டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண் டுள்ளனர். பக்தி நம்பிக்கையில் மூழ்கிப் போன அந்தக் குடும்பம் வீட்டுக்குள் கோயில் கட்டி, இறப்பின் வழியாக ‘மோட்சம்’ போக முடியும் என்ற நம்பிக்கை யில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறது. உடலிலிருந்து பிரிந்த ‘ஆவி’ நேரடியாக ‘சொர்க்கம்’ போக வீட்டுச் சுவற்றில் தனித் தனியாக ஒவ்வொருவருக்கும் 11 குழாய் களைப் பதித்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகளை கடிதங்களாக எழுதி வைத்திருக்கிறார்கள். ‘மூடநம்பிக்கையால் குடும்பமே தற்கொலை’ என்று ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

“ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம் இவைகளைக் கற்பித்தவன் முட்டாள்; நம்புகிறவன் மடையன்; இவற்றால் பயன் அனுபவிக்கிறவன் மகா மகா அயோக்கியன்” என்று பெரியார் இயக்கம் கூறினால், இந்து மதத்தைப் புண் படுத்துவதாகக் கூப்பாடு போடுகிறார்கள்.

‘மனித ஆத்மாவுக்கு மரணமில்லை; அது மறுபடியும் பிறவி எடுக்கும்’ எனவே ‘மோட்சம்’ போகலாம்; ‘மரணம் இல்லை’ என்று ‘கீதை’யில் ‘கிருஷ்ண பகவான்’ கூறும் ‘தத்துவமே’ இந்த மரணத்துக்கு அடிப்படை. அதை நம்பியே இந்தக் குடும்பம் தன்னை மாய்த்துக் கொண்டிருக்கிறது.

பெரியார் இயக்கத்தை வசைபாடும் மத நம்பிக்கையாளர்கள், ‘இந்து-சந்து-பொந்து’ முன்னணிகள் மோட்சத்தை உண்மையாகவே நம்பி செயல்பட்டு, மரணித்துக் காட்டியிருக்கும் இந்தக் குடும் பத்தை, இதுதான் உண்மையான ‘இந்து’ பக்தி என்று பாராட்டியிருக்க வேண்டும்! ஏன் பாராட்டவில்லை? இந்த ‘மோட்சம் போகும் புனித மரணம்’ குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவது மதத்துக்கு எதிரானது; கீதைக்கு எதிரானது என்று அறிக்கை விட்டிருக்க வேண்டும்; ஏன் அறிக்கை விடவில்லை? ஆக இவர்கள் பேசும் ‘மத நம்பிக்கைகள்’ என்பது ஊரை ஏமாற்றும் அப்பட்டமான மோசடி என்பதை யாவது நேர்மையாக ஒப்புக் கொள்ள வேண்டும்.

‘மோட்சத்தை’ உண்மையாக நம்பி உயிரை மாய்த்துக் கொள்ள இங்கே எவரும் தயாராக இல்லை. மாறாக, திருவரங்கக் கோயில் பாதை வழியாக ‘சொர்க்கத்துக்கு’ நுழைய தயாராக இருக்கிறார்கள். இந்த சொர்க்கத்துக்கான பாதை மீண்டும் ‘பூலோகத்துக்கு’ சில நிமிடங்களில் கொண்டு வந்து சேர்ந்து விடும். வெளியே வர வழியும் கதவும் இருக்கிறது என்ற பகுத்தறிவு நம்பிக்கை தான்!

இமயமலையில் ‘கைலாசம்’ அதாவது கடவுள்கள் வாழும் ‘சொர்க்கம்’ என்ற பகுதி இருக்கிறதாம். அதற்கு ‘கைலாஷ் மானசரோவர்’ என்று பெயர். இங்கே புனித யாத்திரிகையாகப் போய் கைலாசத்தை, அதாவது ‘மோட்ச பூமியை’ப் பார்த்துவிட்டு மீண்டும் ‘பூலோகத்துக்கு’ அதாவது தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கையோடு போன 1300 பேர் நேபாளம் அருகே ‘சிமிகோட்’ என்ற இடத் தில் இப்போது சிக்கிக் கொண்டு விட்டார் கள். இவர்களில் 19 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். கடும் மழை மற்றும் நிலச் சரிவு காரணமாக உணவு, உடையின்றி தவிக்கிறார்கள். இரண்டு பேர் மரண மடைந்து விட்டார்கள். இராணுவ விமானம் வந்தால் மட்டுமே எங்களைக் காப்பாற்ற முடியும் என்று கதறும் காட்சியை தொலைக் காட்சிகள் ஒளிபரப்புச் செய்கின்றன.

மோட்சத்தை உண்மையான நம்பிக்கை யுடன் காணச் சென்றவர்கள் பிணமாகி விட்டார்கள். ‘மோட்ச’த்தை போலி நம்பிக்கையுடன் பார்க்கப் போனவர்கள் இராணுவ விமானம் மூலம் பூமிக்குத் (அதாவது சொந்த ஊருக்குத்) திரும்பக் கதறுகிறார்கள்.

இந்த மூடநம்பிக்கைகளில் சிக்கி அறிவைத் தொலைக்காதீர்கள்; ஆரியத்தின் சூழ்ச்சிக்கு பலியாகாதீர்கள் என்று பேசி வரும் பெரியாரிஸ்டுகள், பகுத்தறிவாளர்களின் கருத்தை இதற்குப் பிறகாவது, சிந்திக்க முன் வருவார்களா?

Pin It