எதிர்பார்த்தது நடந்து விட்டது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை அப்பகுதி மக்கள் எதிர்ப்பையும் மீறி துப்பாக்கி முனையில் இயங்கச் செய்வதற்கு தமிழக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

ஒரு அணுஉலை அமைப்பதற்கு மேற்கொள்ளப் பட வேண்டிய அடிப்படையான ஆய்வுகளைப் புறக்கணித்துவிட்டு, பன்னாட்டு ஒப்பந்தத்தை பன்னாட்டு நிறுவனங்களின் மின்சாரம் தேவைக்காக இந்தியப் பார்ப்பன பனியா ஆட்சி, மக்கள் மீது திணிப்பதற்கு இப்போது மாநில ஆட்சியும் துணை போகிறது.

அணு உலை தேவையா இல்லையா என்ற விவாதங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்; ஒரு அணு உலை அமையப் போகும் இடத்தின் நிலவியல் என்பது மிக முக்கியமாக ஆய்வுக்கு உட்படுத்தியாக வேண்டும். அதற்காக அணுசக்தித் துறை வி.ஆர். வென்குலேர்ச்சர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு 1972 ஆம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது.   நிலவியல் அமைப்பு, அதன் நிலைத்த தன்மை (Geological stability) கட்டாயம் ஆராயப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்திய பல்வேறு அம்சங்களில் முக்கியமானதாகும்.

கூடங்குளத்தில் நிலவியல் அமைப்பு முறை எப்படி உள்ளது? கூடங்குளம் அணுஆலை அமைந்திருக்கும் இடத்திலிருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் அதாவது மன்னார் வளைகுடாவில் நிலச்சரிவு வழியாக சுனாமியை உருவாக்கக்கூடிய இரண்டு வண்டல் குவியல்கள் Slumps இருக்கும் ஆபத்தை, வில்லியம் வெஸ்டால் மற்றும் ஆலன் பவுரீ என்ற இரண்டு ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, 1982 ஆம் ஆண்டிலேயே அறிக்கையாக வெளியிட்டனர். கூடங்குளத்தை ஆதரிக்கும் “நிபுணர்கள்” இதை மூடி மறைத்தனர். போராட்டக் குழுவின் வல்லுனர்கள் இதை வெளிக் கொணர்ந்த பிறகு ஆதரவு விஞ்ஞானி கள் தடுமாறிப் போனார்கள். உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டிய நிலை. “சுனாமிகள் வரலாம்; வாய்ப்பு இருக்கிறது; ஆனால் அணு உலையைப் பாதிக்காது” என்று சமாதானம் கூறுகிறார்கள்.

1982 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட இந்த ‘வண்டல் குவியல்’ 2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த ‘சுனாமி’க்குப் பிறகு எத்தகைய மாற்றங்களைப் பெற்றிருக்கிறது என்பதைக் கண்டறியும் ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளப்படவில்லை. ‘சுனாமி’க்குப் பிறகு அவை மேலும் உறுதியற்றவைகளாகி மிகப் பெரும் நிலச் சரிவுகளை உருவாக்கக்கூடிய ஆபத்துகளையும் ஒதுக்கிவிட முடியாது.

• அணுஉலை அமைக்கும் பகுதி ஒரே சீரான கடினமான பாறைகளைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், கூடங்குளத்தில் அப்படி இல்லை என்று அய்.அய்.டி. பேராசிரியர் பூமிநாதன், 2004 இல் சர்வதேசப் புகழ் பெற்ற ‘கரண்ட் சயின்ஸ்’ பத்திரிகையில் ஆய்வுக் கட்டுரை எழுதினார். கூடங்குளத்தில் 2001 இல் அணுசக்தித் துறை நடத் திய ஆய்வு ஒரே சீராகவே பாறைகள் இருப்பதாகக் கூறியதை இந்த ஆய்வு மறுத்தது.

• நிலவியல் சுற்றாய்வுத் துறை ஆய்வாளர் ஆர். ராமசாமி, இந்தப் பகுதி யில் நடத்திய ஆய்வில் பல் வேறு வகை எரிமலைப் பாறைகள் இருப்பதைக் கண்டறிந்து வெளியிட் டார்.

• திருவனந்தபுரம் பல்கலைக்கழக நிலவியல் பேராசிரியர்கள் டாக்டர் பிஜு லாங்கினோஸ் மற்றும் முன்னாள் பேராசிரியர் ராமசாமி ஆகியோர் 1990களில் கூடங்குளம் பகுதியில் விரிவான ஆய்வு நடத்தி சமர்ப்பித்த ஆய்வறிக்கை அப்பகுதி நிலவியல் பற்றி அதிர்ச்சியான தகவல்களைத் தந்தது. “கூடங்குளம் பகுதியில் கடினப் பாறைகளை சுண்ணாம்புப் பாறைகள் மூடி மறைத்துள்ளன. அவற்றின் ஊடாக ‘மக்மா’ எரிமலைப் பாறைகள் பல இடங்களில் ஊடுருவியிருப்பதைக் காண முடிகிறது” என்று அந்த அறிக்கை கூறியது.

•              2010 செப்டம்பர் மாதம் 20, 26 தேதிகளில் அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் மேவாட் என்ற நகரில் உலக நிலவியல் ஆய்வாளர்கள் மாநாடு நடந்தது. அதில் திருவனந்தபுரம் நிலவியல் விஞ்ஞானி பிஜீலாங் கினோவ் என்பவர், கூடங்குளம் பற்றி சமர்ப்பித்த ஆய்வறிக்கை இவ்வாறு கூறுகிறது:

“கூடங்குளம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளின் நிலவியல் அமைப்பு, பிற தென் கிழக்கு கடலோரப் பகுதிகளின் நிலவியல் அமைப் பிலிருந்து அடிப்படையில் வேறுபட்டது. அணுமின் நிலைய 30 கிலோ மீட்டர் பகுதியில் நிலக் காந்தவியல் ஆய்வு நடத்தியபோது பாறைகளுக்குள் எரிமலைப் பொருள்கள் ஊடுருவி நிற்பதைக் கண்டறிய முடிந்தது. வெளியே தெரியாமல், சுண்ணாம்பு கற்களும், மணற் கற்களும் மறைத்து நிற்கின்றன” என்று கூறியுள்ளார். இந்த ஆய்வை திருவனந்தபுரம் நில இயல்பியல் ஆய்வு மய்யம், புவியியல் ஆய்வு மய்யம் ஆகியவற்றின் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்று நடத்தியுள்ளார். தனது ஆய்வின் முடிவுகளை நிலவியல் விஞ்ஞானிகள் மித்தா ராஜாராம் மற்றும் முனைவர் எஸ்.பி.ஆனந்த் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து செழுமைப்படுத்தியுள்ளார்.

• அணுஉலைகள் அமைந்துள்ள பகுதியிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் சுற்றுப் பகுதியில் வேறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது; அது அணுமின் நிலைய நிர்வாகக் கட்டுபாட்டில் இருக்க வேண்டும். இது அணுசக்திக் கட்டுப்பாடு அமைப்பு மக்களின் பாதுகாப்பு கருதி உருவாக்கியுள்ள அடிப்படை விதியாகும். இந்த விதிக்கு மாறாக ‘இந்தியா சிமென்ட்ஸ்’ நிறுவனம், சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை எந்தத் தடையுமின்றி நடத்தி வருகிறது.

• ஜெர்மன் நாட்டைச் சார்ந்த புவியியல் ஆய்வாளர் ஹெல்முட் ப்ருக்னர் 1987 ஆம ஆண்டு இறுதியில் கூடங்குளம் வந்து நடத்திய விரிவான ஆய்வு; சென்னை பல்கலை நிலவியல் துறை பேராசிரியர் டி.ஆர்ம்ஸ்பிரங் ஆல்ட்ரின் சாம் மற்றும் எஸ். இராமசாமி, 1998 இல் நடத்திய ஆய்வுகள் கூடங்குளம் அணு மின் திட்டம் அமைப்பதற் கேற்ற நிலவியல் அமைப்பு கொண்ட பகுதியல்ல; ஆபத்தானவை என்றே கூறின.

• அணு மின் திட்டம் அமையும் பகுதியில் மக்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும் என்ற விதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. அப்பகுதி மக்களுக்கு ஆபத்துகள் வந்தால் உயிர் தப்பிப்பதற்கான ‘பேரிடர் மேலாண்மை’ பயிற்சிகளை வழங்க வேண்டும் என்ற விதியையும் அரசு நிறைவேற்றவில்லை.

• கூடங்குளத்தை தேர்வு செய்வதில் ரஷ்ய விஞ்ஞானிகளுக்கே கருத்து வேறுபாடு இருந்தது. இந்திய விஞ்ஞானிகளிடம் கருத்து மாறுபாடு  ஏற்பட்டு பல ஆண்டுகாலம் இவை நீடித்தது. பிறகு ரஷ்ய விஞ்ஞானிகள் மூன்று பேரும் தங்கள் நாட்டில் விமான விபத்தில் பலியானார்கள். அதன் பிறகே எதிர்ப்பு இல்லாமல், இந்திய விஞ்ஞானிகள் கூடங்குளம் திட்டப் பணிகளைத் தொடர்ந்தனர்.

கூடங்குளம் பகுதி அணுஉலைக்கு ஏற்ற பகுதி தானா என்ற அய்யங்களைத் தீர்க்காமல் அது தொடர் பான ஆய்வுகளைப் புறக்கணித்துவிட்டு துப்பாக்கி முனையில் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய மாநில அரசுகள் திணிக்கின்றன.

வெல்லப் போவது அரசு அடக்குமுறையா? மக்கள் சக்தியா? தமிழகம் மட்டுமல்ல; உலகமே, இதை கூர்ந்து கவனிக்கிறது.

தமிழக போராட்ட வரலாற்றில் கூடங்குளம் மக்கள் போராட்டம், புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது.

‘அச்சம்’ போக்க வேண்டும் என்ற ஜெயலலிதா ‘அச்சுறுத்தி’ திணிக்கிறார்

மக்களின் அச்சத்தைப் போக்கிய பிறகே கூடங்குளம் அணுமின் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்றார், முதல்வர் ஜெயலலிதா. அச்சத்தைப் போக்கும் வரை, திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆனால், தமிழக முதல்வர் நியமித்த விஞ்ஞானிகள் குழு, கூடங்குளம் இடிந்தகரை பகுதி மக்களை சந்திக்கவே மறுத்தது. மக்களின் அச்சம் அப்படியே நீடிக்கிறது. இப்போது முதலமைச்சர் ஜெயலலிதா, மக்களை அச்சுறுத்தி, 5000 போலீசையும், துணை ராணுவப் படைகளையும் குவித்து, போராட்டக் குழு தலைவர்கள் மீது தேச விரோதம் உள்ளிட்ட கொடூரமான சட்டப் பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து, கைது செய்து சிறையிலடைத்து, கூடங்குளம் அணு உலையைத் திறக்கப் போகிறது.

ஈழத்தில் தமிழர்களை ஒழிக்கத் திட்டமிட்ட இலங்கை ராணுவம், அவர்களை முல்லைத் தீவு நோக்கி நெருக்கித் தள்ளியதுபோல், இடிந்தகரை மக்களும் இப்போது துப்பாக்கி முனையில் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று நாடகமாடிய ஜெயலலிதா - இப்போது மக்களை அச்சுறுத்தி கூடங்குளம் அணுமின் திட்டத்தைத் திணிக்கிறார்.

உலகம் முழுதும் நடக்கும் அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தில் புதிய அத்தியாயங்களை  இடிந்தகரை மக்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த மக்களின் போராட்டம் வெல்வது உறுதி! உறுதி!

Comments

10 comments

10
sp.maragathaselvam
vazhakkam pol tamilargal amaithi kaathaal varalaaru oru pothum nammai mannikaathu, thangal thangal pagudhikalil arasin kavanathai eerkkum alavil anaivarum porada munvaravendum.allathu arasu nirvagaththai sthambikka seium poraatangalai tamilagum muluvuathum nadathi antha makkalukku thunaiyai naam irukindrom enbathanai avargal ariyum vannam seiya vendum
ram
"அறிவு நாணயம்". பெரியார் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை மட்டுமல்ல, தனது அரசியல் மற்றும் சமூக விவாதங்களின் வலியுறுத்தும் வார்த்தை. அது பெரியார் திகவுக்கு கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு நிலைப்பாட்டில் சுத்தமாக இல்லை. இருந்தால் கீழ்கண்ட ஆங்கில கட்டுரையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் கூறுங்கள்.

அந்த நீண்ட கட்டுரை உங்களுக்கு படிக்க பொறுமையில்லை அல்லது புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், அதில் எழுப்பப்படும் இரண்டு முக்கிய கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

முதல் கேள்வி: கூடங்குளம் அணுமின் நிலையம் ஆபத்தற்றது என்றும், அதில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தடுப்பதற்கு எடுக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மாநில, தேசிய மற்றும் சர்வதேசிய மட்டத்தில் மதிக்கப்படும் இந்த துறை சார் வல்லுனர்கள் பலரும் முறையான உரிய ஆய்வுகளை செய்து அறிக்கைகளை அளித்திருக்கிறார்கள். அவையெல்லாம் எதிர்ப்பாளர்களின் கேள்விகளுக்கு முறையான, விஞ்ஞான ரீதியில் ஏற்கத்தக்க பதில்களை பதிவு செய்திருக்கின்றன. இத்தகைய ஆய்வறிக்கைகளைப்போல உதயகுமார் வகையறாக்கள் இந்த அணுமின் நிலையம் ஆபத்தானது என்பதை விஞ்ஞான ரீதியில் நிறுவும் ஒரே ஒரு ஆய்வையாவது செய்திருக்கிறார்களா? ஏன் செய்யவில்லை? அப்படியான முறையான விஞ்ஞான ஆய்வுகள் எதையும் செய்யாமல் வெறுமனே மக்களின் அறியாமையால் எழும் பயங்களை ஊதிப்பெரிதாக்கி ஆர்பாட்ட அரசியல் செய்வது எப்படி பொதுநலன் சார்ந்த விடயமாக பார்க்கமுடியும்? இந்த பொறுப்பற்ற ஊதாரித்தனத்துக்கு துணைபோவதுதான் பெரியார் திக போன்ற சமூக இயக்கங்களின் வேலையா?

இரண்டாவது கேள்வி: உலக அளவில் அணுமின் நிலையங்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு கூடங்குளத்தின் கார்பன் காப்பியாக சீனாவில் ரழ்ய உதவியுடன் கட்டப்படும் அணுமின் நிலையத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. அதுவும், "உலகின் அதிகபட்ச பாதுகாப்புடன் கூடிய அணுமின் நிலையம்" என்று கூறி அந்த ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அதே மாதிரியான அணு உலையை அதே ரழ்ய தொழில் நுட்பவியலாளர்கள் கூடங்குளத்தில் கட்டினால் அது எப்படி பாதுகாப்பற்றதாகிவிடும்? சர்வதேச அணுமின் கழகத்தைவிட விஞ்ஞானம் படிக்காத உதயகுமார் சொல்வது தான் இந்த விடயத்தில் சரி என்று வாதாட என்ன அறிவியல் அடிப்படையை அவரது ஆதரவாளர்கள் வைத்திருக்கிறார்கள் என்பது தான் என் கேள்வி.

பாகிஸ்தானின் சில மலைவாழ் பிரதேசங்களில் போலியோ தடுப்பு மருந்து குழந்தைகளை மலடாக்கிவிடும் என்கிற மத அமைப்புக்களின் பிரசாரம் இன்றளவும் வலுவாக செய்யப்படுகிறது. விளைவு இன்று வரை அந்த பகுதிகளில் போலியோ தாக்குதல் நீடிக்கிறது. அந்த பிற்போக்குத்தனத்துக்கும் இங்கே உதயகுமாரின் அணுமின் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கும் எனக்கு பெரிய வித்தியாசம் தேரியவில்லை. இதில் பெரியார் பெயர் தாங்கிய ஒரு இயக்கமும் ஒத்து ஊதுவதுதான் காலத்தின் கோலம். இது பெரியார் போதித்த அறிவியல் கண்ணோட்டத்திற்கு நேர் முரணானது.

நான் குறிப்பிட்ட கட்டுரையின் ஆங்கில இணைய தள தொடர்புக்கு இங்கே உள்ள இணைப்பை அழுத்துங்கள்

http://www.firstpost.com/india/why-the-kudankulam-protesters-have-it-all-wrong-253669.html
arunan
Hi,
There is no safer atomic power plant in this world. Nuclear energy is a great discovery but when you read about nuclear plant and the phenomenon of nuclear fission (half life period- first order reactions), nuclear reactor everything is going to be an experiment and when the accident is going to happen they are going to learn from that.
I have personally heard from the man who was in the rescue team in chernobyl and now its the ghost city.
At the time of periyar there was not much concern about awarness about environment and liberalisation policies but for sure he would never appreiciate nuclear reactor not only in tamil nadu but any part of the world.
I appreciate periyar dravida kazhagam protest against atomic energy and its their responsibiltiy.
Atomic power plant is not only the science but also politics, we cant avoid the politics behind that.
After the liberalisation policies every w
durai ilamurugu
அறிவியல் சிந்தனையைவளர்த்த பெரியாரின் பெயரை வைத்துக் கொண்டு சில கட்சிகள் மதவாதிகள் நடத்தும் போராட்டங்க்களை அறிவியலுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிப்பது ஏன்?
Jey
தமிழனின இழி நிலை
Sudhakar
திரு ராம் அவர்களுக்கு.. உலகின் அணைத்து பிரச்சனைகளுக்கும் விஞ்ஞானிகளிடம் இரண்டு வகையான கருத்துக்கள் உண்டு. உதயகுமார் ஒரு விஞ்ஞானி அல்ல என்ற தங்களின் மேதாவிதனத்தை மெச்சுகிறேன், ஆனால் இது மக்களின் வாழ்வாதார பிரச்சனையகிய காரணத்தினால் அறிவியலாளர்கள் மட்டுமே போராடத் தேவையில்லை. மேலும், தாங்கள் மேற்கோள் கட்டிய விமர்சகர் திரு Kaipullai அவர்களும் பெரிய விஞ்ஞானி அல்லவே. இவரது கட்டுரையும் வேறு சில அறிவாளிகளின் அறிக்கைகளின் குறிப்புகளையே மேற்கோள் காட்டி உள்ளார். இது மட்டும் அன்றி உதயகுமார் அவர்களின் அணுக்கழிவுகள் பற்றிய ஐயத்திற்கு GODZILLA vs HULK என்று ஒரு அருமையான அறிவியல் விளக்கம் கொடுக்கிறார். ஆக, தங்கள் விளக்கங்களை ஏற்று கொள்கிறோம் என்று, உங்களின் மின்சார தேவைக்காக, அந்த மக்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட வேண்டும் அப்படிதானே? கேள்வி கேட்டால் முட்டாள்.. நாட்கள் சில கடந்தால் சோம்பேறி.. என்ன ஒரு ராஜதந்திரம்..

திரு Kaipullai அவர்களுக்கும் திரு Ram அவர்களுக்கும் உள்ள நக்கல் மற்றும் கருத்து சுதந்திரம் திரு உதயகுமார் அவர்களுக்கு நிச்சயம் இல்லை.. அவர் எப்படி போராடலாம்?? அதுவும் உண்ணாவிரதம் மேற்கொண்டு.. கலகக்காரன்.. வன்முறையாளன்.. சுட்டு கொள்ளுங்கள் அவரை.. விட்டுவிடாதீர்கள் பெண்களையும், குழந்தைகளையும்.. சாகட்டும் அவர்கள் பாலின்றி..
ram
அன்பு நண்பர் சுதாகருக்கு,

நான் மேதவியல்ல என்கிற உண்மையை கண்டுபிடித்ததற்காக நன்றி. ஆனால் நான் பெரியார் திக மீது வைத்த அறிவு நாணயமற்ற செயல் என்பதை உங்களின் பதிலில் மீண்டும் ஒருமுறை உறுதி செய்ததற்காக கூடுதல் நன்றி. காரணம் என் விமர்சனம் என்னெ? என்னுடைய பின்னூட்டத்தை தயவு செய்து ஒருமுறை மீண்டும் படியுங்கள். அணுமின்சாரம் தேவையா இல்லையா என்பது ஒரு கேள்வி. அதேசமயம் அதிமுக அரசின் நம்பவைத்து கழுத்தறுக்கும் செயல் மற்றும் காவல்துறையை பயன்படுத்தி மேற்கொள்ளும் அடக்குமுறை சரியா தவறா என்பது தனிக்கேள்வி. இதில் ந்ன் ஒருபோதும் அதிமுகவுக்கு ஆதரவாக மறந்தும் பேசவில்லை. பேச மாட்டேன். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். கீற்று இணையத்தில் நான் எழுதிய மற்ற பல பின்னூட்டங்களே இதற்கு சாட்சி. ஆனால் நீங்கள் என்னவோ நான் அதிமுக அரசின் அடக்குமுறைகளுக்கு ஆதரவாக பேசுவதைப்போல ஒரு பொய்யை உங்கள் பதிலில் பதிவு செய்கிறீர்கள். இது என்னுடைய மூலக்குற்றச்சாட்டை உறுதி செய்யவே பயன்படும், அதாவது அணு மின்சாரத்தை ஆதரிப்பவர்கள் அறிவுநாணாயமற்ற முறையில், அறிவியலுக்கு பொருந்தாத வாதங்களை வைக்கிறார்கள் என்பது எனது வாதம். உங்கள் பதில் அதற்கான சிறந்த உதாரணம் என்பதை மட்டும் சுட்டிக்காட்டவிரும்புகிறேன்.
மற்றபடி விஞ்ஞானிகள் மத்தியில் எந்தவித பிரச்சினைக்கும் இரண்டுவித கருத்துக்கள் உண்டு என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். அப்படி இரண்டுவித கருத்துக்கள் இருக்கும்போது பெரும்பான்மை கருத்து சரி என்று தான் இதுவரை காலமும் உலக விஞ்ஞானிகள் கருதி ஏற்று நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறார்கள். உதாரணமாக புவி வெப்பமடைவதற்கு கரியமில வாயுவை மனித சமூகம் அதிக அளவில் காற்று மண்டலத்தில் விடுகிறார்கள் என்பது இன்று வரை விஞ்ஞான உலகில் இறுதியாக ஒப்புக்கொள்ளப்படாத ஒரு உண்மையாகவே நிலவுகிறது. அமெரிக்காவை தளமாக கொண்ட கணிசமான விஞ்ஞானிகள் இந்த கருத்தை ஏற்கவில்லை. ஆனாலும் உலக அளவில் பெரும்பான்மை விஞ்ஞானிகள் இதை ஏற்ற காரணத்தால் தான் ஐநா மன்றம் இதற்கான செயல்திட்டத்தை வகுத்து காற்றில் கலக்கும் கார்பன் அளவை குறைப்பதற்கான கியோடோ திட்டத்தை முன்வைத்து பெரும்பான்மை நாடுகள் அதை ஏற்று நடைமுறைப்படுத்தி வருகின்றன. எனவே விஞ்ஞானம் என்பது பெரும்பான்மையாக ஏற்கத்தக்க தர்க்க நியாய்ங்களின் மீது கட்டமைக்கப்படும் ஒரு தத்துவம். அதனடிப்படையில் பார்த்தால் அணுமின்சாரம் ஆபத்தானதாக இருந்தாலும் அதை கட்டுப்படுத்த முடியும் என்பது தான் பெரும்பான்மை விஞ்ஞானிகளின் கருத்தாக இருந்து வருகிறது. அதை ஏற்றே நான் அதை ஆதரிக்கிறேனே தவிர அதன்மீது தீராக்காதல் கொண்டோ, அல்லது விஞ்ஞானம் என்பது கேள்விக்குட்படுத்த முடியாத கடவுள் தத்துவம் என்றோ அல்ல. இப்போதைக்கு இந்த விளக்கம் போதும் என்று நினைக்கிறேன். முடிந்தால் எனக்கு மாற்று கருத்தை எழுதுங்கள். நான் சொல்லாத ஒன்றை நான் சொன்னதாக சொல்லி பிரச்சினையை திசை திருப்பப்பார்க்காதீர்கள். மீண்டும் அப்படி செய்வது அ|றிவு நாணயமற்ற செயலாகவே இருக்கும் என்பதை மட்டும் சொல்லிக்கொண்டு விடைபெறுகிறேன்
ram
திருத்தம். எனது பின்னூட்டத்தில் "அதாவது அணு மின்சாரத்தை ஆதரிப்பவர்கள் அறிவுநாணாயமற்ற முறையில், அறிவியலுக்கு பொருந்தாத வாதங்களை வைக்கிறார்கள் என்பது எனது வாதம்" என்கிற வாசகத்தில் அணு மின்சாரத்தை ஆதரிப்பவர்கள் என்பதற்கு பதில் அணுமின்சாரத்தை எதிர்ப்பவர்கள் என்று இருந்திருக்கவேண்டும். தவறுக்கு வருந்துகிறேன். கீற்று இணையதள ஆசிரியர் இந்த எனது திருத்தத்தை வெளியிடும்படி வேண்டுக்கொள்கிறேன்
murugesan
அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தும் போராட்டக்காரர்கள் 100 பக்க புத்தகத்தில் 50 பக்கம் அணு உலைக்கு ஆதரவான கருத்துக்களையும் 50 பக்கம் ஆணு உலைக்கு எதிரான கருத்துக்களையயும் அந்தந்த ஆய்வாளர்களிடம் கருத்தை பதிவு செய்ய அனுமதித்து அந்த கருத்தை மக்களிடம் கொண்டு சென்று தன்னுடைய அறிவியல் பூர்வமான கருத்துதான் சரியானது என்று கூறி மக்களை திரட்டி போராட்டம் நடத்தினால் அது சரியானது அதற்கு மாறாக அணு உலைக்கு ஆதரவான கருத்துக்களை பொதுமக்களிடம் மறைத்து போராட்டம் நடத்துவது தவறானது. முல்லை பெறியாறு விவகாரத்தில் கேரளா அரசியல் வாதிகளின் நடவடிக்கையும் உதயகுமார்,விடுதலை ராசேந்திரன் போன்றவர்களின் நடவடிக்கையும் ஒன்றுதான்
Vinod Kumar
இந்தியா ஜனனாயகத்தை பின்பற்றும் நாடாக இருப்பதால், மக்களிடம் இவ்வளவு எதிர்ப்புகளை பெற்ற ஒரு திட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பதே சிறந்த தீர்வாகும்.

ஃபுகுஷிம ட்சுனமிக்கு பிறகு அணு உலைகள் என்றாலே மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவது இயற்கை. அவர்களது உணர்ச்சிகளை மதித்து திட்டத்தை கை விடுவதே மக்களாட்சிக்கு உகந்த்தது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.