ஆயிரமாயிரமாய் இளைஞர்கள் அணி வகுத்த கருஞ்சட்டைப் பேரணி; குலுங்கியது திருச்சி மாநகர்

டிசம்பர் 23, 2018 அன்று திருச்சி மாநகர் ஒரு வரலாற்றை எழுதியுள்ளது. சுமார் 200 அமைப்புகள் ஓரணியில் திரண்டு - பெரியாரே - தமிழர்களின் - தமிழ்நாட்டின் முதன்மை அடையாளம்; காவிக்கு மறுப்பு - பெரியாரின் கருப்பு என்ற முழக்கத்தோடு பல்லாயிரக்கணக்கில் திருச்சியில் திரண்டார்கள். திரும்புமிடமெல்லாம் கருப்புச் சட்டை. அதிலும் நூற்றுக்கு 90 சதவீதம் பேர் பெரியார் இறப்புக்குப் பின் 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் கழித்துப் பிறந்த பெரியாரையேப் பார்த்திடாத இளைஞர்கள்; அவர்களிலும் பலர் பெண்கள்.

trichy karunchattai meeting 255தமிழ்நாடு முழுதுமிருந்தும் பல நூறு தனி வாகனங்கள் திருச்சியை நோக்கி வந்தன. பகல் 2 மணியளவில் பேரணி புறப்படும் கே.டி. திரையரங்கு அருகே கருஞ்சட்டைத் தோழர்கள் திரளத் தொடங்கினார்கள். 3.30 மணியளவில் பறை இசை முழங்க பேரணியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடங்கி வைத்தார். ஒவ்வொரு அமைப்பும் தங்கள் கொடிகளின் கீழ் கருஞ்சட்டை யோடு மதவெறிக்கு தமிழகத்தில் இடமில்லை; காவிக்கு மறுப்பு பெரியாரின் கருப்பு - தமிழர் விடுதலையை வென்றெடுப்போம்; தமிழ்நாட்டு வளங்களை சுரண்டாதே; ஜாதியற்ற சமூகம் அமைப்போம்; ஆணவப் படுகொலையைத் தடுக்க தனி சட்டமியற்று; எங்கள் நாடு தமிழ்நாடு; இங்கு ஏதடா இந்து நாடு? சங்பரிவார் கும்பலே; வெளியேறு; வருகுது பார் வருகுது பார்; இது ஓட்டுக் கேட்காத பட்டாளம்; பெரியாரின் பட்டாளம் என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளக்க அணி வகுத்து வந்தனர்.

மாலை 5.30 மணியளவில் திருச்சி உழவர் சந்தை மைதான அரங்கில் பேரணி வந்தடைந்தது. மேடைக்கு எதிரே பல்லாயிரக்கணக்கில் கருஞ் சட்டை இளைஞர்கள் திரண்டு உணர்ச்சி முழக்கங்களை எழுப்பிய காட்சியை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. மக்கள் அதிகார அமைப்பைச் சார்ந்த கோவன் குழுவினரின் புரட்சிகர கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது. மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களில் ஒருவரும், மாநாட்டு ஏற்பாடுகளை பொறுப்பேற்று செயல்பட்டவருமான விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் வரவேற்புரை யாற்றினார். “தன்னைப் போன்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்களுக்கு சுயமரியாதை என்ற அடையாளத்தை வழங்கியவர் பெரியார். பெரியாரின் கைத்தடியே காவியை விரட்டும்” என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

மாநாட்டுத் தலைவரும் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினரும் இப்படி ஒரு பேரணி மாநாட்டை நடத்த வேண்டும் என்று கருத்துருவாக்கம் தந்தவர்களில் ஒருவரான தமிழக மக்கள் முன்னணி நிறுவனர் பொழிலன் தனது தலைமை உரையில் “பார்ப்பனியம்-இந்தியம் இரண்டையுமே அழிப்பதில்தான் தமிழர் விடுதலை அடங்கி யிருக்கிறது” என்று கூறினார் பெரியார். பா.ஜ.க. ஆட்சி மாற்றத்தில் மட்டுமே இந்துத்துவம் ஒழிந்து விடாது; பார்ப்பனியம் - பிறகு வேறு வடிவில் தன்னுடைய மேலாதிக்கமான இந்துத்துவத்தை நிலைநாட்டிக் கொள்ளும்; அதற்குப் பன்னாட்டு நிறுவனங்கள் துணை நிற்கும் - தமிழ்நாடு தமிழருக்கே என்ற பெரியார் முழக்கத்தை முன்னோக்கி நகர்த்த வேண்டும் அதுவே தீர்வு” என்றார்.

மாநாடு ஏற்பாட்டுக் குழுவில் முக்கியப் பங்காற்றியவரும் கருஞ்சட்டை ஒருங்கிணைப்பை உருவாக்குவதில் முனைப்புக் காட்டியவருமான மே 17 இயக்கத்தைச் சார்ந்த திருமுருகன் காந்தி, “தமிழர் விடுதலைக்கான சமகால அரசியலுக்கு பெரியாரியல் தான் தீர்வுகளை முன் வைக்கிறது; பெரியார் சுட்டிக்காட்டிய பார்ப்பனிய சட்டகமான ‘மனுநீதி தான்’ இன்று அரசியலாகி ‘சூத்திரர்’களின் வாழ்வுரிமை - வளங்களை - ‘எட்டுவழிச் சாலை’ - ‘மீத்தேன்’ - ‘ஹைடிரோ கார்பன்’ என்ற திட்டங் களின் வழியாகப் பறித்துக் கொண்டிருக்கிறது என்று சுட்டிக் காட்டினார். பெரியார் கொள்கைப் பரப்புரைக்கு தடை போடுவதும், பார்ப்பன ராஜாக்கள் தடித்த வார்த்தைகளால் அதிகாரத் திமிரில் பெரியாரிஸ்டுகளைப் பேசுவதும், பெரியார் சிலைகளை அவமதித்தால் எதிர்ப்பே இருக்காது என்று திமிரோடு செயல்பட்டவர்களுக்கும் இங்கே திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான கருஞ் சட்டைக் கூட்டம் அதன் சக்தியை வலிமையை உணர்த்தியிருக்கிறது. இனி மிரட்டல் உருட்டல் களால் பெரியாரியலை தமிழ்நாட்டிலிருந்து அகற்றி விடலாம் என்போருக்கு இந்தப் பேரணி ஒரு எச்சரிக்கை” என்றார்.

தொடக்க உரை நிகழ்த்திய தமிழ்ப் புலிகள் கட்சியைச் சார்ந்த நாகை திருவள்ளுவன், “இது பெரியார் வழிகாட்டிய பார்ப்பனரல்லாதார் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நடக்கும் மாநாடு. ஜாதி ஒழிப்பை, தமிழகச் சுரண்டலை, மதவெறியை எதிர்க்கும் பார்ப்பனரல்லாதார் கருப்புச் சட்டை அடையாளத்துடன் ஒன்றிணைந்து பார்ப்பனிய இந்துத்துவ சக்திகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் நிறுவனரும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு உறுப்பினருமான அரங்க. குணசேகரன் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

திராவிட இயக்கத்தமிழர் பேரவை நிறுவனர் சுப. வீரபாண்டியன் பேசுகையில், “பெரியார் இயக்கங்கள் இங்கே ஒரே மேடையில் இணைந்திருக்கின்றன. அவைகள் எப்போதும் பிளவுபட்டு நிற்கவில்லை. கிளைகளாகப் பிரிந்து நிற்கின்றன. வேர் - பெரியார்தான்” என்றார். தூத்துக்குடியில் கருஞ்சட்டைப் படை மாநாட்டை வைத்தியநாத அய்யர்கள் தீயிட்டுக் கொளுத்திய வரலாற்றைச் சுட்டிக் காட்டிய சுப. வீரபாண்டியன், இனி அது நடக்காது என்றார். ஜாதி வெறி ஒழிக்கப்பட்டு ஜாதியற்ற தமிழர் சமுதாயத்தை உருவாக்கவும் இனி ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு தமிழகத்தில் இடமில்லாத நிலையை உருவாக்குவதற்கும் நாம் முன்னுரிமை தந்து செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி நிறுவனரும் பெரியாரிய அமைப்பின் மூத்த தலைவருமான வே. ஆனைமுத்து, 90 அகவையைக் கடந்த நிலையிலும் மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார். புஷ்யமித்திர சுங்கன் என்ற பார்ப்பன மன்னன், மவுரிய ஆட்சியை ஒழித்து மீண்டும் பார்ப்பனிய அதிகாரத்தை நிலைநாட்டிய வரலாற்றைப் போல் இப்போது டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனியம் பார்ப்பன அதிகாரத்தை நிலைநாட்டி வருவதை சுட்டிக்காட்டினார். இப்போது டெல்லியில் புஷ்யமித்திரன் வழியில் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனியம் பார்ப்பன அதிகாரத்தை நிலைநாட்டி வருவதை சுட்டிக்காட்டியதோடு, திருச்சி மாநகரில் பெரியார் இயக்கம் நடத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.

தாளாண்மை உழவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் பொறியாளருமான கோ. திருநாவுக்கரசு பேசுகையில், விவசாயம் ‘சூத்திரர்கள்’ தொழிலாக இருப்பதால் பார்ப்பனிய அதிகார ஆட்சி விவசாயத்தை நசுக்குகிறது என்றும், எம்.எஸ். சுவாமிநாதன் போன்ற பார்ப்பனர்கள் - விஞ்ஞானிகள் என்ற போர்வையில் விவசாயம் குறித்த அடிப்படை அறிவே இல்லாமல், விவசாயிகள் வாழ்வை மேலும் நலிவாக்கும் திட்டங்களை முன்மொழிவதையும் சுட்டிக்காட்டிப் பேசினார். தியாகி இம்மானுவேல் பேரவைத் தலைவர் பூ. சந்திரபோசு பேசுகையில், வரலாற்றில் வேத பார்ப்பனியம் புத்தர் காலத்திலிருந்து தன்னை எதிர்த்தவர்களை ‘இரத்த பலி’க் கேட்டு ஒழித்திருப்பதை சுட்டிக் காட்டினார்.

தொடர்ந்து, பெரியார் அறிவித்த அரசியல் சட்டத்தின் ஜாதி பாதுகாப்புப் பிரிவுகளை 1957 நவம்பர் 26இல் எரித்து, 18 மாத சிறைத் தண்டனை பெற்ற லால்குடி முத்து செழியன் மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார்.

88 அகவையை எட்டியிருக்கும் லால்குடி முத்து. செழியன், “ஜாதி ஒழிப்புக்காக சிறை சென்ற எங்களைப் போன்றவர்கள், அந்த லட்சியம் தீவிரமாக முன்னெடுக்காமல் புதைக்கப்பட்டு விடுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது இதோ ஆயிரமாயிரம் ஜாதி ஒழிப்பு இளைஞர்கள், அந்த இலட்சியத்துக்காகத் தயாராகி விட்டோம் என்பதை பேரணியும் மாநாடும் உணர்த்தி விட்டது” என்று கூறியபோது, கூட்டம் உணர்ச்சி வயப்பட்டது.

ஜாதி ஒழிப்பு வீரரின் கருத்தைக் கூட்டம் ஏற்கிறது என்பதன் அடையாளமாக கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.

தொடர்ந்து மாநாட்டு மேடையில் மூன்று ஜாதி மறுப்பு இணையரின் திருமணங்களை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த கருஞ்சட்டைக் குடும்பங்களுக்கிடையே பலத்த கரவொலி - வாழ்த்து முழக்கங்களுக்கிடையே நடத்தி வைத்தார். தொடர்ந்து பேராசிரியர் சுரசுவதி, தமிழ்ச் சொல்லாய்வு அறிஞர் பா. அருளி, முனைவர் நெடுஞ்செழியன், இயக்குனர் கோபி நயினார், பொருளியல் அறிஞர் ஜெயரஞ்சன், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரி. பரந்தாமன், தமிழர் விடியல் கட்சித் தலைவர் மா. டைசன், ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த பொறியாளர் சுந்தர் ராஜன், டிசம்பர் 3 அமைப்பைச் சார்ந்த தீபக், புதிய குரல் அமைப்பைச் சார்ந்த ஓவியா, எழுத்தாளர் பாமரன், இயக்குனர் கரு. பழனியப்பன், காஞ்சி அமுதன், தமிழ்த் தேச மக்கள்முன்னணி மீ.த. பாண்டியன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் கே.எம். செரீப், பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவம், திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, மக்கள் விடுதலைக் கட்சித் தலைவர் முருகவேல் ராசன், மக்கள் அரசு கட்சித் தலைவர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், கீற்று ரமேஷ், சின்னத் திரை தமிழ்ப் பண்பாட்டு அமைப்பைச் சார்ந்த கவிதா பாதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் பார்த்திபன் ஆகியோர் சுருக்கமாக உரையாற்றினர். சரியாக 10 மணிக்கு நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Pin It