வன்முறை யாரிடம் இருந்து வந்தாலும், எந்த வடிவத்தில் வந்தாலும் அதை ஏற்க முடியாது.
வெறுப்பரசியலும் வன்முறை உருவாகக் காரணமாக அமைகிறது. சில நேரங்களில் அங்கே உயிரிழப்பும் ஏற்படுகிறது. மனிதநேயம் உடைய யாரும் இதை ஏற்க மாட்டார்கள்.
அண்மையில் நுபுர் சர்மாவின் வெறுப்பரசியல் பேச்சால் நாடே கொதித்துப் போனது. அவர் கைது செய்யப்படவில்லை. ஆனால் வழக்குகள் போடப்பட்டு உள்ளன.
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக இராஜஸ்தான் மாநிலம், உதய்பூரின் தான்மண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து கன்ஹையா லால்தேலி என்பவர் சமூக வலைதளத்தில் ஒரு செய்தியைப் போட்டிருந்தார்.
அவர் ஒரு துணி தைக்கும் தொழிலாளி. வழக்கம் போல அன்றும் அவர் தன் கடையைத் திறந்து தையல் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது துணி தைக்க வேண்டும் என்று ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகிய இருவர் வந்துள்ளனர். திடீரென்று ஒருவர் தையல் கடைக்காரரைப் பிடித்துக் கொள்ள, மற்றவர் தான் வைத்திருந்த ஆயுதத்தால் அவரின் தலையைக் கொய்து விட்டார்.
இதில் மிகப்பெரும் கொடுமை என்னவென்றால், அக்கொலைச் சம்பவத்தை அவர்களே படமெடுத்து சமூக தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். ஈரநெஞ்சம் உள்ள யாரும் இப்படிச் செய்ய மாட்டார்கள்.
கைதிகள் யாரொருவருக்கும் மரணதண்டனை கூட கொடுக்கக் கூடாது என்று உலக அளவில் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இங்கே ஆணவத்தால், சாதியால், மதத்தால், தனிப்பட்ட பகையால், பொறுப்பற்ற பேச்சுகளால் வன்முறைகள் நடைபெறுகின்றன.
புத்தர், அம்பேத்கர், காந்தியார், பெரியார் போன்ற தலைவர்கள் வன்முறையை ஆதரித்தவர்கள் அல்லர்.
வன்முறையற்ற மனிதர்களால் சமூகம் பண்படும். வன்முறையற்ற சமூகங்களால் நாடு பண்படும்.
உதய்பூர் வன்முறையைக் கண்டிப்பதோடு, வன்முறைக்கு விடை கொடுத்து, மானுடத்தை உயர்த்திப் பிடிப்போம்!