தொண்டுபல செய்தபழம்

தந்தையவர் பெரியாரின்

உண்மையானத் தொண்டரெங்கள் ஆனைமுத்து!

உண்டுஉண்டு கொழுத்தவர்தம்

தொந்தியுடன் குலைநடுங்க

வந்துஇங்கு உதித்தவர்தான் ஆனைமுத்து!

துண்டுபல தோளிலிட்டு

மண்டைக்கனம் கொண்டவர்போல்

தண்டமான தலைவரல்ல ஆனைமுத்து!

மண்டல் கமிஷன்இந்த

மண்ணில்வந்து சேர்வதற்கு

தொண்டுகளைச் செய்தவர்தான் ஆனைமுத்து!

பெரியாரின் சிந்தனையை

சரியாக உள்வாங்கி

நெறியாகத் தந்தவர்தான் ஆனைமுத்து!

புரியாமல் பழிபேசும்

நரியாரின் முகங்களிலே

கரியாகப் பூசிவைத்தார் ஆனைமுத்து!

சிந்தனை யாளன்எனும்

சீர்மிகுந்த மாதஇதழ்

தந்ததுயார்? அவர்தான் ஆனைமுத்து!

விஞ்சுதற்கு முடியாத

பொங்கல்மலர் ஆண்டுதோறும்

கொண்டுவந்து கொடுப்பாரெம் ஆனைமுத்து!

ஐம்பத்து ஏழுதனில்

தந்தைபெரி யாருடனே

சட்டமதை எரித்தவர் ஆனைமுத்து!

அச்சமின்றிப் பதினெட்டுத்

திங்களுக்குச் சிறையினில்

குந்திவிட்டு வந்தவர்தான் ஆனைமுத்து!

பிற்படுத்தப் பட்டவர்க்கு

எத்தகைய உரிமையும்

இல்லையெனக் கண்டறிந்தார் ஆனைமுத்து!

உத்திரத்துப் பிரதேசம்

பீகார்எங் குமேதிரிந்து

மக்களைத்தான் தூண்டிவிட்டார் ஆனைமுத்து!

மெச்சுகின்ற பிரதமர்

செய்யுகின்ற தப்பெனினும்

எட்டிநின்று பார்க்கமாட்டார் ஆனைமுத்து!

தட்டிக்கேட்டு உரிமையை

கல்வியிலும் வேலையிலும்

பெற்றெடுத்துக் கொடுத்தாரே ஆனைமுத்து!

கலகத்துப் பெரியாரும்

உலகத்து மார்க்சியமும்

விலகத்தான் விடுவாரா ஆனைமுத்து!

துலங்கவே சொல்லியந்த

இரண்டையும் ஒன்றுஎன

விளங்கிட வைத்தவர்தான் ஆனைமுத்து!

நல்லியெனும் எலும்பாக

ஒல்லியான ஆளெனினும்

சொல்லியதைச் செய்திடுவார் ஆனைமுத்து!

எள்ளியிங்கு நகையாடும்

கொள்கைவிற்றக் கூட்டந்தமை

கில்லியாகப் போட்டடிப்பார் ஆனைமுத்து!

ஆளுகின்ற கட்சிகளின்

காலைநக்கி வாழுகின்ற

வேலையெல்லாம் தெரியாத ஆனைமுத்து!

நாளையிந்த நாட்டுக்கென்ன

தேவையென்று தானறிந்து

வேலைகளைச் செய்பவர்தான் ஆனைமுத்து!

தேனாறாய்க் கல்வியிலே

ஓடுகின்ற நால்வருணச்

சாத்திரங்கள் வெறுத்தார் ஆனைமுத்து!

ஈ.வெ.ரா நாகம்மை

ஆராய்ச்சிக் கட்டளையை

கல்விக்கென கண்டவர்தான் ஆனைமுத்து!

இதழ்வேலைப் பார்த்துக்கொண்டு

இருங்கய்யா இங்குஎன்றால்

இளைஞனுங்க நான்என்பார் ஆனைமுத்து!

பெரியாரின் வரலாற்றை

எழுதித்தான் முடிக்காமல்

ஊரூராய்ச் சுற்றுகிறார் ஆனைமுத்து!

தொண்ணூறு ஆனபின்னும்

துள்ளுகிறார் கன்றுபோல

என்னான்னு சொல்லுறது! ஆனைமுத்து!

பன்னூறு ஆண்டுஇந்த

மண்ணிலவர் வாழவேண்டும்.

பச்சைக் குழந்தையெங்கள் ஆனைமுத்து!

Pin It