இராவணன் உருவ எரிப்புக்கு பூரி சங்கராச்சாரி கண்டனம்

தசரா விழாவின்போது இராவணன் கொடும்பாவிகளை எரிக்கும் நடைமுறை, இந்து கலாச்சாரத்திற்கு உட்பட்டது அல்ல என்று பூரி சங்கராச்சாரியாரான அதோக் ஷஜானந்த் தேவ் தீர்த்த மஹராஜ் கூறியுள்ளார். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜோடா பதக் அருகே இராவணன் கொடும்பாவி எரிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் மீது இரயில் மோதி சுமார் 60 பேர் உயிரிழந்தனர். இதன் பின்னணியில், பூரி சங்கராச்சாரியார் அதோக் ஷஜானந்த் தேவ் தீர்த்த மஹராஜ், மதுரா நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “தசரா விழாவின்போது, கொடும்பாவி எரிக்கும் பழக்கம் ஒரு பழமைவாதமாகும்; இந்து கலாச்சார அடிப்படைக்கே எதிரானது; இந்து புராணத்தின்படி, இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள் ஒரே ஒருமுறை மட்டுமே செய்யப்பட வேண்டும்; அவ்வகையில், இராவணனின் இறுதிச் சடங்குகளை இராமபிரான் முன்னிலையில் விபீஷணன் செய்து முடித்து விட்டார்; எனவே, தசரா விழாக்களின்போது இதுபோல் கொடும்பாவிகளை கொளுத்துவதால் பெரிய அளவில் சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுகிறது; எனவே, இந்த பழக்கம் ஒழிக்கப்பட வேண்டும்” என்று சங்கராச்சாரியார் கூறியுள்ளார். மேலும், “இக்கொடும்பாவி எரிக்கும்நடைமுறையை ஒழித்துக்கட்ட வேண்டும்” என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

இராமன் கடவுளா? காட்சிப் பொருளா?

உ.பி.யில் இராமனுக்கு கோயில் கட்டி ‘இராமனை’ கடவுளாக்க சங் பரிவாரங்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில் இராமனுக்கு 211 அடி சிலை வைத்து காட்சிப் பொருளாக்க உ.பி. பா.ஜ.க. முதல்வர் ஆதித்யநாத் முயற்சிக்கிறார் என்று வாரணாசியில் பார்ப்பனர் துவாரக பீட சங்கராச்சாரி தலைமையில் கூடிய சாமியார்கள் உ.பி. அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினார்கள். இராமன் கடவுளா காட்சிப் பொருளா என்று சங் பரிவாரங்கள் ‘குடுமிபிடி’ சண்டைப் போட்டுக் கொண்டிருந்தாலும் ‘இராமன்’ பா.ஜ.க.வின் தேர்தல் சின்னமாக்கப்படுகிறான் என்பது மட்டும் உண்மை.

அனுமானுக்கு ‘கம்யூனிட்டி’ சான்றிதழ்

இராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்குப் போன உ.பி. முதல்வர் ஆதித்யநாத் - ஹனுமான் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்று பேசியிருக்கிறார். இதற்கு இராஜஸ்தான் ‘சர்வ பிராமண மகாசபை’ என்ற பார்ப்பன அமைப்பின் தலைவர் சுரேஷ் மிஸ்ரா என்பவர் ஹனுமான் ஒரு ‘பிராமணன்’ அவனை எப்படி ‘தலித்’ என்று கூறலாம் என்று எதிர்ப்பு தெரிவித்து, 3 நாட்களுக்குள் ஆதித்யநாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். ‘அனுமானுக்கு’ உ.பி. அரசும், ‘பிராமண’ மகாசபையும் ‘ஜாதிச் சான்றிதழ்’களை தயாரித்து வைத்திருக்கின்றன போலும். தேர்தல் பிரச்சாரத்தில் மத அடிப்படையில் வாக்கு கேட்கக் கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. ‘அனுமானை’யும் ‘இராமனை’யும் கூறி உ.பி. முதல்வரே ‘இந்து’க்கள் வாக்குகளை வாங்கி விடலாம் என்று பேசி வருவதற்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ, நமக்குத் தெரியாது.

இதற்கிடையே உ.பி. மாநிலத்தில் ‘பீம்சேனை’ என்ற தலித் அமைப்பின் தலைவர் சந்திரசேகர், உ.பி. முதல்வருக்கு ஒரு சவால் விடுத்திருக்கிறார். அனுமான் தலித் என்றால், அந்தக் கோயில்களில் ஒரு தலித்தை அர்ச்சகராக்குவீர்களா? அனுமான் கோயில்களை எல்லாம் ‘தலித்’ மக்களிடம் ஒப்படைப்பீர்களா? என்று கேட்டுள்ளார்; நியாயமான கேள்வி. சஞ்சீவி மலையையே தூக்கிக் கொண்டு போனவன் என்றும், இலங்கையை தீயிட்டுப் பொசுக்கியவன் என்றும் அனுமான் இராமாயணத்தில் வர்ணிக்கப்படுகிறான். மரம் வெட்டியாகவும், வேறு ஒரு நாட்டுக்குப் போய் தீ வைத்து எரித்த சர்வதேச பயங்கரவாதியாகவும் சித்தரிக்கப்படும் அனுமானுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கி ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக சேர்த்துக் கொண்டிருக்கிறார் உ.பி. முதல்வர். இதுவும்கூட சரிதான்!

ஆர்.எஸ்.எஸ்.சில் சேருவதற்கு இதைவிட வேறு தகுதி என்ன வேண்டும்?

சாக்கடைக் குழியில் இறங்கும் அவலம்: தடுத்து நிறுத்தினர் கழகத் தோழர்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் திருவான்மியூர் பகுதியைச் சார்ந்த தோழர்கள் தேன்ராஜ், தமிழ்தாசன் 13.11.2018  அன்று சென்னை அடையாறு பகுதியில் வடிகால் வாய் குழிக்குள் இறங்கி எந்த ஒரு பாதுகாப்பு கருவிகள் இல்லாமல் வேலை பார்த்து கொண்டிருந்த 2 தொழிலாளர்களை தடுதது, குழியிலிருந்து வெளியேற்றினர்.

உடனே எந்த பாதுகாப்பு கருவிகளும் தராமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுத்திய பொறுப்பாளரையும், சென்னை மாநகராட்சி அடையாறு உதவி பொறியாளரையும் நேரில் சந்தித்து எச்சரித்தனர்.

அவர்களும் இதுபோன்ற செயல்கள் தவிர்க்கப்படும் என்றும்... உடனடியாக பாதுகாப்புக் கருவிகளை தொழிலாளர்களுக்கு வழங்கி, குழிக்குள் இறங்கி வேலையில் ஈடுபட்ட செயலுக்கு வருத்தத்தையும் தெரிவித்து கொண்டனர்.

Pin It