பழங்குடியினர் - மலைவாழ் மக்களை அந்த மக்கள் வாழக்கூடிய பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கடந்த மாதம் உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
வேறெங்கும் வீடு கட்டப்படுவதற்கான இடமோ அல்லது நிலமோ இல்லாத நிலையில் பன்னெடுங் காலமாக பழங்குடியினர் - மலைவாழ் மக்கள் வசித்துவந்த பகுதியில் இருந்து வெளியேற்ற வற்புறுத்தல் செய்தால் அந்த மக்கள் சொந்த மண்ணிலே அகதிகளாக இருக்க வேண்டிய ஒரு அவல நிலை ஏற்படும்.எனவே பழங்குடி- மலைவாழ் மக்களை அவர்கள் வசிக்கின்ற பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையையும், பழங்குடியினர்- மலைவாழ் மக்களுக்கு சாதி இருப்பிட சான்றிதழ்களை அரசு விரைவாக வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மாவட்டம் முழுவதும் 200-சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
பழங்குடியினர்- மலைவாழ் மக்கள் வாசிக்கக் கூடிய சில பகுதிகளில் தோழர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். சுவரொட்டிகள் ஒட்டியதை நேரில் பார்த்த அந்த மக்கள் திராவிடர் விடுதலைக் கழக தோழர்களை பார்த்து எங்கிருந்தோ வந்து யாரென்றே தெரியாத எங்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்றப் பெரியார் இயக்கத் தோழர்களே நன்றி என்று கூறி வாழ்த்திவிட்டு மேலும் தோழர்களிடம் அவர்களின் பல்வேறு சிக்கல்கள் குறித்து விளக்கி கூறினார்கள்.
குறிப்பாக பழங்குடியினர்- மலைவாழ் மக்களுக்கு சாதி இருப்பிட சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதோடு சிலருக்கு சாதி இருப்பிட சான்றிதழ் வழங்காமல் ஏமாற்றப்பட்டு திறமையான மாணவர்கள் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு பெறமுடியாமல் தங்களது உரிமைகளை இழந்துள்ள சூழல் குறித்து வருத்தத்தோடு பேசினார்கள்.
பழங்குடியினர் - மலைவாழ் மக்கள் வசிக்கின்ற பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை திரும்பப் பெறுவதோடு அவர்களின் கல்வி மேற்படிப்பு தொடர மற்றும் வேலை வாய்ப்பு பெறுவதற்கு சாதி இருப்பிட சான்றிதழ்களை அரசு விரைவாக வழங்க வேண்டுமென்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக வலியுறுத்துகின்றோம்.