது; சேராத அளவிற்கு மேல்தட்டினர் பார்த்துக் கொள்வார்கள்.
அந்த நிலையில், அவர்களுக்கு உணவு தானியத்தைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டியது அரசின் கடமை என்பதை நினைவில் நிறுத்தி, 1974 இல்தான் முதன்முதலில் தமிழ்நாட்டில் கிராமப்புறங்கள் - நகர்புறங்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல், அனைவருக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டன. அதுவரை கிராமப்புறங்களில் ரேஷன் அட்டை கிடையவே கிடையாது.
அதுதான் முதல் விதை.
உணவு வழங்கும் கழகம்
அதற்குப் பிறகு, தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் என்று சொல்லக்கூடிய தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கும் கழகத்தைத் தொடங்கு கிறார். இந்திய உணவுக் கழகம் என்னவெல்லாம் செய்கிறதோ அதையெல்லாம் இந்தக் கழகமும் செய்யும் என்றார்.
ஏனென்றால், டில்லியில் இருக்கின்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், புட் கார்ப்பரேசன் ஆஃப் இண்டியா என்ற ஒன்றைத் தொடங்கி வைத்துக் கொண்டு, நெல், கோதுமையை கொள்முதல் செய்து வைத்து, நமக்கும், அவர்களுக்கும் ஒத்துவரவில்லை என்றால், நமக்கு உணவுப் பொருள்களை வழங்க மாட்டார்கள்.
முன்பெல்லாம் ஒரு பெரிய வேலை என்ன வென்றால், முதலமைச்சர் அவர்கள் டில்லிக்குச் செல்லும் பொழுதெல்லாம், உணவுத் துறை அமைச்சரை சந்தித்து, எங்களுக்குக் கூடுதலாக உணவுப் பொருள்களை வழங்கவேண்டும் என்று கேட்பார்கள்.
கலைஞர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டு, முதன்முறையாக டில்லிக்குச் சென்று முதல் அமைச்சராக சந்தித்தவர் யார் என்றால், உணவுத் துறை அமைச்சராக இருந்த ஜெகஜீவன் ராம் அவர்களைத்தான் பார்த்தார்.
எங்களுக்குக் கூடுலாக உணவுப் பொருள் வேண்டும் என்று கேட்கிறார். அவர் 50 ஆயிரம் டன் உணவுப் பொருள்களை வழங்குகிறேன் என்று சொல்கிறார்.
அடுத்த நாள் பிரதமரை சந்தித்துவிட்டு, மீண்டும் உணவுத் துறை அமைச்சரை சந்தித்து, இன்னொரு 50 ஆயிரம் டன் உணவுப் பொருள்கள் வேண்டும் என்று கேட்கிறார். இது வழக்கமான நடைமுறையாக இருந்தது.
இதுபோன்ற ஒரு நிலைமையை மாற்றவேண்டும் என்றால், அதற்கு இணையான அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று - இங்கே உணவுக் கழகம் தொடங்கப்பட்டது.
பிற்காலத்தில் நம்முடைய மாநிலத்தில் உணவு உற்பத்தி அதிகமாகும்பொழுதும், அரசினுடைய நிதி அதிகமாகும் பொழுதும் - அடுத்த உறுதியை அளித்தார்.
ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் 2 ரூபாய்க்கு அரிசி என்றார். கிராமப்புறங்களில் உள்ளவர்கள் யாரிடமும் உணவுப் பொருள் களுக்காகக் கையேந்தி நிற்கவேண்டிய அவசிய மில்லாமல் போயிற்று.
இது ஒரு மிகப் பெரிய சாதனையாகும்.
சிறு வயதில் நான் பார்த்திருக்கிறேன் - கோடைக் காலம் வந்தால், நிறைய பேர் வட்டிக்கு நெல் வாங்கும் நிலை இருந்தது. நிறைய மக்கள் சுயமரியாதையை இழந்து நின்றார்கள். அந்த சுயமரியாதையை மீட்டுக் கொடுத்தவர் கலைஞர்.
இந்தப் பார்வை யாருக்கு வரும் என்றால், யாருக்கு சமூகநீதி உணர்வு இருக்கிறதோ, யாருக்கு சுயமரியாதை உணர்வு இருக்கிறதோ அவர்களுக்குத்தான் வரும்.
பொது விநியோகத் திட்டத்தில் கை வைத்தார்கள் என்றால், அவர்களுக்குக் கிடைத்தது மிகப்பெரிய சம்மட்டி அடி தான். அவர்களுக்குத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததுதான் வரலாறு.
இந்தியாவில் பல மாநிலங்களில் இலக்கு சார்ந்த பொது விநியோகம் என்று திட்டம் மாற்றியமைக்கப்பட்ட போதும், தமிழ்நாட்டில் இன்றுவரை அதை மாற்றி அமைக்கப்பட முடியாமல், அது அனைவருக்குமான பொது விநியோகத் திட்டமாக - இலவச அரிசியாக சென்று கொண்டிருக்கிறது.
அதன் வழியாக இந்தியாவிலேயே தமிழக மக்கள் மட்டும்தான் உணவிற்காக யாரிடமும் போய் கையேந்துவதோ அல்லது பட்டினியாக படுப்பதோ இல்லை.
நாம் ஒன்றும் பெரிய பணக்கார நாடு கிடையாது. ஆனால், இவ்வளவு பெரிய மாற்றத்தை உருவாக்கக் கூடிய வல்லமை கலைஞருக்கு மட்டும்தான் இருந்தது.
(அடுத்த இதழில் முடியும்)
- முனைவர் ஜெயரஞ்சன்