பகுத்தறிவு சிந்தனைகளை திரைப்படங்கள் வழியாக பரப்புவதை தனது இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். தன்னுடைய பணத்தையும் செல்வத்தையும் மக்களுக்கு வாரி வாரி வழங்கிய வள்ளல்.
பெரியார், கலைவாணர் தொண்டு குறித்து இவ்வாறு எழுதினார்:
“இனி என்.எஸ். கிருஷ்ணன் செத்தாலும் சரி, அவர் பணம் காசெல்லாம் நழுவி ‘அன்னக் காவடி கிருஷ்ணன்’ ஆனாலும் சரி, நாடகப் புரட்சி உலகைப் பற்றி சரித்திரம் எழுதப்பட்டால், அட்டைப் பக்கத்தில் கிருஷ்ணன் படம் போடாவிட்டால், அச்சரித்திரமே தீண்டப்படாததாக ஆகிவிடும். (‘குடிஅரசு’ 11.11.1944)
கலைவாணர், பெரியார் பற்றி இவ்வாறு கூறினார்:
“நம் நாட்டைப் பொறுத்தவரையில் செயற்கரிய செய்த பெரியவர்கள் பலர். அவர்களின் வரிசையிலே இடம் பெறத்தக்க ஒரு பெரியார் நமது தலைமுறையில் வாழ்ந்து கொண்டிருப்பது குறித்து நாம் பெருமை கொள்ளலாம். சிந்திப்பதே பாவம் - என்று எளியோரை வலியோர் அர்த்தமில்லாமல் வேத, புராண, இதிகாசங்கள் மூலமாக அடக்கி வருகின்றனர் என்று கருதப்படும் சூழ்ச்சியை இரகசியமாகவோ, தந்திரமாகவோ அல்லாமல் வெளிப்படையாக எதிர்க்கும் யாவரும் சிந்திக்கலாம் என்கிற புதிய பொது நிலையை உண்டு பண்ணி வைத்த ஒரே ஒரு பெரியார் நமது ஈ.வெ.ரா. அவர்கள்தான். பெரியாரை வாழ்த்தாத தமிழன் இருக்க மாட்டான். பெரியாரால் வாழ்த்துப் பெறாத தமிழனும் இருக்க முடியாது.
தமிழகம் பெற்றிருக்கும் பொதுச் செல்வங்களில் அவரும் ஒருவர் - பூப்போன்ற நெஞ்சமுள்ளார் - புகழுக்காகத் தம்போக்கை மாற்றிக் கொள்ள மாட்டார். அவருக்காக வேண்டுமானால் புகழ் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். புனிதமான மனிதர். ‘துணிவு’ என்னும் மூன்றெழுத்து முத்தமிழ்ப் பண்பை மனித உருவில் காண வேண்டுமாயின் அந்த உருவம் ஈ.வெ.ரா. தான். காரணம் வேறு எதுவுமில்லை. அவரது உண்மையில், உயர்ந்த பண்பில், ஒழுக்கத்தில் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை.
இராஜதந்திரிகளையும் கவரும் அளவுக்குப் பொல்லாத அரசியல் மேதை. புரிய முடியாத பெரிய மூளை. பொறுமைமிகும் தலைவர். சுருங்கக் கூற வேண்டுமாயின், தமிழ் இனத்தின் மெய்யான தந்தை. இன்று அன்னாரது பிறந்த தினவிழாவைப் பெருமிதத் துடன் கொண்டாடுகிறோம். வாழ்க பெரியார். ஏனெனில், தமிழனும், அறிவும் இன்னும் எவ்வளவோ வளர வேண்டியிருக்கிறது.” (‘விடுதலை’ 17.9.1959)
1939இல் வெளிவந்த படம் ‘மாணிக்கவாசகர்’. அப்படத்தில் அரண்மனை நிர்வாகியாக நடித்தார் கலை வாணர். மன்னரின் ஆட்சி புரோகிதரின் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டதாக இருந்தது. ஒரு காட்சியில் கலைவாணர் - புரோகிதப் பார்ப்பனரைப் பார்த்து கூறுவார்:
“இதோ பார், இது என்ன தெரியுமா? பேனா. தர்ப்பைப்புல் அல்ல. தொலைச்சுடுவேன் தொலைச்சு” - திரைப்படத்தில் துணிவுடன் புகுத்திய இந்தக் காட்சியைப் பார்த்த அண்ணா, பெரியாரிடம் எடுத்துக் கூற, மகிழ்ச்சி அடைந்த பெரியார், கலைவாணரை நேரில் அழைத்து பாராட்டினார்.
மற்றொரு நிகழ்வு. தமிழ்த் திரையுலகில் தனது இசையால் நடிப்பால் இரசிகர்களைக் கட்டிப் போட்டவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். கலைவாணரின் நெருங்கிய நண்பர். தனது புதிய இல்லத் திறப்பு விழாவுக்கு அக்காலத்தில் ‘கதாகாலட்சேபத்தில்’ (பாடல், உரையாடல் வழியாக கதை சொல்லும் கலை) பிரபலமாக இருந்த சேங்காலிபுரம் அனந்தராமர் தீட்சரை காலட்சேபம் செய்ய பாகவதர் அழைத்தார். “நந்தனார் காலட்சேபத்தை” அவர் மூலம் நடத்த விரும்பினார் பாகவதர். பார்ப்பன தீட்சதர் மறுத்து விட்டார். “கோயில் நிகழ்ச்சிகளுக்கும் ‘பிராமணாள்’ ஆத்து விசேஷங்களுக்கு மட்டுமே நான் போவேன்” என்றார் தீட்சதர். கலைவாணரிடம் இதை பாகவதர் வேதனையோடு தெரிவித்தார். ‘கவலையை விடுங்க; அதே நந்தனார் காலட்சேபத்தை நான் நடத்துகிறேன்’ என்று கூறிய கலைவாணர், கவிஞர் உடுமலை நாராயணகவியுடன் கலந்து ‘கிந்தனார்’ கதைப் பாடலை உருவாக்கி, பாகவதர் இல்லத் திறப்பு விழாவில் நடத்தினார். தீண்டாமை, ஜாதிக் கொடுமைகளை மிகச் சிறப்பாக விளக்கிய அந்த நிகழ்ச்சி, பிறகு நல்லதம்பி திரைப்படத்திலும் காட்சியாக சேர்க்கப்பட்டது. (இத் தகவலை பதிவு செய்தவர் கலைவாணரின் மகன் பொறியாளர் கே. நல்லத்தம்பி)
பொதுவுடைமைக்காரரும் நாத்திகருமான நடிகர் சார்லி சாப்ளினுக்கு இலண்டன் நகரத்தில் சிலை கம்பீரமாக நிற்கிறது. கலைவாணருக்கு தலைநகரில் சிலை நிறுவப்பட்டிருக்கிறது.
(கலைவாணரின் பிறந்த நாள் நவம்பர் 29)