கர்நாடக இசைக் கலைஞரான டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்குவதாக மியூசிக் அகாடமி அறிவித்தவுடன் இரண்டு பெண் பார்ப்பன கர்நாடக இசைக் கலைஞர்கள் பொங்கி எழுந்தார்கள். சங்கராச்சாரிகளை எதிர்க்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எப்படி விருது வழங்கலாம் என்று மியூசிக் அகாடமியின் தலைவர் முரளி அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். டி.எம்.கிருஷ்ணா தலைமை தாங்கும் இசை மாநாட்டை தாங்கள் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்தனர்.tm krishna 375இதற்கு அகாடமியின் தலைவர் முரளி, நாங்கள் விருது வழங்குவதற்கு ஒருவரது இசைத் திறமையைத் தான் மதிப்பிடுகிறோமே தவிர அவர் எந்தக் கருத்தைக் கொண்டிருக்கிறார் என்பதின் அடிப்படையில் அல்ல என்று பதிலடி கொடுத்தார்.

நந்தினி, காயத்ரி என்ற இரண்டு பார்ப்பனப் பெண்களும், பிராமணர்களை இனப்படுகொலை செய்யச் சொன்னார் என்று கூறியப் பெரியாரை இவர் புகழ்கிறார் என்று உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர்.

காயத்ரி, நந்தினி ஆகியோரின் எதிர்ப்பைத் தொடர்ந்து சங்கீத கலாநிதி விருது பெற்ற டி.எம்.கிருஷ்ணாவுக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்ததுடன், பெரியார் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளுக்கும் அவர் பதிலளித்தார்.

சித்திர வீணை இசைக் கலைஞரான ரவிக்கிரன், டி.எம்.கிருஷ்ணாவை எதிர்த்து மியூசிக் அகாடமி தனக்கு வழங்கிய விருதைத் திருப்பியளிப்பதாக அறிவித்தார். ஹரி கதை காலட்சேபகர் துஸ்யந்த் ஸ்ரீதர் என்பவர் தர்மம், அயோத்தியா, ஸ்ரீ ராம பகவான் குறித்து டி.எம்.கிருஷ்ணாவின் கருத்துக்களால் நான் மிகவும் துயரமடைந்துள்ளேன் என்று கூறியதோடு பரமாச்சரியாருக்கும், சங்கீத ஆத்மாவுக்கும் இது எதிரானது என்று கூறுகிறார்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக் கூடாது என்று அவரின் பேரன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றம், விருது வழங்கலாம், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் வழங்கக் கூடாது என்று தீர்ப்பளித்தது. இவை எல்லாம் கடந்த மார்ச் மாத நிகழ்வுகள்.

டிசம்பர் 26 அன்று மியூசிக் அகாடமியில் டி.எம்.கிருஷ்ணாவின் இசை பெரும் புரட்சியைச் செய்தது. ஜாதி கடந்து பல்லாயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டனர். லுங்கிக் கட்டிக் கொண்டு வந்தார் டி.எம்.கிருஷ்ணா; அவாள் பாடும் கர்நாடக சங்கீதத்தில் தனக்கும் ‘மேதமை’ உண்டு என்று நிரூபித்தார். அனைத்து மதங்களும் சமம், மக்கள் சுதந்திரம் பெற வேண்டும் என்ற பாடல்கள் அரங்கை அதிரச் செய்தது. மியூசிக் அகாடமி என்ற ‘அர்த்த மண்டபத்தின்’ மரபை டி.எம்.கிருஷ்ணா உடைத்தார். அகாடமியின் செயலாளர் ‘இந்து’ முரளி அதற்குத் துணை நின்றார். பார்ப்பனியத்தை பார்ப்பனர்களே எதிர்க்கத் துவங்கிய வரலாற்றுத் திருப்பம். 2024இல் நடந்து முடிந்திருக்கிறது. பார்ப்பனர்களின் பார்ப்பன விலக்கம் என்பது மகத்தானப் புரட்சி!

விடுதலை இராசேந்திரன்