கேரளத்தில் பிறந்த தோழர் இ.எம்.எஸ். இந்தியத் துணைக்கண்டத்திற்கே வழிகாட்டியாக உயர்ந்த வரலாறென்பது சென்ற நூற்றாண்டு இந்தியாவின் வரலாற்றுடன் கலந்த ஒன்று. சாதியம் அழுத்தமாக வேர்பிடித்துக் கிடந்த கேரளத் தில் அதிகாரமும் பழமையும் கைகோர்த்திருந்த செல்வாக்கு மிக்க உயர்சாதிக் குடும்பத்தில் பிறந்த வர் இ.எம்.எஸ். ஆனால், தன்னை உழைக்கும் வர்க்கத்தின் தத்துப்பிள்ளை என்று பெருமையோடு பிரகடனப்படுத்திக் கொண்டவர். அந்த மகத்தான தலைவரின் நூற்றாண்டினை முன்னிட்டு ஆதனூர் சோழன் எழுதியுள்ள இந்த நூலில் இ.எம்.எஸ். வாழ்க்கை முழுமையாக நம்முன் விரிகிறது. அந்த வாழ்க்கை ஒரு ராஜபாட்டையாக இல்லாமல், எத்தகைய இடர்ப்பாடுகளும் முட்புதர்களும் மண்டியதாக, சோதனைகள் நிறைந்ததாக இருந்த தென்பதையும்; அந்த வழியே அவர் எப்படிப்பட்ட கம்பீர ராஜநடை போட்டார் என்பதையும் வாசிக்க வாசிக்க அவர் குறித்து நமக்குப் பெருமையும், சிலிர்ப்பும் உண்டாகிறது.

இ.எம்.எஸ். பிறந்த எலங்குளம் மனையே அன்றைய சாதியத்தின் சரியானதொரு அடையாள மாக இருந்தது எனலாம். அங்கே அதிகாரமும் இருந்தது, மூடத்தனங்களும் முடை நாற்றம் வீசிக் கிடந்தன. கடவுள்களும் பிசாசுகளும் மாறி மாறி அங்கே எல்லோரையும் பயமுறுத்திக் கொண்டி ருந்தன. அந்த நிலை சங்கரன் என்ற வாரிசை அந்த இல்லம் ஈன்றெடுக்கும் வரைதான். சங்கரன்தான் அங்கே மாற்றி யோசித்த முதல் மனிதன். முதலில் தனது வீடு, தனது சமூகம் இவற்றின் இருளை நினைத்துக் கவலைப்பட்டவன் நாளாக நாளாக அந்த இருட்டு நாடு முழுதும் விரவிக்கிடக்கும் ஒன்றின் பகுதிதான் என்றும் அடையாளம் கண் டான்.

நூலின் ஆரம்பப் பகுதிகள் கேரளத்தைக் குறித்தும், நம்பூதிரி பார்ப்பனர்கள் பற்றியும் நிலவுகிற கதைகளையும் அவற்றின் புனைவுகளையும் விவரிக்கின்றன. சங்கரனின் வயதும் அறிவும் ஒருசேர வளரும் விதமும், படிப்படியாக மக்கள் பணியாளராக அவர் தன்னை உயர்த்திக் கொண்ட பாங்கும் கவித்துவ அழகோடு விவரிக்கப்படுகிறது. திலகர், கோகலே, காந்தி என்று கேள்விப்படத் துவங்கியபோது விடுதலை இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டது, ஒத்துழையாமை இயக்கம், கிலா பத் இயக்கம் ஆகியனவற்றைக் கவனித்த அவருக்கு முஸ்லிகள் மீது ஏற்பட்ட மரியாதை, அதன் பின்னர் ஏற்பட்ட மாப்ளா கலவரம், பள்ளிக்கூடம் போகத் தொடங்கிய போது சாதி, மதங்கடந்து மனிதர்கள் பலரோடு பழகநேர்ந்த விதம், காங்கிரஸ் இயக்கத் தோழர்ளோடு மெல்ல மெல்ல அவருக்கு ஏற்பட்ட நெருக்கம் என்று அந்நாளைய வரலாற்றுடன் பின்னியதாக இ.எம்.எஸ். வரலாறும் நுட்பத்தோடு இந்நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.

காங்கிரசிற்குள்ளேயே வர்க்க அரசியல் சார்ந்து சிந்தித்த காங்கிரஸ் சோசலிஸ்ட்களின் அணியில் தொடங்கி, கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்கும் முக்கியத் தலைவர்களுள் மிக முக்கியமானவராக விளங்கியவர் இ.எம்.எஸ். சாதி விலக்கம் செய்யப் பட்ட அவருக்கு யாருமே பெண் தர மறுத்த சூழ லில் குடமாளூர் தெக்கேடத்து இல்லத்தைச் சேர்ந்த ஆர்யாவுக்கும் அவருக்கும் நடந்த திருமணம் பற்றி யும், கேரளத்தில் நம்பூதிரி சமூகத்துத் திருமணச் சடங்குகளையும் நம் கண்முன்னே காட்டுகிறார் நூலாசிரியர். அதில் இ.எம்.எஸ். மேற்கொண்ட மீறல்களும் படம் பிடித்துக் காட்டப்படுகின்றன.

ஒரு கம்யூனிஸ்ட்டாக அவர் மேற்கொண்ட ஒழுக்கமும், கொள்கைப் பற்றும் நிறைந்த வாழ்க் கையின் எல்லா நுணுக்கங்களையும் இந்நூல் அறியத் தருகிறது. அவரது தலைமறைவு வாழ்க்கை, மார்க்சிஸ்ட் கட்சி உதயம், அதன் முக்கியச் சிற்பி யாக இருந்து, உலகிலேயே முதன்முதலாகத் தேர்தல் மூலமாகக் கேரளத்தில் அவர் அமைத்த கம்யூனிஸ்ட் அரசும், அதன் பாய்ச்சல் வேக முற் போக்குச் செயல்பாடுகளைக் கண்டு காங்கிரசுக்கு ஏற்பட்ட அச்சமும், அதனால் அவரது அரசு இந்தி யாவிலேயே முதன்முதலாக கலைப்புக்குப் பேர் போன 356 வது சட்டப்பிரிவைச் சந்தித்ததும் இந் நூலில் மிக நேர்மையோடு பதிவு செய்யப்பட்டி ருக்கிறது.

பொதுச்செயலாளராக மார்க்சிஸ்ட் கட்சிக்கும், ஒரு மார்க்சிய அறிஞராக இந்தியத் தத்துவ இயலுக்கும் குறிப்பிடத்தக்க பங்காற்றிய இ.எம்.எஸ். உலகக் கம்யூனிஸ்ட் இயக்கமும், ஜனநாயக இயக்க மும் கவனத்தில் கொண்ட ஒரு இந்தியத் தலைவரா வார். இந்திய மண்ணில் மதவாதத்தால் ஏற்படும் ஆபத்துக்கு எதிராகத் தீவிரமாக முழங்கிய அந்தத் தலைவரின் எளிய வாழ்க்கையைப் போலவே அவரது வரலாற்றையும் எளிமையுடன் சுவை குன்றாமல் தந்திருக்கிறார் ஆதனூர் சோழன். நக்கீரன் பதிப்பகத்தாரும் நேர்த்தியோடு அச்சாக்கி யிருக்கிறார்கள். இவர்கள் பாராட்டுக்குரியவர்கள். புதிய தலைமுறைத் தமிழர்கள் சென்ற நூற்றாண்டின் வரலாற்றோடு இ.எம்.எஸ். குறித்தும், இடதுசாரி அரசியல் குறித்தும் அறிந்து கொள்ள நிச்சயம் படிக்கவேண்டிய நூல் இது.

- சோழ.நாகராஜன்

வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,

105, ஜானி ஜான்கான் ரோடு,

சென்னை - 600 014. விலை: ரூ 175.

Pin It