kuthoosi gurusamy 268ஏய்! மூதேவிகளா! இதென்ன ஒரே காட்டுக் கூச்சல்! பகல் முழுதும் வேலை செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினால், ஒரே பஜனை மடம் மாதிரி “ஜேய் சீதாராம்! ஜேய் சீதாராம்!” என்று கத்துகிறீர்களே?”

“டேய் கிட்டு! இதென்னடா, பாடம் படிக்கிறதை விட்டுட்டு இப்படிக் கத்தீண்டிருக்கே? உன் நெற்றியையும் நாமத்தையும் பாரு!”

“அடீ! சரசு! இதென்னடி இப்படி ஒரே கூச்சல்! குடும்பத்தோடு புறப்பட்டு எங்கேயாவது பிச்சையெடுக்கப் போறேளா? வாயை மூடு சனியனே!”

அடுப்பங்கரைக்குள் செல்கிறார், அண்ணாச்சாமி அய்யங்கார். அங்கேயும் தம் தர்மபத்தினி துவையலை அரைத்துக்கொண்டே ஜேய் சீதாராம்! ஜேய் சீதாராம்! என்று உரக்கக் கத்திக்கொண்டே யிருந்தாள்!

“அடீ! அப்புஜம்! இதென்னடி இது? நியும் குழந்தைகளைப் போலவே கத்தீண்டிருக்கே! இருந்தாப்பிலேயிருந்த என்ன வந்துடுத்து உங்களுக்கு? ஏன் இப்படி ஒரே கலாட்டா பண்றேள்?"

அண்ணாச்சாமி அய்யங்கார் முயற்சி பலிப்பதாயில்லை. வரவரக் கூச்சல் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.

இந்தச் சமயத்தில் பக்கத்து விட்டு பங்கஜம், “ஜேய் சீதாராம்!” என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தாள்! அண்ணாசாமி அய்யங்காருக்குக் கோபம் தாங்கவில்லை. தலைவலியே வந்துவிட்டது.

“உங்க ஆத்திலும் இதே இழவுதானா?” என்று கேட்டார், பரமபக்தரான அய்யங்கார், வேதனை பொறுக்கமாட்டாமல்!

“ஜேய் சீதாராம்!” என்று பதில் கூறினாள், பங்கஜம்.

“ஓஹோ! னோக்கும் இதே சீக்குத்தானா?”

- என்றார் அய்யங்கார்! அய்யங்காருக்குத் தலை சுற்றிற்று. என்ன செய்வதென்றே விளங்கவில்லை. கக்கூசுக்குச் சென்றார். கதவு சாத்தியிருந்தது. கதவைத்தட்டி “உள்ளே யார்?” என்று கேட்டார்.

“ஜேய் சீதாராம்! என்று பதில் வந்தது. அதே குரல் அதே மந்திரத்தை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்ததும் அவர் காதில் கேட்டது.

“ஏண்டா மூதேவி, நீ தானா உள்ளே? 10-மணிக்குப் பரீட்சை! 7 மணிக்கு கக்கூசுக்குள்ளே உட்கார்ந்திண்டு ஜேய்! சீதாராம்!” என்று கத்தீண்டிருக்கையே! நீ ஒரு தம்பிடிக்கு உருப்படுவியாடா?”, என்றார்.

“ஜேய், சீதாராம்!” என்றே மீண்டும் பதில் வந்தது. விஷயமே விளங்கவில்லை, அய்யங்கார் சுவாமிகளுக்கு. காதுகளைப் பொத்திக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தார்.

எதிர் விட்டு ஏகாம்பர அய்யர் வந்தார். அய்யங்கர் வீட்டில் ஒரே கூச்சலாயிருப்பதையும், அய்யங்கார் தலை வேதனையுடன் அமர்ந்திருப்பதையும் கண்டார். நகைத்தார். கை ஜாடை காட்டி அவரைத் தெருப் பக்கம் அழைத்தார்.

“பேப்பரில் படிக்கிறமாதிரி உங்க ஆத்திலேதான் நடக்கிறது. சார்! எங்காத்திலே எதையும் சட்டை பண்றதேயில்லை”, என்றார்.

“அப்படியா? பேப்பர்லே என்ன வந்திருக்கு?”

“ஓஹோ! அதுதான் நீர் இப்படி விஸ்வாமித்திர ஸ்வரூபம் எடுத்திருக்கிறீரோ? பேப்பர்லே வந்திருக்கே நன்னா நீர் படிக்கலையோ? ரிஷிகேஷ் சிவானந்த சரஸ்வதி வந்திருக்கிறாரோன்னோ? அவர் மயிலாப்பூரிலே ஸ்திரீகளுக்குச் சில போதனைகளைக் கூறியிருக்கிறார்.

ஸ்திரீகள் தினசரி வேலைகளைக் கவனித்துக் கொண்டே “ஜேய் சீதாராம்” போன்ற நாம சங்கதங்களை ஸ்மரணை செய்து கொண்டேயிருக்க வேண்டுமென்று சொல்லியிக்கிறார்; அப்படிச் செய்தால் குழந்தைகளும் அவர்களைப் பார்த்துப் பழகுவார்களாம். உங்க ஆத்துக்காரியும் பேப்பரிலே படிச்சிருப்பாள்.

மயிலாப்பூர் கூட்டத்துக்குப் போய்ட்டு வந்தவாளெல்லாம் இரண்டு நாளா இப்படித்தான் ஸ்மரணை செய்து கொண்டிருக்காளாம்!

இதனால் ஊர் வம்பு ஒழிஞ்சு போயிடும் என்று, நம் ராமஸ்வாமி அய்யங்கார் கூட சந்தோஷப் பட்டிண்டிருக்கிறார்! நீர் மட்டும் ஏன் வேதனைப்படுகிறீர்?”

“அப்படியா சங்கதி? சிவானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் போதனையா? அடுப்பங்கரையைவிட்டு வரட்டும் அவள்! ஏதாவது என்னிடம் கேட்கட்டும்! நானும் “ஜேய் சீதாராம்! என்றே பதில் சொல்றேன்.”

அரிசிப் பஞ்சம் ஏன்? - என்று கேட்டால் ஜேய் ஹிந்த்! அக்கிரம நடத்தை ஏன் என்று கேட்டால் ஜேய் சீதாராம்!

இதென்னடா கூத்து, ஏ! சீதையைத் தவிக்க விட்ட சீதாராமா?

- குத்தூசி குருசாமி (3-10-50)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It