செப்டம்பர் 152011 வியாழக்கிழமை காலையில் நான் இடிந்தகரை போவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது தோழர் பா.ஜெயபிரகாசம் அலைபேசியில் என்னிடம் சொன்னார் "காலை பத்து மணியளவில் வள்ளியூரில் ஒரு வண்டி உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும், வந்துவிடுங்கள்.'

நான் பேருந்தில் வந்துவிடுவேன், நீங்கள் காத்து நிற்க வேண்டாம் என்றேன்.

"ஒரு பருந்தும் கூடங்குளம் போகமுடியாது' என்னைக் கேலி செய்தார் அவர். "ராதாபுரத்தில் கடுமையான போலீஸ் காவல். பேருந்துகளை யெல்லாம் நிறுத்திவிட்டார்கள்.'

ஏன்

"இதுதானே நம் ஆட்சியாளர்களின் ஜனநாயக நெறிமுறை'

அவர் சொன்னது உண்மைதான். ராதாபுரத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தார்கள். பத்திரிகையாளர்கள் என்று சொன்ன பிறகுதான் எங்களைக் கூட அனுமதித்தார்கள். இடிந்த கரையைச் சுற்றிலும் கிட்டத்தட்ட 20 மைல் அளவில் எல்லாச்சாலைகளும் மூடப்பட்டுவிட்டன என்றார்கள். வேடிக்கைப்பார்த்துக்கொண்டு நின்றவர்கள். ஆனாலும் பத்துபேர் இருபது பேரென கூட்டங்கூட்டமாக மக்கள் ரோட்டில் ஆவேசமாய்ப் போய்க் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. ஓ போராட்டம் சூடுபிடித்துவிட்டது ஒருவித பதட்டத்தோடு நாங்கள் இடிந்தகரையை நெருங்கினோம்.

ஒரு சாதாரண ஊரைப்போல் தெரியவில்லை இடிந்தகரை. அது ஒரு சிறிய நகரம். கடற்கரைக்கே உரிய நெருக்கடியில் ஒன்றை ஒன்று இடித்துக் கொண்டிருந்தன வீடுகள். பெரும்பான்மையானவை வசதியான காங்கிரிட் வீடுகள். வழியிலே பார்த்த கூடங்குளம் நினைவுக்கு வந்தது. இவ்வளவு மக்கள் நெருக்கம் உள்ள ஊர்களை ஒட்டியா ஒரு அணுமின்நிலையம் நினைப்பதற்கே நடுக்கமாகத்தான் இருந்தது.

எங்கு பார்த்தாலும் நெளுநெளுவென மக்கள். ஊர் எல்லையிலேயே எங்கள் வண்டியை நிறுத்த வேண்டியதாகிவிட்டது. இறங்கி நடந்தோம். பா. ஜெயபிரகாசம், அபிமானி, கிருஷி, ராமகிருஷ்ணன், கோணங்கி, பிரபாகரன், சரவணக்குமார், பிரிட்டோ, லேனாகுமார், பேராசிரியர் அறிவரசன் இப்படிச் சென்னையிலிருந்து எங்களுடன் வந்திருந்தார்கள் பல எழுத்தாளர்கள். சிவப்புக் கம்பளத்தை ஆகாயத்தில் விரித்து அமைக்கப்பட்டிருந்த பந்தல். அதன் கீழே பச்சை, சிவப்பு, மஞ்சள். வெள்ளை வண்ணங்களில் ஆயிரக்கணக்கான நாற்காலிகள். முன் பக்கத்திலோ தரை விரிப்புகளின் மீது ஒருவரை ஒருவர் நெருக்கியபடி இன்னும் அடிமைப்பட்டு உட்கார்ந்திருந்தார்கள் பெண்கள். வலது பக்கம் திரும்பினால் ஊசிக்கோபுரங்களுடன் வானைத்தொட்டுக் கொண்டுநிற்கும் மாதாகோயில் முன்னே ஐந்தாவது நாளாக பட்டினிப் போரில் துவண்டுகிடந்த பெண்ணும் ஆணுமான நூற்றி இருபத்தேழு போராளிகள். அணுஉலைக்கு எதிரான போர்த்தளபதிகள். உதயகுமார், போஸ், தமிழ்ச்செல்வன், வின்ஸ் ஆன்றோ, ஹென்றிடிபேன், பீட்டர் முதலியோர் சுறுசுப்பாக ஆங்காங்கே அலைந்து, புதிதாக வருவோரை உட்காரவைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு விதமான உணர்ச்சி என் நரம்பு மண்டலம் முழுவதும் சுறுசுறுவெனப் பரவியது. ஆங்காங்கே உட்கார்ந்து கொண்டோம்.

இளைஞர் ஒருவர் மேடையில் ஆவேசமாக முழங்கிக் கொண்டிருந்தார்.

"புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களே எங்களைக் கூண்டோடு அழிப்பதற்காக நிறுவப்பட்டிருக்கும் கூடங்குளம் அணுஉலையை உடனேயே மூடுங்கள். எங்கள் ஓட்டை வாங்கித்தான் நீங்கள் முதலமைச்சரானீர்கள். அணுஉலையை மூடவில்லை என்றால் அடுத்தமுறை நீங்கள் ஓட்டுக்கேட்க இந்த பகுதிக்கே வர முடியாது.' இந்த பகுதிக்கென்ன? தமிழகத்தின் தென் பகுதிக்கே நீங்கள் வரமுடியாது... என ஆவேசமாக முழங்கிக் கொண்டிருந்தார்.

இது மத்தியரசு திட்டமல்லவா. இந்த இளைஞர் மாநில அரசை இப்படி வம்புக்கு இழுக்கிறாரே, மாநில அரசு நினைத்து இன்று இதை மூட முடியுமா? கூட்டாட்சி தத்துவம் என்றோ காலாவதி ஆகிவிட்டது போல் தோன்றுகிறதே. என்ற போக்கில் என் மனம் அலையத் தொடங்கியது.

சடாரென்று ஒருவர் மேடைக்குத் தாவி பேசிக்கொண்டிருந்த இளைஞரிடமிருந்து மைக்கைப் பிடுங்கினார். "பெரியோர்களே, தாய்மார்களே அதோ பாருங்கள், நம் பக்கத்து ஊர் ராதாபுரத்திலிருந்து மக்கள் நம் போராட்டத்திற்கு ஆதரவாக போர்க்குரல் எழுப்பியபடி வந்து கொண்டிருக்கிறார்கள்... கைத்தட்டி ஆரவாரித்து அவர்களை வரவேற்போம்...'

உற்சாகமான கைதட்டல். வடக்கிலிருந்து போர்ப்படைஒன்று பந்தலுக்குள்ளே வந்து கொண்டிருந்தது.

       மத்திய அரசே மாநில அரசே

       எங்கள் வாழ்வை அழிக்காதே

       மூடு மூடு

       கூடங்குளம் அணுமின் நிலையத்தை

       உடனே மூடு

இரண்டு கைகளையும் உயர்த்தி முழக்கங்கள் எழுப்பியபடி மனித பேரலையொன்று போராட்டப் பந்தலில் பாயத் தொடங்கியது. அவர்களின் முழக்கங்கள் நூறுமடங்கு ஆயிரமடங்காகப் பந்தலில் எதிரொலித்தது. எதிரொலி அடங்கி ஒலிபெருக்கி முன் அடுத்தவர் போக ஐந்துநிமிடம் காத்து நிற்க வேண்டியிருந்தது. மக்கள் உணர்ச்சிகள் முழக்கங்களாக அப்படி வெடித்துக் கிளம்பிக் கொண்டிருந்தன.

மேடையில் அடுத்தவர் முழங்கத்தொடங்கினார். "சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் பலநூறுகோடி ரூபாய் செலவாக்கப்பட்டுவிட்டது அணுமின்நிலையம் கிட்டத்தட்ட தயார் நிலைக்கு வளர்ந்துவிட்டது. இந்தநிலையில் அதை நிறுத்தச் சொன்னால் எப்படி முடியும் என்று. சகோதரிகளே, சகோதரர்களே ஹரிப்பூர் மின் அணுமின்நிலையத்தை மூடவைக்க மேற்குவங்க முதல்வர் மமாதா பானர்ஜிக்கு முடியுமானால் கூடங்குளம் அணுமின்நிலையத்தை நிறுத்தி வைக்க ஜெயலலிதாவால் ஏன் முடியாது? மாநில அரசை மீறிய ஓர் மத்திய அரசா? சென்னையிலிருப்பது தமிழ்நாட்டின் தலைமையகமா? அல்லது தமிழ்நாடு வெறும் பஞ்சாயத்து யூனியனா?'

ஆர்ப்பாட்டமான கையொலி எழுந்தது. அதையொட்டி மேடையில் தாவிய அறிவிப்பாளர் புதிய வரவேற்பினை முழங்கினார். "இதோ செட்டிக்குளம் மக்கள் நம் பட்டினி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை வரவேற்க.... அன்பானவர்களே....'

மீண்டும் முழக்கங்கள் கையொலிகள்

என்னை பேச மேடைக்கு அழைத்தார்கள். "இந்தியா ஒரு வெப்பநாடு. வலுவாக காற்று வீசும் நாடு. கடல் சூழ்ந்த நாடு. உலகத்தில் மிகச்சிறந்த அறிவாற்றல் உள்ள நாடு. இளைஞர்களைத்தூண்டி, அவர்களுக்குப் போதிய வசதிகள் செய்து கொடுத்தால் வெயிலாற்றலை மின்னாற்றலாக்க, நீர் ஆற்றலை மின்னாற்றலாக்க, காற்றாற்றலை மின்னாற்றலாக்க, கடலின் அலை ஆற்றலை மின்னாற்றலாக்க புதிய அதிநுட்பமான அதிக ஆற்றலுள்ள கருவிகளைக் கண்டுபிடிப்பார்கள். இதைவிட்டுவிட்டு ஆபத்தை விளைவிக்க்கூடிய மண்ணையும், கடலையும், வானத்தையும் அணுக்கதிர்களாய் நஞ்சாக்கக்கூடிய எதாவது ஆபத்து நிகழ்ந்தால் சுற்றுவட்டாரங்களில் பிறக்கும் பிள்ளைகளையெல்லாம் ஊனப்படுத்தக்கூடிய அணுமின்நிலையம் இங்கு தேவையா? அதிலும் மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள இந்த தென்முனையில் நிறுவுவது நியாயமானாதா...'

நாள் பேசிக் கொண்டிருந்த போதே அறிவிப்பாளர் மேடைக்குத் தாவி என் மைக்கைப் பிடுங்கி புதிதாக வரும் படைவரிசையை வரவேற்க முழக்கம் எழுப்பினார்.

சிலிர்த்து போனேன். கழுத்தில் சிலுவை கட்டிக் கொண்டவர்கள், ஓம் கட்டிக் கொண்டவர்கள், லிங்கம் போட்டுக் கொண்டவர்கள், ஒன்றும் போட்டுக் கொள்ளாதவர்கள், நெற்றியில் பட்டைப் போட்டுக் கொண்டவர்கள், நாமம் போட்டுக் கொண்டவர்கள், பொட்டிட்டுக் கொண்டவர்கள், ஒன்றும் வைத்துக் கொள்ளாதவர்கள்... சாதி வேறுபாடு, மதவேறுபாடு, மொழிவேறுபாடு எந்த வேறுபாடும் பார்க்காமல் திரள் திரளாக வந்து கொண்டிருந்தார்கள். கேரளத்திலிருந்து கூட பலர் வந்திருந்தார்கள். பந்தல் கொள்ளாத கூட்டம் வெயிலைப் பொருட்படுத்தாமல் அவர்கள் கிடைத்த இடங்களில் உட்கார்ந்தார்கள். கூத்தங்குழி, கூடுதாழை, கூட்டப்புளி, உவரி, வைராவிக்கிணறு, எஸ்.எஸ்.புரம், இடிந்தகரை, ஆவுடையார்புரம், காமநேரி, பாக்கநேரி, இருக்கன்துறை, பெருமணல், ஸ்ரீரங்கநாராயணபுரம், நக்கநேரி, கன்னங்குளம், லெவஞ்சிபுரம், நாவலடி, திசையன்விளை, திருச்செந்தூர், கந்தகுளம், பெரியதாழை, தூத்துக்குடி, கூட்டப்பனை, விஜயாபதி, பண்ணையூர், கூடங்குளம் இன்னும் என்னன்னவோ ஊர்களிலிருந்து வந்துக்கொண்டிருந்தார்கள்....

இது என்ன? தென்னகமே படை திரண்டு வருகிறதா? இது தான் மக்கள் எழுச்சியா? நூறு நூற்றம்பது பேரோடு தொடங்கியப் போராட்டம் என்றார்கள். இன்று லட்சத்துக்கும் அதிகமானவர்களாக எப்படி வளர்ந்து நிற்கிறார்கள். சொந்த வேலைகளைப் புறக்கணித்து, குழந்தை குட்டிகளுடன் மக்கள் திரள்கிறார்களே... இவர்களைப் பகைத்துக் கொண்டு மத்தியிலும், மாநிலத்திலும், ஆட்சியைத் தொடரமுடியுமா? பசி மறந்து போய்விட்டது. தாகம் மறந்து போய்விட்டது. அப்படியே உட்கார்ந்திருந்தோம்.

மேடையில் உயரமான ஒருவர் முழங்கிக் கொண்டிருந்தார்.....

காவல்துறை உயர் அதிகாரிகளே, அன்று கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு அடிக்கல்நாட்டிய நேரத்தில் எதிர்த்துப் போராட வந்த எங்களை அடித்துத் துரத்தினீர்களே.... இன்று இப்போது இங்கு வந்து எங்களை அடித்துப்பாருங்கள். கைது செய்து பாருங்கள்.... மக்கள் பேரெழுச்சியின் முன் உங்கள் அதிகாரம் வெறும் தூசு என்பதைக் காணுவதற்காவது வாருங்க....

       கையொலி கையொலி கையொலி

       வேண்டாம் வேண்டாம்

       கூடங்குளம் அணுமின் நிலையம்

       வேண்டவே வேண்டாம்.

மேடையின் முழக்கங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தன.

உயிர் முக்கியம், வாழ்வு முக்கியம், சந்ததிகள் முக்கியம், பாதுகாப்பு முக்கியம், இவற்றை அடிப்படைகளாக வைத்துக்கொண்டு அரசுகளே வளர்ச்சித்திட்டங்களைப் போடுங்கள். மனித அழிவில் வளர்ச்சி தேடாதீர்கள். எளியவர்களை அழித்து வலியவர்களுக்கு உதாவாதீர்கள். ஏழை பணக்காரன், படித்தவன் படிக்காதவன், கூலிக்காரன் முதலாளி எல்லா மனிதர்களும் சமமுக்கியத்துவமுடையவர்கள் என்பது தான் ஜனநாயக அறத்தின் அடிதளம். அதை உணர்த்துவதற்காகத்தான் இங்கே திரண்டிருக்கிறது இத்தனைப் பெருங்கூட்டம். மாநில அரசு மக்கள் உணர்வைப் புரிந்து, மதித்து, அதை அழுத்தமான மொழியில் மத்திய அரசுக்கு வெளிபடுத்தி தன் ஜனநாயகக்கடமையைச் செய்ய வேண்டும். மத்திய அரசு மக்கள் உணர்வைப்புரிந்து கொண்டு, மக்கள் சார்பாகச் செயல்பட வேண்டும். மக்கள் எதிர்பார்க்கிறார்கள் அதிகாரத்திலிருப்பவர்கள் செவிசாய்ப்பார்களா?