பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தின் ஆய்வு

“மதங்களைக் கொள்கையாக ஏற்றுக் கொண்ட மத ஆட்சிகள், அந்தக் கொள்கையை கைவிடுமானால், பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற வாய்ப்புகள் உண்டு” என்று இங்கிலாந்தில் உள்ள ‘பிரிஸ்டல் பல்கலைக்கழகம்’ நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஆய்வின் முடிவுகளை சர்வதேச புகழ் பெற்ற ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ (Science Advances) இதழ் வெளியிட்டுள்ளது. ‘மதச்சார்பின்மை’யைப் பின்பற்றும் நாடுகளில் பொருளாதார முன்னேற்றம் சாத்தியமா என்ற கேள்வி, கடந்த பல ஆண்டுகாலமாகவே சமூக ஆய்வாளர்களால் விவாதிக்கப்பட்டு வந்தது. இந்தக் கேள்விகளுக்கு விடை தருவதாக இந்த ஆய்வு முடிவுகள் வெளி வந்திருக்கின்றன.

கடந்த காலங்களில் சமூக ஆய்வாளர்களிடையே இரண்டு கருத்துகள் முன் வைக்கப்பட்டு வந்தன. தொழில்நுட்பமும் அறிவியலும் வளர வளர மதங்களின் பல்வேறு செயல்பாடுகள் மறையத் தொடங்கிவிடும் என்று ஒரு சாரார் கூறி வந்தனர். மதத்தை நம்பிக் கொண்டு உழைப்பவர்களின் கலாச்சாரத்தால் ‘முதலாளித்துவம்’ வளர்ச்சியடையும் என்று மற்றொரு சாரார் கூறி வந்தார்கள்.

“மதத்துக்கும் உடைமைகளுக்கும் (சொத்து) உள்ள தொடர்புகள் குறித்து நீண்டகாலமாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வு - புதிய வெளிச்சத்தைத் தந்திருக்கிறது. “ஒரு நாடு எந்த அளவுக்கு மத நம்பிக்கையில் மூழ்கி இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஏழ்மையில் சிக்குண்டு கிடக்கிறது” என்று புதிய ஆய்வு கூறுகிறது. அல்பேனியாவிலிருந்து ஜிம்பாவே வரை உள்ள உலகின் பல்வேறு நாடுகளின் தனி மனித வருவாய், சமூகப் பிரச்சினை, நாணய மதிப்பு, வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றை சேகரித்து விரிவாக நடத்தப்பட்ட ஆய்வு இது. “ஒரு நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு அந்த நாடு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம். மதச்சார்பின்மை என்ற கொள்கை வளர்ச்சிக்கு ஒரு முன் நிபந்தனை. மதச்சார்பற்ற கொள்கையைப் பின்பற்றுவதாலேயே பொருளாதார வளர்ச்சி தானாக வந்து விடும் என்பது இதன் அர்த்தமல்ல” என்று ஆய்வுக் குழுவை வழி நடத்திய டேமியன் ரக் (Damien Ruck) கூறியுள்ளார். “அதே நேரத்தில் மதச்சார்பின்மை என்ற கொள்கை வழியாக தனி மனித உரிமைகளையும் மாண்புகளையும் கூடுதலாக மதித்துப் பின்பற்றும்போது பொருளாதார முன்னேற்றத்தை அது சாத்தியமாக்குகிறது. இது எங்கள் ஆய்வில் கண்டறிந்த முடிவு” என்றார் ரக்.

மனித உரிமைகளுக்கும் மாண்புகளுக்கும் உரிய மரியாதை அங்கீகாரம் பெறுவதையே ‘சுயமரியாதை’ - என்றார் பெரியார்.

“மனிதத்தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம்தான். அத்தன்மையாகிய சுயமரியாதையைத்தான் மனிதன் சுயமரியாதையாகக் கொண்டிருக்கிறான்” - என்றார் பெரியார்.

அதேபோல், மத நம்பிக்கைகள், பொருளாதார வளர்ச்சியைத் தடுத்து ஏழ்மையில் மூழ்கச் செய்கிறது என்று இப்போது வெளி வந்திருக்கும் ‘பிரிஸ்டால்’ பல்கலைக்கழக ஆய்வுக் கருத்தை பெரியார் 1931ஆம் ஆண்டிலேயே கூறுகிறார்:

“நமது பொருளாதார கஷ்டமெல்லாம் முதலாவது அநாவசியச் செலவு களுக்கும், அவற்றிற்கும் அதிக செலவுகளேயாகும். 100க்கு 90 பேருடைய சம்பாதனைகள், குடும்பப் பழக்கம், மூடநம்பிக்கை யாவைகளுக்கும், சோம்பேறிகளாய் வாழ்கிறவன் சுகபோகத்துக்கும் செலவிடுவதாலேயே வீணாகி விடுகின்றன” என்றார் பெரியார். (‘குடிஅரசு’ 18.1.1931)

1990க்கு முன் உலகம் முழுதும் மக்கள் எவற்றையெல்லாம் உயர்வானவை என்று ஏற்றிப் போற்றினார்கள்? 1990க்குப் பிறகு உயர்ந்த மதிப்பீடுகளாக மதித்துப் போற்றியவைகளை அப்படியே பின்பற்றினார்களா? அல்லது 1990க்குப் பிறகு மாற்றங்கள் வந்திருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வுகள் விரிவாக நடத்தப்பட்டன.

“20ஆம் நூற்றாண்டில் மக்கள் நம்பிய மதம் தொடர்பான பல நம்பிக்கைகளிலும் செயல்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு பல நம்பிக்கை சடங்குகளை கைவிட்டுள்ளார்கள். அந்தப் போக்கு தனி மனித வருவாயில் (ஜி.டி.பி) மேம்பாட்டை ஏற்படுத்தியுள்ளது” என்று ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த டாக்டர் அலெக்ஸ் பென்ட்லே (Alex Bentley) கூறியுள்ளார்.

“சகிப்புத் தன்மை, தனி மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் தருதல் ஆகிய காரணிகள், மக்கள் நல அரசுகளில் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன என்பதும், மேற்குறிப்பிட்ட இரண்டு போக்குகளும் மதங்களைக் கடந்த மதச்சார்பற்ற கொள்கையைப் பின்பற்றும்போது இயல்பாக உருவெடுக்கிறது என்பதும்” ஆய்வாளர்களின் முடிவாகும்.

‘இந்து இராஷ்டிரம்’ அமைப்போம் - இந்தியா இந்துக்களின் நாடு என்று கூறிக் கொண்டு பார்ப்பன சமஸ்கிருதப் பண்பாடுகளைத் திணித்துக் கொண்டு பொருளாதார முன்னேற்றம் காண்பது இயலாது. மக்களை மீண்டும் படுகுழியில் மூழ்கச் செய்யும் என்ற உண்மையை இந்த ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

Pin It