துப்புரவுத் தொழிலாளர்கள் பாதாளச் சாக்கடை குழாய்களில் இறங்கி அடைப்பைச் சரி செய்வதைத் தடுக்கவும், இதனால் ஏற்படும் விபரீதங்களைத் தடுக்கவும் தமிழகத்தில் முதன்முறையாகக் கும்பகோணம் நகராட்சியில் பாதாளச் சாக்கடை குழாய்களில் ஏற்படும் அடைப்புகளைச் சீரமைக்க ரோபோட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு பரிசோதனை முயற்சியும் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகராட்சியில் 2008-09-ம் ஆண்டு முதல் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 5,309 மேன்ஹோல் எனப்படும் ஆளிறங்கும் குழாய்கள் மற்றும் 125 கி.மீட்டர் நீளத்துக்குக் குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 19,421 வீட்டு இணைப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன. இந்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை துப்புரவுப் பணியாளர்கள் இறங்கி சுத்தம் செய்வார்கள். அப்போது விஷவாயுக்கள் தாக்கி பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

மேலும், தொழிலாளர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு உடல் பாதிப்புகளும் ஏற்பட்டு பாதிக்கப்படுவர். இதையடுத்து பாதாளச் சாக்கடை ஆளிறங்கும் குழாய்களில் துப்புரவுத் தொழிலாளிகள் இறங்கி சுத்தம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு அதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது.

ஆனாலும் பாதாளச் சாக்கடை குழாய்களில் அவ்வப்போது அடைப்பு ஏற்படுவது என்பது வழக்கமாகி வருகிறது. இதைத் தவிர்க்கும் நோக்கில் கேரளாவைச் சேர்ந்த விமல் கோபிநாத் என்ற பொறியாளர் குழுவினர் உருவாக்கியுள்ள ரோபோட் இயந்திரம் பாதாளச் சாக்கடைக் குழாய்களில் இறங்கி அடைப்புகளை சுத்தம் செய்யும் பணியைச் செய்து வருகிறது. இந்த இயந்திரத்தைக் கும்பகோணம் நகராட்சியிலும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் 9.44 லட்சம் மதிப்பீட்டில் இந்த ரோபோட் இயந்திரத்தை வாங்கி கும்பகோணம் உதவி ஆட்சியர் பிரதீப்குமார், கும்பகோணம் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரியிடம் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி சந்திப்பில் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், ரோபோட் இயந்திரத்தைப் பரிசோதனை முறையில் இயக்கி வைத்தார். இதுகுறித்து கும்பகோணம் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி கூறுகையில், ``கும்பகோணம் நகராட்சியில் பாதாளச் சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் முன்பு தவிர்க்க முடியாத சூழலில் பாதுகாப்புக் கவசங்களோடு துப்புரவுத் தொழிலாளர்கள் ஆளிறங்கும் குழாய்களில் இறங்கி சுத்தம் செய்து அடைப்பைச் சரி செய்வர். இதைத் தவிர்க்கும் பொருட்டு தற்போது ரோபோட் இயந்திரத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் நமக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் பாதாளச் சாக்கடை குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை ரோபோட் உதவியுடன் சீரமைக்கப்படும்.

மேலும், கும்பகோணம் நகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் 45 வார்டுகளிலும் 10,000 வீடுகளுக்கு இணைப்பும், 49 கி.மீட்டர் தூரத்துக்குக் குழாயும், 1200 ஆளிறங்கும் குழாயும் பதிக்கப்பட வுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள ரோபோட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.

இதுகுறித்து கேரளாவைச் சேர்ந்த பொறியாளர் விமல்கோவிந்த் கூறுகையில், ``பாதாளச் சாக்கடை மேன்ஹோலில் தொழிலாளர்கள் இறங்கி வேலை பார்க்கும்போது பல்வேறு சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்க இந்த ரோபோட் இயந்திரம் வடிவமைக்கப்பட்டது. இந்த இயந்திரம் 60 கிலோ எடை கொண்டது. ஆறு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தரையின் மேல் மானிட்டர் மூலம் கண்காணித்து அதற்கு ஏற்றவாறு ரோபோட் இயக்க முடியும். ஆறு மீட்டர் தூரம் வரை ரோபோட் குழாயினுள் சென்று அடைப்புகளைச் சரி செய்யும். முதலில் கடந்த 7 மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு இரண்டு இயந்திரம் வழங்கினோம். தற்போது கும்பகோணம் நகராட்சிக்கு ஒரு இயந்திரம் வழங்கியுள்ளோம். இந்த இயந்திரத்தின் தொகை 17 லட்சம். ரோபோட் இயந்திரத்தை இயக்குவதற்கு தற்போது பணியில் உள்ள நகராட்சித் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது'' என்றார்.

Pin It