காந்தி படுகொலை நாள் சிந்தனை - ‘விடியல்’ ஜனவரி மாத இதழில் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை.

ஜனவரி 30, காந்தி, கோட்சேயின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியான நாள். அந்த நாளை நியாயமாக இந்துத்துவா எதிர்ப்பு நாள் என்று அறிவித்திருந்தால் சரியாக இருக்கும். ஆனால், தீண்டாமை எதிர்ப்புக்கு அரசு ஊழியர்கள் உறுதி ஏற்கும் நாளாக அது குறுக்கப்பட்டது. பார்ப்பனியத்தின் திட்டமிட்ட ஒரு சதி தான்.

இந்திய வரலாற்றில் காந்தியின் ஆளுமை பாத்திரத்தை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அவருடன் உடன்படுகிற முரண் படுகிற கருத்துகள்; அவரை உறுதியாக ஆதரித்தவர்கள், எதிர்த்தவர்கள் இருவருக் குமே உண்டு. தவறான புரிதல்களில் அவ்வப் போது குழப்பமான கருத்துகளை வெளிப் படுத்தியவர்தான் காந்தி. ஆனால் அதற்கு உள்நோக்கம் அவரிடம் ஏதும் இல்லை என்றுதான் மதிப்பிட வேண்டியிருக்கிறது.

இந்தியாவை இந்துக்களின் இராஷ்டிர மாக்குவதே - சித்பவன் பாப்பனரான திலகர் கேட்ட சுயராஜ்யம். திலகர் காலத்துக்குப் பிறகுதான் காங்கிரஸ் தலைமை காந்தியிடம் வருகிறது. காந்தி தனது சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்களையும் தலித் மக்களையும் (காந்தியார் மொழியில் ‘அரிஜன்) இணைத்துக் கொள்ளவே விரும்பினார்.

காந்தி வலியுறுத்திய ‘கதர்-தீண்டாமை விலக்கு’ கொள்கைகளில் ஈர்க்கப்பட்டதால் தான் பெரியார் காங்கிரசிலேயே சேர்ந்தார். ஆனால் அன்றைக்கு காங்கிரசுக்குள்ளேயே ஆதிக்கச் சாதிகளாகத் திகழ்ந்த பார்ப்பனர்கள் பிடிக்குள் காந்தி சிக்குண்டு கிடந்த நிலையில், பெரியார் காந்தியின் எதிர்ப்பாளரானார். காந்திக்கு இருந்த மக்கள் செல்வாக்கை இந்துத்துவ சக்திகள் தங்கள் பாசிசக் கொள்கைக்குப் பயன்படுத்திக் கொள்ள முயன்ற நிலை உருவானபோது காந்தியின் பெயரால் மக்களிடம் கட்டமைக்கப்பட்ட ‘புகழ் மாயை’யைத் தகர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் பெரியார்.

தமிழ்நாட்டு சுற்றுப் பயணங்களில் காந்தி யாருக்கு நேரடியாகக் கிடைத்த நேரடியான அனுபவங்கள் இந்துத்துவ பார்ப்பனியம் குறித்த புரிதல்களை அவரிடம் உருவாக்கியது என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மை.

1927ஆம் ஆண்டு திருச்சியில் பார்ப்பன நிறுவனமாக விளங்கிய தேசிய கல்லூரியில் காந்தி பேச அழைக்கப்பட்டிருந்தார். கல்லூரி நிர்வாகம் காந்திக்கு வரவேற்பு பத்திரம் ஒன்றை எழுதி வாசித்தது. ஆனால் அது சங்பரிவார்கள் கூறும் ‘தேவபாஷை’யான சமஸ்கிருதத்தில் இருந்தது. சமஸ்கிருதத்தில் பற்று கொண்ட காந்தியார், இதனால் மனம் குளிர்ந்து போவார் என்று கல்லூரி பார்ப்பன நிர்வாகம் நினைத்தது. ஆனால், காந்தியின் கருத்தோ வேறு விதமாக இருந்தது. வரவேற்பு பத்திரத்தை வாசித்து முடித்தவுன் காந்தி, “இந்தக் கூட்டத்தில் சமஸ்கிருதம் தெரிந் தவர்கள் இருந்தால் கையை உயர்த்துங்கள்” என்று கேட்டார். விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே கையை உயர்த்தினார்கள். “பெரும் பாலோருக்கு சமஸ்கிருதம் தெரியாதபோது, அந்த மொழியில் ஏன் வரவேற்பு பத்திரம் வாசிக்க வேண்டும்?” என்று காந்தி கேட்டார். கல்லூரி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

காந்தியுடன் வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த காகாகலேல்கர் (இவர் சுதந்தித்துக்குப் பிறகு இந்திய அரசு நியமித்த முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக செயலாற்றியவர்). உங்களுக்கு சமஸ்கிருதம் பிடிக்குமே, ஏன் எதிர்த்தீர்கள்? என்று கேட்டதற்கு காந்தியார் தந்த பதில் மிகவும் முக்கியமானது. “இப்பகுதியில்” பிராமணர், பிராமணரல்லாதார் இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தின் எதிரொலியாகத்தான் வரவேற்புரையை சமஸ்கிருத்தில் எழுதியிருக்கிறார்களோ என்று நான் அய்யப்படுகிறேன். அதனால் தான் என் வருத்தத்தை வெளிப்படுத்தினேன்” என்றார் காந்தி. (ஆதாரம்: ம.பொ.சி. எழுதிய தமிழகத்தில் பிற மொழியினர் நூல்)

1947ஆம் ஆண்டில் ‘சுதந்திரத்துக்கு’ சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் முதலமைச்சராக இருந்தவர் ஓமந்தூர் இராமசாமி (ரெட்டியார்). பார்ப்பன ரல்லாத பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக் கீட்டை முதன்முதலாகக் கொண்டு வந்தவர் இவர்தான். பார்ப்பனர்கள் கொதித்துப் போனார்கள். அப்போது தமிழகம் வந்திருந்த காந்தியை சந்தித்து, “இராமசாமி ரெட்டியார், இராமசாமி நாயக்கராக செயல்படுகிறார். இடஒதுக்கீடு உத்தரவு காரணமாக ‘பிராமண’ மாணவர்கள் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர முடியவில்லை” என்று புகார் செய்தனர். காந்தி திருப்பி கேட்டார், “பிராமணர்கள் என்று வந்து விட்டால் அவர்கள் கடமை வேதத்தை ஓதுவதும், வேதத்தை பயிற்றுவிப்பதுதானே? இன்ஜினியரிங் படிப்பு படிப்பது பிராமண தர்மமாகுமா?” என்று கேட்டார். பார்ப்பனர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

 குற்றாலம் நீர்வீழ்ச்சிக்குப் போன காந்தி, அங்கே தீண்டப்படாத மக்களுக்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தவுடன், அருவியில் குளிக்க மறுத்து விட்டார். சிதம்பரம் நகருக்கு காந்தியார் வந்தபோது, தில்லை நடராசன் கோயிலுக்குள் காந்தி, “தீண்டப்படாத மக்களை” அழைத்து வந்து விடுவார் என்று அஞ்சிய தீட்சதர்கள், நடராசன் கோயிலுக்குப் பூட்டு போட்டனர். காந்தி சிதம்பரம் நகரை விட்டுச் சென்ற பிறகுதான் கோயில் பூட்டு திறக்கப்பட்டது.

காந்தியார், கோட்சே பார்ப்பனரால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி வந்தவுடன் காங்கிரஸ் காரர்களே, பார்ப்பனர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடங்கியதற்கான வரலாற்றுச் சான்றுகள் ஏராளம் உண்டு. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் என்ன நடந்தது என்பதை அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்துறை அமைச்சராக இருந்த துவரகா பிரசாத் மிஸ்ரா, “ஒரு சகாப்த வாழ்க்கை” (டுiஎiபே யn நசய) என்ற தனது சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார்.

காந்தி கொலை நடந்தபோது, ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கர் சென்னையில் இருந்தார். சேதி அறிந்து நாக்பூர் விரைந்து, ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ஒன்று திரண்டிருக்கும் சேதி அறிந்த பார்ப்பனரல்லாத மக்களும் காங்கிரசாரும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு திரண்டு போய் தீ வைக்க முயன்றனர். பாதுகாப்புக் கேட்டு, தன்னிடம் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பேசியபோது, அவர்களுக்கு பாதுகாப்பான இடம் சிறைதான் என்று கைது செய்ய உத்தரவிட்டதாக மிஸ்ரா எழுதியிருக்கிறார். பார்ப்பனர் குடியிருப்புகள், அவர்கள் நடத்திய கல்வி நிறுவனங்கள் தாக்கப்பட்டதை யெல்லாம் அவர் விவரிக்கிறார். பார்ப்பனரல் லாதார் இயக்கம் தீவிரம் பெற்றிருந்த தமிழ்நாட்டு சூழலில், அப்போது பெரியாரோ அவரது திராவிடர் இயக்கத்தினரோ பார்ப்பனருக்கு எதிராக கலவரத்தைத் தூண்டி விட்டிருந்தால் எத்தகைய இழப்புகளை அவர்கள் சந்தித்திருக்கக் கூடும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஆனால், அந்த சூழலிலும் பார்ப்பனர்களுக்கு எதிரான வன்முறைகள் மகாராஷ்டிராவைப் போல் இங்கே வந்து விடக் கூடாது என்றுதான் பெரியார் மனிதநேயத்தோடு கருதினார். அதுவரை பெரியாரை “உள்ளே அழைக்க மறுத்த” வானொலி, அப்போது மட்டும் பெரியாரை பேச அழைத்தது. பெரியாரும் தயங்காது போனார். ‘கலவரங்களில் எவரும் ஈடுபட வேண்டாம் அமைதி காக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார். தனது ‘குடிஅரசு’ பத்திரிகையில் “மக்கள் தங்களது அரசியல் மத வேறுபாடுகளை மறந்து சகோதர பாவத்துடன் நடந்து கொள்வதே நாம் காந்தியாருக்கும் செய்யும் மரியாதை” என்று எழுதினார்.

கோவையிலே இந்து முன்னணி நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்பதை ஒரு சாக்காக வைத்து கோவையில் இஸ்லாமியர் நிறுவனங்களை குடியிருப்புப் பகுதிகளை இந்துத்துவ சக்திகள் சூறையாடியதை இந்த நிகழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

அண்ணா, ‘திராவிட நாடு’ இதழில் காந்தியார் மறைவு குறித்து பல கட்டுரைகளை தீட்டினார். அதில் ஒரு பகுதியை சுட்டிக் காட்டலாம்.

“இந்து மதத்தில் ஏறிப்போய், ஊறிப்போய் இருந்த கேடுகளை எல்லாம், தமது பரிசுத்த வாழ்க்கை யாலும், தூய்மையான உபதேசத் தாலும், புதிய தத்துவார்த்தத் தாலும், நீக்கும் காரியத்தில் உத்தமர் காந்தியார் ஈடுபட்டிருந் தார். இந்த அரும்பணியால், அன்பு மார்க்கம் தழைக்கும். அனைவரும் ஆண்டவனின் குமாரர்களே என்ற உண்மை துலங்கும் என்று மனமார நம்பினார். அந்தோ! இந்த அகத் தூய்மையோ, புறத் தூய்மையோ நெடுங்காலமாகக் குவிந்து வளர்ந்து போயுள்ள மதவெறியர் களைத் திருத்தாதே என்று கூறி வந்தோம் - அவர் யாரிடமிருந்து அன்பு மார்க்கத்தை எதிர்பார்த் தாரோ, அங்கிருந்தே அவர் உயிரைக் குடிக்கும் ஒரு வெறி பிடித்த இந்து கிளம்பினான். இவன் இந்து மார்க்கத்தையும், இந்து அரசையும் நிலைநாட்டும் நோக்கம் கொண்டவன் என்று கூறப்படுகிறது. ஹைதராபாத் சமஸ்தான சத்தியாக்கிரஹத் திலும் கலந்து கொண்டானாம். பெயர் நாதுராம் விநாயக் கோட்சே. உலகை நோக்கி நமது உள்ளத்தை நோக்கி, “உத்தமரை வீழ்த்தி விட்டான் ஓர் உலுத்தன். அவருடைய உடலை நாங்கள் இழந்து விட்டோம் - அவருடைய உத்தமக் கொள்கைகளின் மூலம், அவர் இனி என்றென்றும் வாழ்வார்”

என்று எழுதினார் அண்ணா.

காந்தியின் கொள்கைகளை கடுமையாக எதிர்த்து வந்த திராவிட இயக்கம், ‘இந்துத்துவா’வின் குண்டுகள் அவர் உயிரை ‘காவு’ வாங்கியபோது, சரியான கொள்கை நிலைப்பாட்டை மேற்கொண்டதை இந்த நிகழ்வுகள் படம் பிடிக்கின்றன.

மக்கள் ஒற்றுமைக்கு முதன்மையான எதிரிகள், இந்த பார்ப்பனிய பாசிஸ்டுகள்தான் என்ற ஆழமான புரிதல் திராவிடர் இயக்கத் துக்கு எப்போதும் உண்டு. தமிழ் நாட்டின் உளவியல் இந்த பாசிசத்தை ஒருபோதும் அனுமதித்துவிடாது. இதை காந்தியாரே அவரது காலத்தில் உணர்ந்திருந்ததைத்தான் தமிழகத்தில் அவர் பிரதிபலித்த கருத்துகளும் உணர்த்துகின்றன. 

Pin It