காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சங் பரிவாரக் கும்பலை “கோட்சே பரம்பரை” என்ற வார்த்தைகளால் வர்ணிக்கிறார். கோட்சே பரம்பரை என்பது திராவிடர் இயக்கத்திற்கு பழகிப்போன ஒரு சொல் தான், காந்தியாரை சுட்டுக் கொல்லப்பட்ட அந்த காலத்தில் திராவிடர் இயக்க மேடைகளிலும் திராவிடர் இயக்க நூல்களிலும் அந்தக் கும்பலை சுட்டிக்காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட சொல் தான் கோட்சே பரம்பரை என்பதாகும்.

காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டது மாலை 5:12 க்கு, ஆனால் அகில இந்திய வானொலி அவரது மறைவு செய்தியை ஒலிபரப்பியது 6 மணிக்குத்தான். அதற்கு முக்கிய காரணம், ‘காந்தியை ஒரு முஸ்லிம் சுட்டுக் கொன்றுவிட்டார்’ என்ற வதந்தியை இந்த கோட்சே பரம்பரை அப்போதே பரப்பியது. மவுண்ட் பேட்டன், காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை அறிந்து பிர்லா மாளிகை விரைந்த உடன் கூட்டத்திலிருந்த ஒரு சங்கி, ‘காந்தியை ஒரு முஸ்லிம் சுட்டுக் கொன்று விட்டான்’ என்று சொன்னவுடன்; ‘முட்டாளே வாயை மூடு’ என்று மவுண்ட் பேட்டன் அதற்கு பதிலளித்திருக்கிறார். ‘காந்தியை சுட்டுக் கொன்றவன் ஒரு இந்து என்று உனக்குத் தெரியாதா?’ என்று அவர் எதிர் கேள்வி கேட்டிருக்கிறார். இதற்கிடையே காந்தியை ஒரு முஸ்லிம் சுட்டுக் கொன்று விட்டான் என்ற வதந்தியை நாடு முழுவதும் பரப்பி ஆங்காங்கே இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தையும் தூண்டி விட்டார்கள்.

அகில இந்திய வானொலி நிலைய இயக்குநருக்கும், ‘முஸ்லிம் ஒருவன் காந்தியை சுட்டுக் கொன்று விட்டான்’ என்ற தவறான தகவலை பரப்பினார்கள், உண்மை செய்தியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான் அகில இந்திய வானொலி தேசத் தந்தையின் மறைவை 5 மணி 12க்கு மறைந்தாலும் 6 மணிக்கு ஒலிபரப்பியது. அந்த செய்தியைக் கூட காந்தியை சுட்டுக் கொன்றவன் ஒரு இந்து என்று மதத்தை அடையாளப்படுத்தி அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அப்போது குரு கோல்வால்கர் சென்னையில் இருந்தார். காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை அறிந்ததும் அவர் உடனடியாக பம்பாய்க்கு விரைந்தார். நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கு சென்றார், அங்கே சங்கிகள் அனைவரும் கூடியிருந்தார்கள். அப்போது வெளியே காங்கிரஸ்க்காரர்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு பார்ப்பன எதிர்ப்பு முழக்கங்களுடன் அந்த மாளிகைக்கு தீ வைத்து உள்ளே இருக்கிற அனைவரையும் கொளுத்தி விடுவதற்குத் திரண்டிருந்தனர். அப்போது பம்பாய் மாகாண உள்துறை அமைச்சராக இருந்த டிபி.மிஸ்ராவிற்கு கோல்வால்கர் அவசரமாக தொலைபேசி செய்து எங்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று சொன்ன போது உங்களுக்குப் பத்திரமான இடம் சிறைச்சாலை தான் என்று சொல்லி அவர்களை சிறையில் அடைத்துக் காப்பாற்றினார் டி.பி. மிஸ்ரா.

மராட்டிய காங்கிரசில் பார்ப்பனர் எவரும் பொறுப்பில் இருக்கக் கூடாது என்று அம்மாநில காங்கிரஸ் முடிவெடுத்து அனைவரையும் பொறுப்பில் இருந்து நீக்கியது.

சென்னை வானொலி அதுவரை இல்லாத அளவுக்கு பெரியாரையும் அண்ணாவையும் அழைத்துப் பேச வைத்தது, பெரியார் அனைவரும் அமைதியைக் காப்பாற்றுங்கள், தமிழ்நாட்டில் எந்தக் கலவரமும் வெடிக்கக்கூடாது என்று அமைதிப்படுத்தி தமிழ்நாட்டில் மகாராட்டிராவைப் போல பார்ப்பனர் களுக்கு எதிரான ஒரு கலவரம் நிகழ்ந்துவிடாமல் தடுத்த பெருமை பெரியாருக்கு. இதை பார்ப்பனர்கள் நன்றி கெட்டத்தனமாக மறைத்து விட்டார்கள். அப்போது பெரியார் ஒரு கருத்தை சொன்னார், “இந்தியாவிற்கு காந்தி தேசம் என்று பெயர் சூட்டுங்கள்” என்று பெரியார் வேண்டுகோள் விடுத்தார். அந்தளவுக்கு கோட்சே பரம்பரை காந்தி யின் கொலையைச் கூட தானே சுட்டுக்கொன்று விட்டு அதை இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பயன்படுத்த விரும்பியது. அப்போது திராவிட இயக்க தளபதிகளில் தீவிர கொள்கைவாதியான ஏ.வி.பி. ஆசைத்தம்பி அவர்கள் ‘காந்தியின் ஆத்மா சாந்தி யடைய' என்ற ஒரு நூலை எழுதினார். அந்த நூலுக்கு அப்போது தடைவிதிக்கப்பட்டது. அந்த நூலின் வரலாற்றுப் பின்னணி குறித்து கலைஞர் தொலைக்காட்சியில் இப்போது ஆசிரியராக இருக்கும் திருமாவேலன் ஒரு சிறப்பான நூல் ஒன்றையும் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருக் கிறார். அது மீண்டும் பிரசுரிக்கப்படுகிறப்பட வேண்டிய ஒரு நூலாகும். கோட்சே பரம்பரை இந்த வரலாற்று தகவல்களை எல்லாம் இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It