கீற்றில் தேட...

அமேசான் கிண்டில் (Amazon Kindle) என்பது மின்னூல்கள் (E-books) வாசிக்க உதவும் கருவி (Device). கிண்டில் என்பது ஒரு படிப்பான் (Reader). அமேசான் தளத்தில் இக்கருவியை வாங்கலாம். 4000 ரூபாயிலிருந்து  16000+ எனப் பல ரகங்களில் கிடைக்கிறது. எப்படியும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கிண்டில் கருவிகளுக்கு ஆஃபர் போடுகிறார்கள். கவனித்துக் கொண்டே இருந்தால் வரும்போது வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

அல்லது நீங்கள் உங்கள் மொபைல் அல்லது கணினியில் கிண்டில் செயலியை (app) இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொண்டும் அதன்மூலம் நூல்களை வாங்கிப் படிக்கலாம். கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் போன்ற இடங்களில் கிண்டில் ஆப் இலவசமாகக் கிடைக்கும். உங்கள் மொபைலில் கிண்டில் செயலி (kindle app) டவுன்லோடு செய்து எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம். வாசிக்கும்போது இணைய இணைப்புகூட அவசியமில்லை

ஆனால் கிண்டில் கருவிக்கென சில பிரத்யேக மேன்மைகள் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள் - உதாரணம்: கண் கூசாது, கவனம் சிதறாது, நீடித்த பேட்டரி, நீர் நுழையாது, பக்கம் திருப்ப பட்டன்கள் என்று ஏராள வசதிகள் உண்டு.

புத்தகம் வழக்கமான காகித வடிவில் இருக்காது. புத்தகத்தை வாங்க உங்களுக்கு அமேசானில் ஒரு அக்கவுண்ட் இருந்தால் போதும். பிரவுசர் வழியாகவோ, உங்கள் கிண்டில் கருவி மூலமோ, அல்லது கிண்டில் app மூலமாகவோ குறிப்பிட்ட புத்தகத்தை வாங்கலாம். க்ரெடிட் / டெபிட் கார்ட் வழியாகவோ, இண்டர்நெட் பேங்கிங் மூலமோ பணம் செலுத்தலாம். பணம் அமேசான் நிறுவனத்திற்கு  க்ரெடிட் ஆனதும் புத்தகம் உங்கள் கணக்கில் வந்து உட்காரும். உங்களிடம் உள்ள எந்தக் கருவியிலும் / எத்தனைக் கருவியிலும் அப்புத்தகத்தை நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

இந்த புத்தகம் இடத்தை அடைக்காது. அமேசானில் வாங்கும் நூல்கள் அனைத்தும் க்ளவுடில் சேகரமாகும். நீங்கள் விரும்பும்போது டவுன்லோட் செய்து படித்துவிட்டு, கருவியில் டெலீட் செய்துவிடலாம். மீண்டும் தேவைப்பட்டால் க்ளவுடில் இருந்து இறக்கிக்கொள்ளலாம். எத்தனைக் கருவி மாற்றினாலும் புத்தகம் அப்படியே இருக்கும். வாசிப்பை அடுத்தத் தளத்துக்கு நகர்த்த இதுவே சரியான வழி. வெள்ளத்தால், வெந்தணலால், கரையானால் புத்தகம் சேதமடையாது என்பது இதிலுள்ள மிகப் பெரிய நன்மை. ஒருவர் பதிவிறக்கம் செய்து இன்னொருத்தருக்கு தர முடியாது. நம்மிடம் உள்ள கருவியில் / மொபைலில் / கம்ப்யூட்டரில் மட்டுமே படிக்க முடியும்.

அடுத்ததாக கிண்டில் அன்லிமிடெட் என்பது ஒரு லெண்டிங் லைப்ரரி மாடல் போல. மாதத்துக்கு / வருடத்துக்கு என்று மொத்தமாகப் பணம் கட்டிவிட்டால் போதும். எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம். தனித்தனியே பணம் தரவேண்டாம். ஒரு சமயத்தில் 10 புத்தகங்களை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இன்னொன்று வேண்டுமென்றால் பத்தில் ஒன்றைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அடுத்ததை எடுக்க வேண்டும்.

அச்சு நூல்களைவிட கிண்டிலில் படிக்கும் மின்னூல்களுக்கு விலை குறைவு. அச்சுப் புத்தகங்கள் அப்படி அப்படியேதான் கிண்டிலுக்கு ஏற்றப்படுகின்றன என்பதால் புத்தகத்தைப் புரட்டி படிப்பது போல்வே இருக்கும்

கிண்டிலில் ஏராளமான புத்தகங்கள் இலவச மாகவும் உள்ளன. சில புத்தகங்களுக்கு தினம் திடீர் திடீரென 0 விலை அறிவிப்பும் நடக்கும்.

கிண்டிலால் ஏராள நன்மைகள் உண்டு. பணத்தைச் சேமிக்கிறது; குறைந்த இடத்தை அடைக்கிறது. எடுத்துச் செல்வது எளிது; என்ன வாசிக்க வேண்டும் என்பதை முன்பே தீர்மானிக்க வேண்டியதில்லை என்பதால் பயணத்தின் போது வசதி. பெரும் எண்ணிக்கையில் புத்தகங்கள் கிடைக்கின்றன, அதோடு அவற்றைக் கடன் பெறவும் முடியும்.

திவிக வெளியீடுகள்

இந்த விஞ்ஞான வளர்ச்சியான கிண்டிலில் திராவிடர் விடுதலைக் கழகம் பல்வேறு தலைப்பு களில் வெளியிட்ட புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளது. இதன் மூலம் அச்சில் இல்லாத புத்தகங்களும், வெளிநாட்டு வாசகர்களுக்கும் கழக செயல்பாடுகளும், புத்தகங்களும், தந்தை பெரியாரின் கருத்துக்கள் மிகப் பரவலாக வேகமாக சென்று சேர்ந்துவிட ஏதுவாகிறது. புத்தகத்தை தேட புத்தக தலைப்பு மட்டுமல்லாமல் DVK Periyar என்றோ, கொளத்தூர் மணி என்றோ, விடுதலை இராசேந்திரன் என்றோ தேடலாம்

அந்த வரிசையில் கழகம் வெளியிட்ட அத்தனை புத்தகங்களும் தற்போது விற்பனைக்கு உள்ளது. குறிப்பாக குடிஅரசு இதழ் தொகுதி அனைத்தும் கிடைக்கும். கழகத்தின் வருடாந்திர பரப்புரை பயண வெளியீடுகளோடு, மேலும் பல புத்தகங்கள் உடனுக்குடன் கிடைக்கும் வகையில் இணைய தள அணியால் செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

நிமிர்வோம் மாத இதழ்களும். வருடாந்திர முழக்கம் சிறப்பு கட்டுரைகளும் விரைவில் வெளிவர உள்ளது.

கழகத்தின் முகநூல் (www.facebook.com/dvk12) மற்றும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது இலவசமாக கழக வெளியீடுகள் அமேசான் கிண்டிலில் தரவிறக்க அறிவிப்புகள் வெளிவரும். அப்போது புத்தகங்களை விலையில்லாமலும் பதிவிறக்கி கொள்ளலாம்