இருவேறு சாதியைச் சேர்ந்த வயது வந்த ஆணும் பெண்ணும் விருப்பப்பட்டு செய்து கொள்ளும் காதல் திருமணங்களைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், சாதி மறுப்புத் திருமண தம்பதியரை தாக்குவது சட்டவிரோதம் என்று அறிவித்துள்ள நீதிபதிகள், இவ்விஷயத்தில் நடத்தப்படும் கட்டப்பஞ்சாயத்துகளை மத்திய அரசே முன்வந்துதடை செய்ய செய்ய வேண்டும்; இல்லையேல் நீதிமன்றம் தலையிட்டு உரிய முடிவெடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் நடைபெறும் கட்டப் பஞ்சாயத்துகளை குறிப்பிட்டு, சக்தி வாஹினி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் கடந்த 2010இல் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

 இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் கருத்தைக் கேட்டிருந்தது. அதற்கு, “கிராமங்களில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகளின் வன்முறைகளில் இருந்து பெண்களைக் காக்க - கண்காணிக்க உச்சநீதிமன்றமே ஏதாவது வழிமுறையை சொல்ல வேண்டும்” என்று மத்திய அரசு கூறிவிட்டது. இவ்வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அவரவரின் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம்; அவர்களை கட்டப் பஞ்சாயத்து, சாதி அமைப்பு பஞ்சாயத்து, ஊர் பஞ்சாயத்து என்ற பெயரில் தாக்குவது சட்ட விரோதமானது” என்று கண்டித்த நீதிபதிகள்,

“திருமண வயது வந்த ஆணும் பெண்ணும் காதல் திருமணம் செய்வதைத் தடுப்பது சட்ட விரோதம்; சாதி மறந்து காதல் திருமணம் செய்வதைத் தடுக்கும் அதிகாரம் பெற்றோர், சாதி அமைப்பு, கட்டப்பஞ்சாயத்து, ஊர் பஞ்சாயத்து, சமூகம் என யாருக்கும் கிடையாது” என்று தெரிவித்தனர்.

மேலும், “சாதி மாறி திருமணம் செய்து கொள்ளும் இளம் தம்பதிகள் ஆணவப் படுகொலை செய்யப்படுவதை தடுக்க, ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் ராஜூ ராமச்சந்திரன் அளித்த பரிந்துரைகள் மீது மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்”என்று உத்தரவிட்ட நீதிபதிகள்,

“இரு வேறு சாதியினருக்கு இடையே நடக்கும் திருமணத்துக்கு எதிராக நடக்கும் கட்டப்பஞ்சாயத்துக்களை மத்திய அரசு தடுக்க வில்லை என்றால் நீதிமன்றம் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்” என்றும் எச்சரித்தனர்.

Pin It