கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிராகத் திரண்ட மக்கள் சக்தியின் வலியுறுத்தலுக்கு செவி சாய்த்து, இந்தப் பிரச்சினையில் மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை பணிகளை நிறுத்தி வைக்குமாறு தமிழக அமைச்சரவை மத்திய அரசுக்கு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளது.
சமீப காலத்தில் தமிழகத்தில் மக்கள் போராட்டம், சுற்றுச்சூழல் போராட்டத்துக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றி இது.
கன்னியாகுமரி அருகேயுள்ள இடிந்தகரையில் கூடங்குளம் அணு மின் திட்டத்தை எதிர்த்து செப்டம்பர் 11ந் தேதி தொடங்கி 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். நாளுக்குள் நாள் இந்தப் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. 23 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தமிழக அமைச்சர்கள் எஸ்.டி. செல்லபாண்டியன், பி. செந்தூர்பாண்டியன், எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் போராட்டக் குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது. அதனால் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என போராட்டக் குழுவினருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும், போராட்டம் தொடர்ந்தது. மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியை பிரதமர் அனுப்பி வைத்தார். தி.மு.க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.
இந்நிலையில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார், தூத்துக்குடி மறை மாவட்ட கத்தோலிக்க பேராயர் யுவான் அம்புரோஸ், பாலபிரஜாபதி அடிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு தமிழக முதல்வரை செப்டம்பர் 21ந் தேதி சந்தித்தனர்.
அப்போது அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார்.
அதன்படி, மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு பிரதமரையும், மத்திய அரசையும் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் தமிழக அமைச்சரவையில் செப்டம்பர் 22ந் தேதி நிறைவேற்றப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டமும் திரும்பப் பெறப்பட்டது.
மக்களுக்கு அச்சம் தரும் எந்த ஆபத்தான திட்டத்தையும் தனது அரசு ஊக்குவிக்காது. இது தொடர்பாக நிதி அமைசர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான குழு விரைவில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவிருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். அதேநேரம் இந்த மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில், பிரச்சினைகளை திசை திருப்பும் வகையில் செய்திகள், தலையங்கங்கள், கட்டுரைகளை வர்த்தக நோக்கத்துடன் செயல்படும் சில தேசிய ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. யாருடைய நலன்களுக்காக அவர்கள் குரல் கொடுக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. மக்கள் தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் போதெல்லாம் இது ஜனநாயக விரோதமானது, நீங்கள் வழக்குத் தொடுக்க வேண்டியது தானே என்றெல்லாம் குரல்கள் வருகின்றன. மக்கள் சக்திக்கு பதில் சொல்ல முடியாமல் அரசு, ஆட்சியாளர்கள் நிழலில் குளிர் காய்பவர்களே இப்படி பேசுகிறார்கள்.
ஆனால் எல்லா காலத்திலும் மக்களை அடக்கி வைத்திருப்பது சாத்தியமில்லை. அதுவும் மிக மோசமான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பெருகி வரும் இக்காலத்தில், கூடங்குளம் போன்ற ஆபத்தான அணு உலைத் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு பெற்று வரும் சாதாரண மக்கள் ஒன்று திரண்டு இந்த போராட்டத்தில் முதல் கட்ட வெற்றியைப் பெற்றுள்ளனர். இது சுற்றுச்சூழல் அக்கறைகளை, மனித உரிமைகளை, மனித இனம், பூமி மீது அக்கறை கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் பெருமிதம் தரும் விஷயம்.