ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் நாட்டில் மனுவாதம் ஆட்சி செய்வது கொடுமையானது என்றும் மநுவாதத்தை ஏற்றக்கொண்டவர்கள்தான் ஒன்றியத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் ஹரியானாவிலும் ஆட்சி செய்கிறார்கள் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி குற்றம்சாட்டினார். சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றக்கோரி சென்னை சைதாப்பேட்டையில் சனிக்கிழமை (மே 28) தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:
“அனைத்தையும் சாதிய கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்கள் கலப்பு திருமணத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். நமது நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர், பருவ வயதை எட்டிய ஆணோ பெண்ணோ அவர்கள் தாங்கள் விரும்பியவர்களைத் திருமணம் செய்து கொள்ளச் சட்டத்தில் இடம் உண்டு’’ என்று கூறினார்.
ஆனால் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் கலப்பு திருமணத்தை ஒருசிலர் ஏற்க மறுக்கிறார்கள். தற்போதைய ஆட்சியாளர்கள் அம்பேத்கர் சிறந்த தலைவர், அரசியல் சாசன சிற்பி என்றெல்லாம் அவரை புகழ்ந்து கொண்டே மறு புறம் அவர் இயற்றிய அரசியல் சாசனத்தைக் காட்டிலும் மநு வாதத்திற்கு சேவகம் புரிபவர்களாக இருக்கிறார்கள். எனவேதான் கலப்பு திருமணத்தை எதிர்க்கிறார்கள். ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த ஒரு ஆண் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தால் பரவாயில்லை என்று கூறுபவர்கள், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த பெண் ஒடுக்கப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரைத் திருமணம் செய்தால் அய்யோ ராமா என்று கூச்சல் போடுகிறார்கள்.
திருமண வயது தொடர்பான சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு 7வயதில் 9 வயதில் பெண்களைத் திருமணம் செய்த காலம் உண்டு. திருமணம் முடிந்தவுடன் பெண்களைப் படிக்க அனுப்பமாட்டார்கள், அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்க மாட்டார்கள். ஆண்களால் வீட்டிலேயே அடக்கி வைக்கப்பட்டனர். வர்ணாசிரமம் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் இன்றும் தொடர்வது வேதனையளிக்கிறது
காதலுக்கு நேரமில்லை என்று படம் எடுத்த தமிழகத்தில் கலப்பு திருமண காதலர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. குழந்தைகள் மீது பெற்றோர் அதிக அன்பு வைத்துள்ளார்கள். அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். ஆனால் அதே பெண் வேறு ஒரு சாதியை சேர்ந்த நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டால் அந்த பெண்ணை கொலை செய்யவும் அதே பெற்றோர் தயங்குவதில்லை. எனவேதான் ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றுமாறு மார்க்சிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பெரியார் பிறந்த இந்த மண்ணில், சமூக நீதி நிலை நாட்டப்பட்ட இந்த மண்ணில் சாதி ஆதிக்கத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.