தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இயங்கும் அம்பேத்கர் ஆய்வு மையமும் இணைந்து செப்டம்பர் 4,5,6,7 தேதிகளில் அம்பேத்கர் சிந்தனைகள் குறித்த பயிலரங்கை நடத்தினார்கள். தமிழகம் முழுவது மிருந்து 110 தோழர்கள் (தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில நிர்வாகிகள் 10 பேர் உட்பட) இப்பயிலரங்கில் பங்கேற்றனர். அது குறித்த செய்தித்தொகுப்பாக அல்லாமல் அங்கு முன்னுக்கு வந்த விவாதப்புள்ளிகளை மட்டும் இங்கே தொட்டுக்காட்டுகிறோம்.

துவக்கவிழாவில் வரவேற்புரை ஆற்றிய அம்பேத்கர் ஆய்வு மைய இயக்குநர் முனைவர் டி. தர்மராஜ் இந்த மேடை வரலாற்றால் தீர்மானிக்கப்பட்ட மேடை என்று சரியாகக் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் தலித் மக்களின் விடுதலைக்கான (அது மதத்தின் வழியாக என்றாலும்) ஆரம்ப விதைகளை ஊன்றிய புனித சவேரியார் அவர்கள் பெயரில் அமைந்த கல்லூரியில் இந்தப் பயிலரங்கு நடைபெறுகிறது. தலித் என்ற வார்த்தையை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியவரும் கத்தோ லிக்கத் திருச்சபைக்குள்ளே தலித்துகளுக்கான உரிமைகளுக்காகப் போராடியவருமான அருட் தந்தை அந்தோனிராஜ் இம்மேடையில் இருக் கிறார். சாட்டையடிக்கும் சாணிப்பாலுக்கும் எதிராகப் போர்முழக்கமிட்ட பாரம்பரியத்தோடு இன்று உத்தப்புரம் போராட்டம் வரை நடத்திக் கொண்டிருக்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் தலைவர் பி. சம்பத் இந்த மேடையிலே அமர்ந்திருக்கிறார். முற்போக்கு எழுத்தாளர்கள் கூடியிருக்கிறார்கள். ஆகவேதான் இது வரலாற் றால் தீர்மானிக்கப்பட்ட மேடை என்றேன் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

19 தலைப்புகளில் அம்பேத்கரின் பன்முகப் பார்வைகள் அரங்கில் முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் மதிய அமர்வுகளாக கள அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. பாப்பாப்பட்டி,கீரிப்பட்டி தேர்தல் அனுபவங்கள், உத்தப்புரம், காங்கியனூர் மற்றும் பந்தப்புளி கோவில் நுழைவுப்போராட்ட அனுபவங்களை அந்தந்தப் போராட்டக் களங்களில் தலைமையேற்ற தோழர்களான தங்கராஜ், சு. வெங்கடேசன், ஜி. ஆனந்தன்,ஆர். கிருஷ்ணன்,பாஸ்கரன் போன்ற தோழர்கள் பகிர்ந்து கொண்டனர்.

இதன் மீதான விவாத நேரத்தில் இருவித மான கருத்துக்கள் மோதிக்கொண்டன. கோவில் நுழைவுப் போராட்டம் என்பது முக்கியமே இல்லை. வேறு பல பண்பாட்டு/ பொருளாதாரப் பிரச்னைகள் வெடிக்கும் புள்ளிதான் கோவில் நுழைவுப் பிரச்னை என்று அம்பேத்காரிய அறிஞர்கள் வாதிட்டனர். மார்க்சிய வாதிகளான பங்கேற்பாளர்கள் ‘ இதைத்தான் நாங்கள் காலம் காலமாகச் சொல்லி வருகிறோம் -பொருளியல் வாழ்க்கைதான் அடிப்படை என்று. ஆனால் கோவில் நுழைவுப் போராட்டம் ஒண்ணுக்கும் உதவாதது என்று புறந்தள்ளும் வாதத்தை ஏற்க முடியாது. ’ என்று வாதிட்டனர்.

உத்தப்புரத்தில் சுவர் உடைக்கப்பட்டு ஒரு கட்ட வெற்றி பெற்றாலும் அம்மக்களின் அடிமனதி லிருந்து எழும் கோரிக்கையாக இன்றும் அரசமர வழிபாட்டு உரிமை தொடர்கிறதே அதன் பொருள் என்ன? கோவில் நுழைவுப்போராட்டங்கள் நடந்த ஊர்களிலெல்லாம் மனரீதியான தங்கள் நெடுங்காலக்காயங்கள் இன்றுதான் ஆறுதலடை வதாக பெண்கள்,பெரியவர்கள் பேசினார்களே அது முக்கியமல்லவா என்று களத்திலிருந்து வந்த தோழர்கள் கேள்வி எழுப்பினர்.

ஒவ்வொரு நாளும் இரவு மம்மூட்டி நடித்த அம்பேத்கர் முழுநீளத்திரைப்படம் (மூன்று பாகங் களாக)திரையிடப்பட்டது. காலாராம் கோவில் நுழைவுப்போராட்டம் அதில் உணர்ச்சிகரமாக எடுக்கப்பட்டிருந்தது.

இடஒதுக்கீடும் அம்பேத்கரும் என்கிற தலைப்பில் பேசிய கருமாத்தூர் கல்லூரிப் பேராசிரியர் திரு. லூர்துநாதன் அவர்கள் இட ஒதுக்கீடு என்பதை ஒரு தலித் தனக்குக் கொடுக்கப் பட்ட ஒரு வாய்ப்பு எனக் கருதக் கூடாது. ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பான பிரதிநிதியாக நான் இவ்வொதுக்கீட்டைப் பெற்றுள்ளேன் என்றுதான் அவர் நினைக்க வேண்டும் என்பதுதான் அம்பேத்கரின் பார்வை என்று அவர் விளக்கியது எல்லோர் மனதிலும் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

தலித் என்றில்லை, ஏற்றத்தாழ்வு மிக்க இந்திய சமூகத்தில் பிறந்து தேசிய வளர்ச்சியில் சிறு பங்கை அனுபவிக்கும் ஒவ்வொருவரும் தன்னை எவ்விதமாகப் புரிந்து கொள்வது என்கிற கேள்வி யை பங்கேற்பாளர்களின் மனதில் எழுப்பிய உரை யாக அது அமைந்தது.

ஆனால், அம்பேத் கருக்கு முன்னால் இந்திய வரலாற்றில் இந்து மதத்தை யாருமே கேள்விக்கு உள்ளாக்கவில்லை என்கிற அவரது கருத்துக்கு அரங்கிலிருந்து மறுப்பலை கிளம்பியது. சித்தர்கள், பௌத்தம், சமணம் என அவ்வக்காலங்களில் எழுந்த எதிர்ப்பின் வடிவங்களை அங்கீகரிக்க வேண்டாமா என்கிற வினா எழுந்தது. இரட்டை வாக்குரிமை பற்றிய டாக்டர் ஜெயராமனின் உரை காந்தியை வில்லனாகக் காட்டியது.

முனைவர் டி. தருமராஜின் அம்பேத்கரின் புத்த தம்மம் பற்றிய உரை மனக்கிளர்ச்சி யூட்டு வதாக இருந்தது. அம்பேத்கரையும் அவரோடு சேர்ந்து மதம் மாறிய 10 லட்சம் தலித்து களையும் உலகின் பெரிய பௌத்த மடங்கள் ஏதும் இன்றுவரை அங்கீகரிக்கவில்லை என்று குறிப் பிட்டார். ஏனெனில் அம்பேத்கர் செய்தது ஒரு மத நடவடிக்கையல்ல. அது இந்துத்வ அரசியலுக்கு எதிரான மிகப்பெரிய அரசியல் நடவடிக்கையாக இருந்தது.

புத்தரை தன் வழிக்கு-தன் மக்களின் விடுதலைக்கான பாதைக்குத் தோதாக மறு வடிவமைப்பு செய்து- அந்த மறுவாசிப்புச் செய்யப்பட்ட பௌத்தத்துக்கே தன் மக்களை அழைத்துச் சென்றார் என்று தருமராஜ் ஆற்றிய உரை அரங்கில் பெரும் வரவேற்பைப்பெற்றது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சிறப்பு உட்கூறுத் திட்டம் பற்றிப் பேச வந்த தமிழக அரசின் முதன்மைச் செயலர் திரு. கிறிஸ்துதாஸ் காந்தி ஐ. ஏ. எஸ். அவர்கள் அரசின் எல்லா வறுமை ஒழிப்பு மற்றும் நலத்திட்டங்கள் அனைத்தையும் இழுத்து மூடிவிட வேண்டும் என அதிரடியாகக் கள மிறங் கினார். நலத்திட்டங்கள் யாவும் தலித்து களைப் பயனாளிகளாகவும் அரசிடம் கையேந்தும் பிச்சைக் காரர்களாவும் மாற்றுகின்றன.

சிறப்பு உட்கூறுத்திட்டத்தில் உள்ள நிதி யைக் கொண்டு ஆண்டுக்கு 100 லட்சாதிபதிகளை-முதலாளிகளை- தலித் மக்கள் மத்தியிலிருந்து உருவாக்க வேண்டும். தலித் விடுதலையைப் பின்னர் அந்த தலித் முதலாளிகள் பார்த்துக் கொள்வார்கள் என்றார். விவசாயமே நலிந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் தலித்து களுக்குப் புறம்போக்கு நிலத்தை அளந்து கொடுப் பதால் என்ன பயன்? விளையும் நிலங்களை அபகரித்து தலித்துகளுக்குக் கொடுத்தீர்களா? ரியல் எஸ்டேட் நடத்த தலித்துகளுக்கு இச்சிறப்பு உட்கூறு திட்டத்திலிருந்து பணம் கொடுக்கலாமே என்றார்.

எல்லாச் சாதிக்காரனும் முதலாளி ஆவது போல ஊழல் செய்து பணக்காரனாவதுபோல தலித்துகளும் ஆக வேண்டும் என்றார். இவ்வுரை யின் பின்னாலிருக்கும் உட்கிடக்கையை மனக் காயத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தாலும் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் வெறும் கற்பனைக்குத்தான் தீனி போட முடியும். யதார்த் தத்தில் நலத்திட்டங்களே உருப்படியாக தலித் மக்களுக்கு ஒன்றுமே போய்ச்சேராத பின்னணியில் அதற்கான முயற்சிகளையும் போராட்டங்களையும் திசை திருப்புவதாகவே அவரது உரை அமைந்த தாகப் பங்கேற்பாளர்கள் கருத்துக் கூறினர்.

மார்க்சியமும் அம்பேத்கரும் என்கிற தலைப்பில் உரையாற்றிய தோழர் அருணன் இவ்வுரைக்கான பதிலாக அழுத்தமான பல வாதங்களைப் பக்குவமாக முன் வைத்தார். (கட்டுரை இவ்விதழில்)

அம்பேத்கரிடமிருந்து முற்போக்காளர்கள் பெற்றுக்கொள்ள ஏராளம் உண்டு என்கிற காத்திரமான உணர்வை இம்முகாம் ஏற்படுத்தியது. அம்பேத்காரியவாதிகள் முற்போக்காளர்கள் மீது என்னவிதமான பார்வையைக் கொண் டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவும் கூட இப்பயிலரங்கு ஒருவகையில் உதவியாக இருந்தது.

Pin It