‘உரிமை மீட்பு கூட்டியக்கம்’ நடத்திய ‘மனித உரிமை நாளில்’  விடுதலை இராசேந்திரன் பேச்சு

டிசம்பர் 10, அய்.நா. மனித உரிமை நாளையொட்டி சென்னை மற்றும் காஞ்சி மாவட்ட மக்கள் சிவில் உரிமைக் கழக முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட 40 அமைப்புகளைக் கொண்ட உரிமை மீட்பு கூட்டியக்கம் சென்னை மயிலாப்பூர், மாங்கொல்லையில் உரிமை மீட்பு பொதுக் கூட்டம் ஒன்றை சிறப்பாக நடத்தியது. மாற்றுக் கலை ஊடகம், காஞ்சி மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சிகளோடு நடந்த இந்த நிகழ்வுக்கு சென்னை தொழிலாளர் சங்கத்தைச் சார்ந்த எஸ்.நடராசன் தலைமை தாங்கினார். பி.யு.சி.எல். அமைப்பைச் சார்ந்த டி.எஸ்.எஸ்.மணி, பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்முயற்சி எடுத்து ஒருங்கிணைத்தார். வெள்ளையன் (வணிகர் சங்கப் பேரவை), ஹாஜா கனி (த.முமு.க) அமீர் (திரைப்பட இயக்குநர்), ஓவியா (புதிய குரல்), வழக்கறிஞர் அருள்மொழி (திராவிடர் கழகம்), எஸ்.எம்.பாக்கர் (இந்திய தவ்ஹீத்), பேராசிரியர் சரசுவதி (பி.யு.சி.எல்.), வினோத் (ஆதித் தமிழர் விடுலை இயக்கம்), கிரேஸ் பானு (திருநங்கை அமைப்பு) உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். அவரது உரையிலிருந்து:

“அய்.நா. அறிவித்துள்ள உலக மனித உரிமை நாள் இன்று. இந்திய அரசு அய்.நா.வில் ஏற்றுக் கொண்டு நாட்டில் நடைமுறைப்படுத்தாத பல உடன்பாடுகள் உண்டு. சர்வதேச அகதிகளுக்கான உடன்பாட்டில் கையெழுத்திட்ட இந்தியா, அதற்கு, நாட்டில் ஏற்பு வழங்கவில்லை. அதேபோன்று காவல் நிலையத்திலும் இராணுவத்தின் விசாரணையிலும் சித்திரவதைகள் செய்வதைத் தடை செய்யும் உடன்பாட்டில் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து சில செய்திகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

human rights day 600காவல் நிலையம், இராணுவ விசாரணையில் ‘சித்திர வதைகள்’ தடைசெய்யப்படவேண்டும் என்று அய்.நா. சர்வதேச உடன்பாடு ஒன்றை உருவாக்கியிருக்கிறது. சித்திரவதைக்கு எதிரான உடன்பாடு 1987ஆம் ஆண்டு அய்.நா.வில் உருவாக்கப்பட்டது. 162 நாடுகள் இந்த உடன்பாட்டில் கையொப்பமிட்டு தங்கள் நாடுகளில் சித்திரவதைகளை நிறுத்தி அய்.நா.வின் உடன்பாட்டை சட்டபூர்வமாகிவிட்டன. 83 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் தங்கள் நாடுகளில் அதற்கு சட்டபூர்வமான ஏற்பு வழங்க மறுக்கின்றன. அய்.நா.வின் உடன்பாடுகளை ஒரு நாடு கையெழுத்திட்டு ஏற்றுக் கொண்டு விட்டால் அதன் தொடர் நடவடிக்கையாக அந்த உடன்பாட்டை நாடாளுமன்றத்தின் வழியாக ஏற்பளிக்க வேண்டும். அப்போதுதான் கையொழுத்திட்ட உடன்பாடு செயல் வடிவம் பெறும்.

1987ஆம் ஆண்டு அய்.நா.வில் கொண்டு வரப்பட்ட சித்திரவதைக்கு எதிரான உடன்பாட்டில் முதலில் கையெழுத்திடவே இந்தியா தயங்கியது. 10 ஆண்டுகள் கழித்து, சர்வதேச அழுத்தத்தின் காரணமாகவும் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று உலகத்தின் முன் நாடகமாடவும் 1997ஆம் ஆண்டில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால், இது வரை நாடாளுமன்றத்தில் இதற்கு ஏற்பு வழங்கப்படவில்லை. சித்திரவதைகளை தடை செய்ய மறுக்கும் நாடுகளான அங்கோலா, பகாமாஸ், புருனே, ஜாம்பியா, ஹைத்தி, சூடான் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.

சர்வதேச ஒப்பந்த அடிப்படையில் சித்திரவதைகள் தடை செய்யப்படாத காரணத்தால் இந்திய கிரிமினல் சட்டங்களை சர்வசாதாரணமாக புறந்தள்ளி, காவல் நிலையங்களும் இராணுவ முகாம்களும் சித்திரவதைகளை நடத்திக் கொண்டிருக்கின்றன.

2008ஆம் ஆண்டு சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தங்களை செயல்படுத்தாத நாடுகளை ஆய்வு செய்து அந்த நாடுகளுக்கு அய்.நா. அழுத்தங்களை தந்தது. அப்போது இந்தியா தந்த பதில், “நடைமுறைப்படுத்து வதற்கான வழிமுறைகளை உருவாக்கிக் கொண்டிருக் கிறோம்” என்பதாகும். ஆனால், இந்த முயற்சியில் ஒரு துரும்பைக்கூட இந்திய அரசு கிள்ளிப் போடவில்லை; அய்.நா.வுக்கு பொய்யான வாக்குறுதிகளையே தந்தது.

2011ஆம் ஆண்டு திடீரென ‘சித்திரவதைகளை தடுப்பதில் இந்தியாவுக்கு ஆர்வம் பீறிட்டுக் கிளம்பியது. அய்.நா.வில் இந்தியா தானாகவே முன் வந்து அய்.நாவின் சித்திரவதைக்கான ஒப்பந்தத்துக்கு ஏற்பு வழங்க தயாராக இருக்கிறோம்” என்று இந்தியாவின் பிரதிநிதிகள் நீட்டி முழங்கினார்கள்.

இந்த திடீர் ‘மனித உரிமை’ கரிசனத் துக்கான காரணம் பிறகுதான் புரிந்தது. அய்.நா.வின் மனித உரிமைக் குழுவில் இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கமே இதன் பின்னணி. எதிர்பார்த்தபடியே மனித உரிமைக் குழுவிலும் இந்தியா இடம் பிடித்தது. அவ்வளவுதான், அப்படியே பிரச்சினையை கிடப்பில் போட்டு விட்டார்கள். மீண்டும் 2012ஆம் ஆண்டில்  இந்தியா அய்.நா. மனித உரிமைக் குழுவில் இடம் பிடித்த அடுத்த ஆண்டிலேயே இந்தப் பிரச்சினையை அய்.நா. மறுஆய்வுக்கு எடுத்தது.

அய்.நா.வுக்கு இந்தியாவில் நிகழ்த்தப்படும் சித்திரவதைகள் குறித்த ஏராளமான புகார்கள் குறித்த ஆதாரங்கள் கிடைத்தன. குறிப்பாக இந்தியாவின் ‘தேசிய மனித உரிமை ஆணையம்’ தனது அறிக்கையில் குறிப்பிட்ட ஏராளமான சித்திரவதைகளை அய்.நா.வில் இடம் பெற்ற நாடுகள் எடுத்துக்காட்டி உடனடியாக சித்திரவதைகளை தடை செய்து சட்டம் இயற்றவேண்டும் என்று இந்தியாவை நெருக்கின. அப்போதும் இந்தியாவின் பிரதிநிதி “இதற்கான நடைமுறைகளை தொடங்கியிருக்கிறோம்” என்று தான் சமாதானம் கூறினார்.

இந்த நிலையில் காவல் நிலையம் சித்திரவதைகள் குறித்து பல வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும் குவிந்தன. ‘வெட்கப்படும் அளவுக்கு சித்திரவதைகள் தொடர்கின்றன’ என்று உச்சநீதிமன்றமே கடுமையான கருத்துகளை பதிவு செய்தன. ‘நாகரிக சமூகத்துக்கான அடையாளங்களை இழந்து எதேச்சாதிகாரம் சர்வாதிகார காலத்தில் நடந்த காட்டுமிராண்டித்தனங்களை நோக்கி நாம் போய்க் கொண்டிருப்பது வெட்கக் கேடானது’ என்று மத்திய பிரதேசத்திலிருந்து வந்த ஒரு சித்திரவதை வழக்கில் (முன்ஷிசிங் கவுதம் - எதிர் ம.பி. அரசு 2004) உச்சநீதி மன்றம் கூறியது. அய்.நா.வில் இந்தத் தீர்ப்புகளையெல்லாம் எடுத்துக்காட்டி இந்தியாவுக்கு நெருக்குதல் தந்தும் ‘பார்ப்பன இந்திய தேசிய அரசு’ அசைந்து கொடுக்கத் தயாராக இல்லை.

பார்ப்பனியம் கட்டமைத்த சமூக அமைப்பே, ‘சித்திர வதை’யை நியாயப்படுத்தி சமூகத்தின் விதிகளாக்கி வைத்திருப்பதை சுட்டிக்காட்ட வேண்டும். பார்ப்பன நீதி நூலான ‘மனு சாஸ்திரம்’, சூத்திரன் வேதத்தைக் கேட்டால் காதில் ஈயத்தை ஊற்ற வேண்டும். வேதத்தைப் படித்தால் நாக்கை வெட்ட வேண்டும் என்று கூறுகிறது. ‘வர்ணாஸ்ரம தர்மத்தை’க் காப்பாற்றுவதற்காக கொலை செய்வது பாவம் இல்லை என்று கிருஷ்ணன் அறிவுறுத்திய ‘கீதை’ தான் இந்த நாட்டில் தேசிய நூலாக போற்றப்படுகிறது. மனுவின் இந்த ‘சித்திரவதை’ சட்டங்கள்தான் பிரிட்டிஷ் காலத்தில் நீதிமன்றங்களிலும் சட்டங்களாக ஏற்கப்பட்டு தீர்ப்பளிக்கப் பட்டன. மெக்காலே பொது கிரிமினல் சட்டத்தைக் கொண்டு வரும் வரை இந்தியாவில் இதுதான் நிலை. இலண்டனில் உச்சநீதிமன்றம்போல் செயல்பட்ட ‘பிரிவிகவுன்சிலில்’கூட பிரிட்டிஷ் நீதிபதிகள் ‘மனு சாஸ்திர’ அடிப்படையில்தான் தீர்ப்புகளை வழங்கினார்கள்.

மனுசாஸ்திரம் அகற்றப்பட்டு பொது கிரிமினல் சட்டம் வந்த பிறகும் சட்டத்தை அமுல்படுத்தும் அரசும், அதன் காவல்துறையும், ‘மனு’வின் மனநிலையோடு ‘ஒரு குலத்துக்கு ஒரு நீதி’யைத்தான் வழங்கி வருகிறது. இந்திய சிறைகளில் இப்போது கைதிகளாக அடைக்கப்பட்டிருப்பவர்கள் யார்? மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு அதிகமாக கைதிகளாக இருப்பவர்கள் இஸ்லாமியர், தலித், ஆதிவாசிகள் தான் என்று இந்தியாவின் தலைசிறந்த ஆய்வு ஏடான ‘எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. எந்தப் பார்ப்பனரும், எந்த ‘மேல் ஜாதி வர்க்க’ குற்றவாளியும் சித்திரவதைக்குள்ளாவதில்லை. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தி லிருந்து வந்தவர்கள் என்றால் ஜாதியைப் பார்த்து அவர்களை மனிதர்களாகவே மதிக்காத அளவுக்கு விசாரணைகளில் நடத்தப்படுகிறார்கள். ‘மனு சாஸ்திரம்’ இந்திய கிரிமினல் சட்ட அமைப்பில் தனது செல்வாக்கை இன்னும் செலுத்திக் கொண்டே தான் இருக்கிறது. அதனால்தான் இந்திய பார்ப்பன அரசும் ‘சித்திவதைகள்’ தொடர வேண்டும் என்றே விரும்புகிறது.

அய்.நா.வின் சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா, 20 ஆண்டுகளுக்குப் பிறகும், அய்.நா. ஒப்பந்தத்துக்கு சட்டப்படியான ஏற்பை வழங்க மறுத்து சில போலி சமாதானங்களைக் கூறுகிறது. “சித்திரவதைக்கு எதிராக முதலில் நாடாளுமன்றத்தில் நாங்கள் சட்டம் கொண்டுவர விரும்புகிறோம். அதற்குப் பிறகு அய்.நா. ஒப்பந்தத்தை இந்தியா ஏற்று நாடாளு மன்றத்தின் வழியாக ஒப்புதல் வழங்குவோம்” என்ற இந்தியாவின்  சமாதானத்தை அய்.நா. மனித உரிமை ஆணையம் ஏற்கவில்லை. அய்.நா. மனித உரிமை ஆணையர், “இது மிகத் தவறான சிந்தனை. அய்.நா.வின் ஒப்பந்தத்தைப் பற்றிய புரிதல் இல்லாததையே காட்டுகிறது’ என்று கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து இருக்கிறார்.

“அய்.நா. உடன்பாட்டை நாடாளுமன்றத்தின் வழியாக ஏற்பதுதான் முதல்படி. இதன் வழியாக சித்திரவதைக்கான எதிர்ப்பை ஒரு நாடு அங்கீகரிக்கிறது. அதற்குப் பிறகுதான் சர்வதேச தரத்தோடு அய்.நா. உருவாக்கிய தீர்மானத்தின் அடிப்படையில் அதே தரத்தில் நாடாளுமன்றத்தில் ஒரு அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். சித்திரவதைக்கு எதிரான சர்வதேச மனித உரிமை கோரிக்கைகளோடு ஒரு நாடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்கான செயல் முறைதான். அய்.நா.வின் உடன்பாட்டுக்கு நாடாளுமன்றத் தின் ஒப்புதலைப் பெறுவதாகும் என்று அய்.நா.வின் மனித உரிமை ஆணையாளர் தெளிவான விளக்கங்களை அளித்தார்.

அதற்குப் பிறகு ஒரு நாடகம் நடந்தது. 2010ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் சித்திரவதைத் தடுப்பு மசோதா ஒன்று முன்மொழியப்பட்டது. அய்.நா.வின் உடன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு முன்பு இதைக் கொண்டு வந்தார்கள். உண்மையில் இந்த மசோதாவில் நல்ல அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. ‘சித்திரவதை’ என்றால் என்ன என்பதற்கான வரம்புகள், இந்த மசோதாவில்  மேலும் விரிவாக்கப்பட்டிருந்தது. காவலில் விசாரணை கைதி களுக்கு உணவு மறுப்பது; உறங்கவிடாமல் தடுப்பது; காதைப் பிளக்கும் சத்தங்களை உருவாக்கி அச்சுறுத்து வது; காதை கூச வைப்பது; மின்சார ‘ஷாக்’ தருவது; சிகரெட் நெருப்பினால் உடலைச் சுடுவது உள்ளிட்ட பல்வேறு சித்திரவதை வடிவங்களை இந்த மசோதா அங்கீகரித்தது.

நாடாளுமன்ற ஆய்வுக் குழு இந்த மசோதாவை அங்கீகரித்து, சித்திரவதைக்குள்ளானவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் பிரிவுகளையும் அதில் இணைத்தது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையிலும் மசோதாவை நாடாளுமன்றத்தில் வைத்து சட்டமாக்க இந்திய பார்ப்பன ஆட்சி முன்வர வில்லை. அப்படியே மசோதாவை காலாவதியாக விட்டு விட்டார்கள்.

அய்.நா.வின் தீர்மானத்துக்கு இந்தியா ஏற்பு வழங்கக் கோரி 2016ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் ஒருவர் பொதுநல வழக்கைத் தொடர்ந்தார். மோடி ஆட்சி இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்தது. சட்ட ஆணையம் இது குறித்து பரிசீலனை செய்து வருவதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே மோடி அரசு தாக்கல் செய்த எதிர் மனு.

உண்மை என்னவென்றால், அய்.நா. தீர்மானத்துக்கு ஏற்பு வழங்குவதோடு நாடாளுமன்றத்திலும் சித்திர வதைக்கு எதிரான வலிமையான சட்டம் கொண்டு வர வேண்டும்என்று, சட்ட ஆணையம் திட்டவட்டமான பரிந்துரையை வழங்கியிருக்கிறது என்பதுதான்.

ஆனால், ‘மனு சாஸ்திரம் - பகவத்கீதை’யை நீதி நூலாக்கிக் கொண்ட இந்திய பார்ப்பன அரசுகள், அது காங்கிரசானாலும், பா.ஜ.க.வானாலும் காவல்நிலைய இராணுவ முகாம் சித்திரவதைகள் நாட்டில் இருந்தாக வேண்டும். அப்போதுதான் பார்ப்பன-பனியா-பன்னாட்டுக் கம்பெனிகளின் சுரண்டல்களை தங்குதடையின்றி நடத்தக் கூடிய ஒரு அரசை நடத்த முடியும், இஸ்லாமியர், தலித், ஆதிவாசிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் சமூகப் பொருளாதார சுரண்டல்களைத் தொடர முடியும் என்பதில் உறுதியாகவே நிற்கின்றன” என்றார் விடுதலை இராசேந்திரன்.

Pin It