மந்தவெளி சென்ட் மேரிஸ் பாலத்திற்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.07.2018) அன்று மலக்குழியில் இறங்கி எந்த ஒரு பாதுகாப்பு கருவிகளும் இல்லாமல் இரண்டு பேர் வேலை பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்ட மயிலாப்பூர் பகுதித் தலைவர் இராவணன், பகுதி செயலாளர் மாரி மற்றும் மயிலாப்பூர் பகுதி கழகத் தோழர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி வெளியே மீட்டுள்ளனர். மேலும், மலக்குழியில் மனிதர்களை இறக்கி வேலை வாங்கக் கூடாது என்று அவர்களை வேலைக்கு அனுப்பிய ஒப்பந்ததாரர்களை எச்சரித்து வந்துள்ளனர்.

இப்பகுதியில் இதுபோன்ற சம்பவத்தால் ஏற்கெனவே இரண்டு பேர் இறந்துள்ள நிலையில், பொறுப்பற்ற முறையில் மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் மீண்டும் மனிதர்களை மலக்குழியில் இறக்கி வேலை செய்ய கட்டாயப் படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்தப் பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மலக்குழியில் மனிதர்களை இறக்குவதை முற்றிலுமாக தடுத்த வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க மயிலாப்பூர் பகுதி கழகத் தோழர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கையால் மலம் எடுக்கும் இழிவைக் கண்டித்து விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

கையால் மலம் அள்ளத் தடை மற்றும் மறுவாழ்விற்கான சட்டம்-2015ஐ நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், கையால் மலம் அள்ளும் அவல நிலையைப் போக்க, அதனால் ஏற்படும் மலக்குழி மரணங்களைத் தடுக்கவும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் விருதுநகர் மாவட்டத்தில் சூலை 9, 2018 அன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 10 மணி அளவில் ஆதித் தமிழர் பேரவையின் மாவட்டச் செயலாளர் பூவை ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. ஆதித் தமிழர் பேரவை, அருந்ததியர் சனநாயக முன்னணி, தமிழ்ப் புலிகள் கட்சி, திராவிடர் கழகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஏஐடியூசி ஆகிய அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழக சார்பில் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.செந்தில் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

 வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீர்த்துப் போவதை எதிர்த்து விழுப்புரத்தில் கழகம் பிரச்சாரம்

தாழ்த்தப்பட்ட - பழங்குடி இன மக்களாக கருதப்படுகின்ற மக்களின் உரிமைக்கு ஆதரவாக உள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உள்ள விதிமுறைகளை தளர்வடையச் செய்து அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிக்கின்ற விதமாக தீர்ப்பு வழங்கியுள்ள உச்சநீதிமன்றத்தைக் கண்டித்தும் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்யக் கோரியும் 2.7.2018 அன்று திராவிடர் விடுதலைக் கழகம், மார்க்சிஸ்ட் (இந்திய) கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சின்னசேலத்தில் தொடர்வண்டி (இரயில்) மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தளர்வடையச் செய்கின்ற புதிய சட்டத்திருத்தத்தால் ஏற்படுகின்ற தீமைகள் குறித்து கொசப்பாடி, பூட்டை, அரசம்பட்டு, செந்தமிழ்பட்டு, சங்கராபுரம், வன்னஞ்சூர், அத்தியூர், கொளத்தூர், அரியலூர், பாக்கம், தொழுவந்தாங்கள், கடுவனூர் ஆகிய பகுதி மக்களிடம் சென்று விளக்கிக் கூறி பிரச்சாரம் செய்தனர்.

குடியாத்தத்தில் தீண்டாமை வெறி: களமிறங்கினர் கழகத் தோழர்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் அக்ராவரம் கிராமத்தில் உப்ரபள்ளி ஆற்றின் அருகில் ஊரின் தெருவில் சென்றதற்காக 22.07.2018 அன்று 40 பேர் கொண்ட ஜாதிவெறி கும்பல் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஜெயபிரகாஷ், ஜெயச்சந்திரன், மணிகண்டன் ஆகியோர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது. களத்தில் இறங்கிய கழகத் தோழர்கள் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி செய்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Pin It