கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

dvk against caaகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் டிசம்பர் 23ஆம் தேதி நடந்த மாபெரும் பேரணியில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். தி.மு.க. கூட்டணி கட்சிகளைத் தவிர, இஸ்லாமியர் அமைப்புகள், பல்வேறு இயக்கங்கள் பங்கேற்றன. திராவிடர் விடுதலைக் கழகம் பேரணியில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் பங்கேற்றது. அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி.குமரன், தலைமைக் குழு உறுப்பினர்கள் இரா. உமாபதி, அய்யனார், அன்பு தனசேகர் மற்றும் மயிலை சுகுமார், வடசென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஏசுகுமார், ராஜீ, தென் சென்னை மாவட்டக் கழகத் தலைவர் வேழவேந்தன், எம்.ஜி.ஆர். நகர் கரு. அண்ணாமலை உள்ளிட்ட சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் ஏராளமாகப் பங்கேற்றனர்.

ஈரோட்டிலிருந்து 20க்கும் மேற்பட்ட தோழர்களும் குடியாத்தம் பகுதி, காஞ்சிபுரம் பகுதி கழகத்தினரும் பேரணியில் பங்கேற்றனர்.

கழகக் கொடிகளுடன் ஒலி பெருக்கி வழியாக கழகத் தோழர்கள் முழக்கங்களை எழுப்பி வந்தனர். எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் தொடங்கிய பேரணி, இராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே நிறைவடைந்தது. ஒன்றரை மணி நேரம் பேரணி நடந்தது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தி.க. தலைவர் கி. வீரமணி, ப.சிதம்பரம் (காங்கிரஸ்) உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் பேரணியின் முன் வரிசையில் நடந்து வந்தனர். தமிழ்நாடு பா.ஜ.க.வின் மதவெறியை ஒரு போதும் தமிழ்நாடு ஏற்காது என்பதை பேரணி உணர்த்தியது.

அயோத்தி தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

அயோத்திப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் டிசம்பர் 6ஆம் தேதி மாலை 4 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு தீர்ப்பில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக் காட்டி உரையாற்றினார். மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி ஜி.இராமகிருட்டிணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிந்தனைச் செல்வன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலரும் பேசினர். அதைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்று பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசினார்.