ஜாதி மனிதர்களை மட்டுமல்ல; பறவை விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. கிளி உயர்ஜாதி, கழுகு கீழ் ஜாதி, ‘கோமாதா’ ‘பிராமணாள்’; கழுதை ‘சூத்திராள்’; கோமாதாவின் சிறுநீர், சாணம் எல்லாம் புனிதம். பசுவைக் கூட செத்தாலும் வெட்டக் கூடாது. அதற்காக சட்டங்களே பா.ஜ. க. ஆட்சிகளில் போடப்பட்டு வருகின்றன. பார்ப்பனர் வாசிக்கும் தாளக் கருவியான மிருதங்கம், இளம் பசு மாட்டுத் தோளில் தான் செய்யப்படுகிறது. ஆனால் அதைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுவோர் கீழ்ஜாதியினர்.

பாலக்காடு பார்ப்பன மிருதங்க வித்வான் ஒருவர், காஞ்சி சீனியர் சங்கராச்சாரியிடமே நேரில் போய் பசு மாட்டுத் தோலில் உருவாகும் மிருதங்கத்தை நாம் வாசிப்பது பாவமில்லையா என்று கேட்டாராம். சங்கராச்சாரி, “எல்லாவற்றுக்குமே விதிவிலக்கு உண்டு; தோஷமில்லை” என்று பதில் கூறினாராம். பார்ப்பனர்களை எதிர்த்துப் பேசி வரும் டி.எம். கிருஷ்ணா (இவரும் பார்ப்பனர் தான்). தனது நூலில் இதை எழுதி வைத்துள்ளார். பசுவுக்கு புனிதம் பேசும் வேதியர் கூட்டம் அதே பசு செத்துப் போய் விட்டால் ‘அடக்கம்’ செய்ய ‘கீழ் ஜாதிக்காரர்’ என்று இவர்கள் கூறி வரும் ஜாதியைத்தான் அழைப்பார்கள்; ஒரு சவுண்டிகூட செத்த மாட்டைத் தூக்க மாட்டான். அதே நேரத்தில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் இருப்பது பார்ப்பனர்களின் நிறுவனங்கள் தான்.

யானை சைவப் பிராணி என்பதால் அதற்கு மதச் சாயம் பூசி கோயிலில் கூட்டம் சேர்க்கப் பயன்படுத்தினார்கள். அதிலும் ‘வடகலை -தென்கலை’ நாமப் பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. இனி கோயில்களுக்காக யானைகளை வாங்கக் கூடாது என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. கழுதை வாங்கலாமா என்று எதிர் கேள்வி கேட்காதீர்கள். கழுதைக்கும் நாமம் போடலாம்; விபூதி அடிக்கலாம்; அது என்ன மனிதரா? ஒரு வேறுபாடும் அதுக்கு புரியாது. ‘யானை’ ரசிகையான மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோயில் யானைகளின் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு ‘புத்தாக்கப் பயிற்சி’களை பல கோடி அரசு செலவில் நடத்தினார்.

மதம் பிடித்த யானையை அங்குசத்தாலோ, பாகனாலோ கூட அடக்க முடியாது. மனிதர்களை மிருகமாக்கும் மதவெறி மிருகத்திடமே வந்து விட்டால் என்னவாகும்?

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் (ஜன. 2, 2023) ஒரு செய்தி வந்திருக்கிறது. தென்காசி மாவட்டத்தில் கிராமங்களில் வீதி வீதியாக கழுதைப் பால் கூவி கூவி விற்கப்படுகிறதுதாம். ஒரு லிட்டர் கழுதைப் பாலின் விலை ரூ.2000. குழந்தைகளுக்கு கழுதைப் பால் தருவது நோய்களைத் தீர்க்கும் ஜீரண சக்தியை அதிகரிக்கும் என்று கிராம மக்கள் இன்னமும் நம்புகிறார்கள். 25 மில்லி கழுதைப் பாலை வாங்கி சூடாக்காமல் அப்படியே ‘சங்கு’ வழியாக குழந்தைக்கு ஊட்டுகிறார்களாம். வீதி வீதியாக கழுதைகளை ஓட்டி வந்து கண் முன்பே கறந்து விற்கிறார்களாம்.

கழுதைப் பால் என்றாலும் பசுவின் பால் என்றாலும் இரண்டிலும் ஒரே சத்து தான் அடங்கியிருக்கிறது. கழுதைப் பாலுக்கு நோய் தீர்க்கும் குணம் உண்டு என்பது அறிவியலால் நிரூபிக்கப்படவில்லை. அது மூடநம்பிக்கை தான் என்று மருத்துவர்கள் கூறுவதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு செய்தி கூறுகிறது.

‘எருமை மாடு’, ‘அறிவு கெட்ட கழுதை’ என்பவை வழக்கத்தில் வசவுச் சொல்லாகவே மாறி விட்டன. ‘பசு மாட்டுக்குப் பிறந்தவனே; நீ பசு மூத்திரத்தையா குடிக்கிறாய்?’ என்றெல்லாம் தவறிப் போய்கூட வாய்களில் வருவதில்லை. அந்த அளவுக்கு பார்ப்பனியம் மூளைக்குள் நிரந்தரமாக ‘டெண்ட்’ அடித்து உட்கார்ந்திருக்கிறது.

கழுதையும் உதைக்கும் பசுவும் கொம்பைப் பிடித்து ஆட்டினால் உதைக்கும்; இரண்டும் பால் கறக்கும்; இரண்டும் செத்து மடியும்; ஒரே ஒரு வித்தியாசம் தான். கழுதை பொதி சுமக்கும்; பசு அதற்கும் தகுதி இல்லை. மாறாக பார்ப்பனியம் தான் பசுவை சுமந்து கொண்டு திரிகிறது.

உ.பி. ஆதித்ய நாத் பசுவுக்கு அரசு செலவில் குளிர் காக்கும் போர்வைகளை வழங்கியிருக்கிறார். அங்கே குழந்தைகள் தான் மருத்துவமனையில் ‘ஆக்சிஜன்’ சிலிண்டர் பற்றாக்குறையில் செத்து மடிகிறார்கள்! பசுவுக்கு பூணூல் போடாத ஒரு குறை தான்!

- கோடங்குடி மாரிமுத்து

Pin It